Spotlightசினிமா

தமிழ் சினிமாவின் No.1 ஸ்டண்ட் மாஸ்டர் ‘Stun சிவா’வுடன் ஒரு நேர்காணல்!

Stun சிவா தமிழ் சினிமா உலகில் இந்தப்பெயருக்கு அறிமுகம் தேவையில்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் 80க்கும் மேலான படங்களில் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றியுள்ளார். “சாம்பியன்” படம் அவரை ஒரு மிகப்பெரும் நடிகராக மாற்றியிருக்கிறது. “வேட்டையாடு விளையாடு”, “கோலி சோடா” படங்களில் நடித்திருந்தாலும் சுசீந்திரனின் “சாம்பியன்” படத்தில் முழு வில்லனாக நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

ஆனந்த விகடன் விருது வாங்கி இந்த ஆண்டின் சிறந்த வில்லனாக கலக்கியிருக்கிறார். தற்போது தன் மகனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். அவருடன் ஒரு நேர்காணலுக்காக சந்தித்தபோது

இனி எப்படி சண்டைப்பயிற்சி இயக்குநரக பணியாற்றுவீர்களா இல்லை நடிப்பு மட்டும் தானா ?

இல்லை இரண்டுமே செய்வேன். சண்டைப்பயிற்சியாளராகவும் பணியாற்றுவேன். நடிக்கும் வாய்ப்பு வந்தாலும் நடிப்பேன்.

உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன், எப்படி சினிமாவுக்குள் வந்தீர்கள் ?

நான் பிறந்து வளர்ந்தது எல்லாமெ சென்னை தான். எனக்கு 15 வயசுலருந்தே படிச்சிட்டே வேலை செய்யனும்கிறது என்னோட ஆர்வம்
10 வது படிக்கும்போதே பைக் மெக்கானிக் கடையில வேலை பார்த்தேன். அங்க ஃபைட்டர்ஸ் எல்லாம் பைக் சரி பண்ண வருவாங்க. அவங்க பழக்கம் மூலமா ஸ்டண்ட் மேல ஆர்வம் வந்தது.

எங்க மாமா எம் ஜி நடராஜன் யூனியன்ல இருந்தாரு. அவர் மூலமா ஸ்டண்ட் யூனியன்ல சேர்ந்தேன். 1989 ல இருந்து சினிமாவுல வேலை செய்திட்டு இருக்கேன். “அன்புக்கட்டளை” ராமராஜன் நடிச்ச படம் தான் முதல் படம் ராம்போ ராஜ்குமார் கூட வேலை பார்த்தேன். அப்பல்லாம் உதவியாளராக ஆகவே 5 வருஷம் ஆகும். நிறைய படங்கள் வேலை பார்த்திருக்கேன் ஸ்டண்ட் மாஸ்டரா 1997 தான் முதல் படம். விஜய் சாரோட லவ் டுடே படம் பண்ணினேன். Stun சிவாங்கிற பேர் அந்தப்படத்தில தான் வந்தது.

ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் மட்டும் தான் அரசியல்வாதிகளுக்கு அப்புறம் அதிக அடைமொழி வச்சிக்கிறாங்க அது ஏன் ?

சூப்பர் சுப்பராயன் மாதிரி ஆரம்பகட்டத்தில இருந்தே அந்த மாதிரி வந்திட்டு இருந்தது. எனக்கு அடைமொழி வைக்கனும்கிற மாதிரி எண்னம் எல்லாம் இருந்தது இல்ல. கே எஸ் ரவிக்குமார் சாரோட முதல்படத்தில இருந்தே எனக்கு அவரைத் தெரியும். அவர் தான் என்னோடபடத்தில பண்ணுறனு சொல்லி உனக்கு ஒரு பேர் இப்பவே வைக்கிறேன்னு சொல்லி stun சிவான்னு பேர் வச்சார்.

இதுவரை எத்தனை படங்கள் பண்ணியிருக்கீங்க ?

