
கோவை சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பின் அறங்காவலர் சுப்பிரமணியம் (வயது 78) இன்று உயிரிழந்தார்.
இவர் கோவையில் சாந்தி கியர்ஸ் என்ற நிறுவனத்தை 1972 துவங்கி, இயந்திர உதிரி பாகங்களை பல்வேறு நாடுகளுக்கு தயாரித்து கொடுத்து மிக வேகமாக வளர்ச்சியடைந்தவர் சுப்ரமணியம். கடந்த 1996 ம் ஆண்டு சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற அமைப்பினை சுப்பிரமணியம் துவங்கினார். இந்த அமைப்பின் அறங்காவலராக இருந்து வந்தார் சுப்ரமணியம். சாந்தி கியர்ஸ் நிறுவனம் சமீபத்தில் வேறு நிறுவனத்திற்கு விற்கபட்டது.
சாந்தி சோசியல் சர்வீஸ் பணிகளை மட்டும் சுப்பிரமணியம் கவனித்து வந்தார். உணவில் மட்டுமல்ல, கல்வி, பெட்ரோல், டீசல், பார்மஸி, டயாலிஸிஸ் சேவை, ரத்த வங்கி சேவை, கண் கண்ணாடி கடை, ரேடியோலஜி சேவை, ஆய்வு மையம், எரிவாயு எரியூட்டு மையம் என்று சாந்தி கியர்ஸின் சேவைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த நிறுவனத்தில் மருத்துவ ஆய்வகத்தில் எடுக்கப்படும் ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்டவை மற்ற மையங்களைவிட, 50 முதல் 70 சதவிகிதம் குறைவு.
சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பால் இலவச மின்மயானமும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.இத்தகைய சேவைகளை செய்து வந்த சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை சுப்பிரமணியம் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு கோவை மக்கள் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
ரூ 10 க்கு மதிய சாப்பாடும், ரூ. 5 க்கு டிபனும் வழங்கி வந்தார் சுப்ரமணியம்.
வலது கை கொடுப்பது, இடது கைக்குத் தெரியக் கூடாது என்று சொல்வதைப் போல, இதுவரை தன்னை எங்கேயும் சுப்பிரமணியம் அடையாளப்படுத்திக் கொண்டது இல்லை. தற்போதுள்ள, பெரும்பாலான ஊடகங்கள் அவரைச் சந்தித்துப் பேட்டியெடுக்க முயற்சி செய்துவிட்டன. எந்த ஊடகத்தையும் அவர் சந்திக்கவில்லை. அரசு செய்ய வேண்டிய பணிகளை சத்தமே இல்லாமல் செய்து வந்த சுப்பிரமணியம் ஆன்மா சாந்தியடையட்டும்.