தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களுக்கு எதிராக போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 12 பேர் கொல்லப்பட்டனர். இது பொதுமக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திரையுலகில் ரஜினி, கமல், விஷால் உள்ளிட்டோர் இந்த செயலை வன்மையாக கண்டித்துள்ளனர்.
இது பற்றி ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில், “மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்குத் தமிழக அரசே பொறுப்பு’’ என கூறியுள்ளார்.
இதுபற்றி விஷால் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “இறந்தவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல். போராட்டம் சமூக நோக்கத்துக்காக நடத்தப்படுகிறது. தனிப்பட்ட விஷயங்களுக்காக நடத்தப்படுவது அல்ல. 50,000 மக்கள் சேர்ந்து ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடுகிறார்கள் என்றால் கண்டிப்பாக மக்கள், பொதுஜன நலத்துக்காக தான் போராடுகிறார்கள் .
மரியாதைக்குரிய பிரதமர் கண்டிப்பாக தன்னுடைய அமைதியான மனநிலையை கலைக்க வேண்டிய நேரம் இது. போராட்டம் ஜனநாயகத்தில் ஒன்று. அதில் ஏன் மக்கள் ஈடுபடக்கூடாது. அரசாங்கம் மக்களுக்காக தான். வேறுயாருக்கும் அல்ல. 2019 பற்றி மக்கள் கவனமாக யோசிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
இதுபற்றி கண்டனம் தெரிவித்துள்ள கமல், “அமைதியான முறையில் போராடிக்கொண்டிருந்தவர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது. சட்ட திட்டங்களுக்கு உட்படாமல், உரிமம்கூட இல்லாமல் அந்தப் பகுதியை மாசுபடுத்திக்கொண்டிருக்கும் அந்த ஆலைகளுக்கு ஆதரவாகச் சட்டத்தை ஏவுவது என்பது பொறுக்க முடியாத ஒன்று. வணிக வெற்றிக்காக மனித உயிர்கள் போனாலும் பரவாயில்லை என்ற எண்ணம் கண்டிக்கத்தக்கது. இந்தத் துப்பாக்கிச்சூட்டில் பல்வேறு வயதுடைய 10 பேர் இறந்துள்ளார்கள் என்பதுதான் எனக்கு வந்த செய்தி. அதில், வெனிஸ்டா என்ற பள்ளி மாணவியும் அடக்கம். அவர், தனது தேர்வு முடிவுக்காகக் காத்துக்கொண்டிருந்தவர்
வன்முறை ஏற்பட்டது என்ற ஒரு காரணத்தைக் கூறி, நாங்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினோம் என்ற ஒரு காரணத்தைச் சொல்லப்போகிறார்கள். என்னுடைய கேள்வியெல்லாம் இந்தத் துப்பாக்கிச்சூட்டை நடத்தலாம் என ஆணை பிறப்பித்தவர் யார்? அதைத் துப்பாக்கிச்சூடு வரை கொண்டு போகலாம் என அனுமதி அளித்தது யார்? இது மக்கள் நீதி மய்யத்தின் கேள்வி மட்டுமல்ல; தமிழகத்தின் கேள்வி. இதற்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும். யாராவது ஓர் அதிகாரியைப் பதவி நீக்கம் செய்வது மட்டும் போதாது. மேலிடத்திலிருந்து ஓர் உத்தரவு வராமல் இந்தச் சம்பவம் நடக்க வாய்ப்பில்லை. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற அரச வன்முறையை மக்கள் நீதி மய்யம் வன்மையாகக் கண்டிக்கிறது” என கூறியுள்ளார்.