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என 80க்கும் அதிகமா படங்கள் பண்ணியிருக்கேன். “கண்ணுக்குள் நிலவு” படத்துக்கு மாநில விருது வாங்கியிருக்கேன். பிதாமகன் படத்துக்கு தேசிய விருது கிடைக்கும்னு எல்லோரும் சொன்னாங்க. ஆனா கிடைக்கல ஆனா கூடிய சீக்கிரம் தேசியவிருது வாங்கிடனும்.

நடிப்புக்குள்ள எப்படி வந்தீங்க ?

சாதாரண ஃபைட்டரா இருக்கும்போதே நடிக்க எனக்கு நிறைய ஆர்வம் இருந்தது. ஷீட்டிங்ல திடீர்னு ஏதாவது ஸீன்ல பத்து பேர் வாங்கனு கூப்பிடுவாங்க. எல்லாரும் ரெடியாக போனா, நான் உதவி இயக்குநர பார்த்து டயலாக் இருக்கானு கேட்டு அத மனப்பாடம் பண்ணி ரெடியா இருப்பேன். மத்தவங்க சொதப்பும்போது நான் பண்றேன்னு சொல்லி கேட்டு வாங்கி நடிப்பேன். அப்பல்லருந்தே நடிப்பு மேல அவ்வளவு ஆர்வம்.

பிதாமகன்ல நடிக்கும்போது விக்ரம் சார மிரட்டுற மாதிரி ஒரு ஸீன் அதுல ரிகர்சல் பண்ணும்போது பாலா நடிக்கிறியானு கேட்டாரு. என்ன அந்த ஸீன்ல நல்லா தெரியிற மாதிரி காட்டினார். அதுக்கப்புறம் கமல் சாரோட “வேட்டையாடு விளையாடு” படத்துல முதல் ஸீன் பண்ணினேன். பெரிய அறிமுகம் அது மூலமா கிடச்சுது. “கோலி சோடா” படத்தில விஜய் மில்டன் கூப்பிட்டு நடிக்க வச்சார். அத பார்த்து தான் சுசீந்திரன் சாம்பியன் படத்தில முழு வில்லனா அறிமுகப்படுத்தினார். இப்ப ஆனந்த விகடன்ல அதுக்கு விருது வாங்கிருக்கேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு. இன்னும் நல்ல இயக்குநர் படத்திலயும் எல்லா நடிகர்களோடவும் படம் பண்ணணும்.

ஸ்டண்ட் மாஸ்டரா என்னென்ன படங்கள் பண்ணிட்டு இருக்கீங்க ?

ஜெயம் ரவியோட “பூமி” படம் அப்புறம் மகிழ் திருமேனி இயக்கத்துல உதயநிதி நடிக்கிற படம் ஒன்னு பண்றேன். தெலுங்கில் மோகன்பாபு சாரோட மகன் படம் ஒன்னு பண்றேன். வி.வி.விநாயக் சார் படம், பெல்லங்கொண்டா சுரேஷ் மகன் சாய் படம் பண்றேன்.

நடிப்புல என்னென்ன படம் ?

தெலுங்கில ரவிதேஜா நடிப்பில “கிராக்” படத்தில வில்லனா கமிட்டாகி நடிச்சிட்டு இருக்கேன்.

இப்ப இயக்குற படம் பற்றி ?

என் பையன் கெவின் ஹீரோவா நடிக்க “கராத்தேக்காரன்” படத்த இப்ப இயக்கிட்டு இருக்கேன். முழுக்க ஆக்‌ஷன் கலந்த படமா இருக்கும்.

உங்க காதல் கதை பற்றி சொல்லுங்களேன் ?

