
சீமராஜா படத்திற்கு சண்டை பயிற்சி அளித்த அனல் அரசு, அப்படத்தில் பணிபுரிந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.
“ஆம், சிவகார்த்திகேயனுடன் பணிபுரிவதில் உள்ள விசேஷமான ஒரு விஷயம், அவர் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கும் போது குழந்தைகளை மனதில் நினைக்கும் இயல்புடைய ஒரு நடிகர். அவருடன் நான் ஏற்கனவே பணிபுரிந்த ரெமோ மற்றும் வேலைக்காரன் இரண்டுமே என்னுடைய மற்ற திரைப்படங்களுடன் ஒப்பிடும்போது வேறுபட்ட அனுபவமாக இருந்தது.
பல ஹீரோக்கள் வன்முறை மற்றும் இரத்தக்களரி சண்டைக்காட்சிகளை விரும்புகின்றனர். ஆனால் சிவகார்த்திகேயன் குழந்தைகள் மற்றும் குடும்ப பார்வையாளர்களை பார்க்கும் சண்டைக் காட்சிகளை விரும்புபவர். இது அவர் எளிமையான, சாதாரண சண்டையை விரும்புகிறார் என்று அர்த்தமல்ல. அவர் டூப் இல்லாமல் அபாயகரமான சண்டைக் காட்சிகளிலும் முழுமுயற்சியோடு நடிக்கிறார். இது நான் பெயருக்காக சொல்லும் வார்த்தைகள் இல்லை, திரையரங்குகளில் பார்க்கும்போது நீங்களே உணர்வீர்கள்.
சிவகார்த்திகேயன் பற்றிய இன்னொரு சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், சண்டைக் கலைஞர்கள் அவரால் தவறுதலாக காயப்படுத்தப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்கிறார். சில நேரங்களில், எங்கள் குழுவினர் எந்தவித தயக்கமும் இன்றி எங்களை அடிங்க என கேட்கும்போதும், அவர் எதுவும் தவறாக நடக்காது என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறார்” என்றார்.
சீமராஜா படத்தை பற்றி அவர் கூறும்போது, “இந்த திரைப்படம் நல்ல பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டது, ஆனால் சண்டைக காட்சிகள் தான் சவாலாக இருந்தது. சிவகார்த்திகேயனின் உயர்ந்து வரும் நட்சத்திர மதிப்புக்கு ஏற்றவாறும், அதே சமயத்தில் வன்முறை இல்லாமல், ரசிக்கும் விதத்திலும் உருவாக்க முயற்சித்திருக்கிறேன்” என்றார்.
24AM ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா மிகபிரமாண்டமாக் தயாரிக்க, பொன்ராம் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன், சமந்தா, நெப்போலியன், சிம்ரன், சூரி, லால் மற்றும் இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படம் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாக தயாராக உள்ளது.