அது பெரிய கதை. அவங்க பேர் லேனி. அவங்க வியட்நாமிஸ். பைக் மெக்கானிக்கா வேலை பார்த்தப்போ சினிமால பைக் ஸீன் மட்டும் நடிக்க வைப்பாங்க. அந்த ஸீன் முடிஞ்சது அனுப்பிடுவாங்க. முறையா ஃபைட் கத்துக்கனும்னு நினைச்சேன். நண்பர் மூலமா ஸ்டன்ட் சொல்லித்தர தன் அப்படிங்கிறவர்கிட்ட சேர்ந்தேன் அவரோட பொண்ணு தான் லேனி காதலாகி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். கெவின் ஸ்டீபன் இரண்டு பசங்க இப்ப மூத்த பையன் ஹீரோவா நடிக்கிறார். இரண்டு பேருக்கும் ஸ்டண்ட் தெரியும் படங்கள்ல எனக்கு உதவியா இருக்காஙக.

அப்ப வியட்நாமிஸ் பேசுவீங்களா ?

இல்ல ஒரு சில வார்த்தைகள் மட்டும் தான் தெரியும். வீட்டில் லேனி நல்லா தமிழ் பேசுவாங்க. அவங்களோட தாத்தா இந்தியன் இங்க இருந்தவர் தான். இங்க பரம்பரையா இருந்தவங்க அவங்க. காரைக்குடில இருந்தவங்க.

ஸ்டண்ட் ஸீன்ஸ் ஒவ்வொரு மொழியிலும் வேறவேற மாதிரி எடுப்பீங்களா என்ன வித்தியாசம் ?

தமிழ், தெலுங்கு இரண்டுக்குமே நிறைய வித்தியாசம் இருக்கு. ஒரு ஸ்கிரிப்ட் தான் ஃபைட் எப்படினு முடிவு பண்ணும். தெலுங்கு படத்தில அடிச்சா கதவ உடச்சட்டு வெளில பறந்து விழுவாங்க. தமிழ்ல அப்படி கிடையாது. திரைக்கதைதான் எல்லாத்தையும் தீர்மானிக்குது.

ஸ்டண்ட் ஏன் தத்ரூபமா இருக்கிறதே இல்ல ?

அப்படி கிடையாது நான் பண்ணின எந்தப்படம் வேணாலும் எடுத்துக்கங்க ஒரிஜினலா இருக்கும். தெலுங்கு படமாவே இருந்தாலும் தத்ரூபமா இருக்குற மாதிரி தான் பண்ணுவேன். பிதா மகன் பார்த்தா தெரியும் அந்தப்படத்தில ஹீரோ வெட்டியான் அவன் அடிச்சா எப்படி இருக்குமோ, அது மாதிரி பண்ணிருப்பேன் ஆனா எல்லாப்படத்திலயும் அதப்பண்ண முடியாது. கதை என்ன கேட்குதோ அதுக்குள்ள எப்படி பண்ணனுமோ அதத்தான் பண்ண முடியும்.

பிதாமகன் படத்தில விக்ரம் சங்கீதா கிட்ட துடப்பத்துல அடி வாங்குவாரே, அது நீங்க எடுத்துததுதானா?

ஆமா அத நான் தான் எடுத்தேன் அதுல ஒரிஜினல் துடப்பத்துல முகத்திலயே அடிப்பாங்க. அத எடுக்கும் போது எங்களுக்கே ரொம்ப கஷ்டமா இருந்தது. ஸீனவிட ஒரு நடிகனுக்கு முகத்தில தொடர்ந்து அடி விழும்போது என்ன ஆகும். ஆனா விக்ரம் சலிக்கவே இல்ல. பாலாவுக்கு எல்லாம் ஒரிஜனலா இருக்கணும். சண்டை எல்லாமே நேச்சுரலா இருக்கணும் யாரும் கொஞ்ச காலத்துக்கு அந்த மாதிரி முயற்சி கூட பண்ணக்கூடாதுனு முடிவு பண்ணி பண்ணின படம் தான் பிதாமகன்.

எந்த ஹீரோ நல்லா ஃபைட் பண்ணுவாரு ?

ஃபைட் பண்ணத்தெரியாத ஹீரோவ கூட ஃபைட் பண்ண வைக்கிறது தான் ஸ்டண்ட் மாஸ்டர் வேலை. என்ன பொறுத்தவரை எல்லா ஹீரோவும் நல்லாவே ஃபைட் பண்ணுவாங்க. நாம அவங்களுக்கு தேவையான பாதுகாப்பு செய்து கொடுத்தோம்னா போதும். எல்லா ஹீரோவுக்கும் ஃபைட்னா பிடிக்கும் ஃபைட் பண்ண ஆர்வமா இருப்பாங்க.

இப்ப படங்கள்ல ஹாலிவுட் ஸ்டண்ட் கோரியோகிராபர் பண்றாங்க இத பற்றி என்ன நினைக்கிறாங்க ?

நான் கூட நிறைய வெளினாடுகள்ல போய் படம் பண்ணிருக்கேன். தமிழ் “பில்லா” தெலுங்குல பிரபாஸ் வச்சு எடுத்தப்ப நான் தான் வெளிநாட்ல நடக்கிற ஆக்‌ஷன் காட்சிகள் எல்லாம் பண்ணேன். தமிழ் பில்லா படத்த வாங்னு ஒரு வெளிநாட்டுக்கார் பண்ணி இருந்தார். அவர விட நான் நல்லாவே பண்ணிருந்தேன். அவங்கள பொறுத்தவர அவங்க கிட்ட நிறைய உபகரணங்கள் இருக்கும். அவங்க நல்லாவே ஃபைட் கோரியோகிராப் பண்ணுவாங்க. ஆனா அவங்க நம்ம ஹீரொவோட மாஸ் கதை புரிஞ்சு பண்ண மாட்டாங்க. அத நாம மட்டும் தான் பண்ண முடியும்.

தெரியாத ஹீரோவுக்கு ஃபைட் சொல்லிக் கொடுத்து அவர்கிட்ட அடி வாங்கிற மாதிரி பண்ணும்போது நாம ஹீரோவாகலாம்னு தோணிருக்கா ?

அப்படி நினைச்சதில்ல. ஆரம்பகாலங்கள்ல எல்லாருக்கும் தோணலாம். ஆனா ஒரு ஃபைட் மாஸ்டர் வேலையே ஹீரோவ டிரெய்ன் பண்றதுதான். ஒரு இயக்குநர் கஷ்டப்பட்டு ஒரு படத்தை உருவாக்கும்போது அவர் கூட்டி வர்ற ஹீரோவ நம்ம எப்படி டிரெய்ன் பண்ணி மாஸா காட்டுறோம்கிறது தான் நம்ம வேலை.

ஃபைட் பண்ணும்போது அடிபட்டா அதற்கான சரியான நிவாரணங்கள் இன்ஷ்யூரன்ஸ் எல்லாம் இருக்கா ?

ஃபைட் பொறுத்தவரை இன்ஷ்யூரன்ஸ் கிடையாது. ஆனா எங்க யூனியன்ல அத பண்றோம். அப்புறம் அந்த பட தயாரிப்பாளர் இயக்குநர், ஹீரோக்கள் எல்லோருமே பார்த்துப்பாங்க. விஜய் சார் கூட ஒரு படத்தில ஒரு ஃபைட்டருக்கு 1 1/2 லட்சம் கொடுத்தாரு. எங்க யூனியன்ல மூலமா அடிபடறவருக்கு தேவையான எல்லாமே பார்த்துக்கிறோம்.

அடுத்து என்ன திட்டங்கள் ?

என் பசங்க கெவின், ஸ்டீபன் ரெண்டு பேரும் ஸ்டண்ட் யூனியன் மெம்பர இருக்காங்க. அவங்க படம் பண்ணனும். இப்ப இவங்க என்னோட படங்கள்ல உதவியா இருக்காங்க. இவங்க இருக்கும்போது நிறைய யூத்தோட ஐடியா கிடைக்குது. “பூமி” படத்தில மூணு பேரும் சேர்ந்து புதுசா பண்ணிருக்கோம். ஸ்டீபன் யூத் ஒலிம்பிக் தேர்வில இந்தியா சார்பா அவர் மட்டும் தான் கராத்தேவுக்காக தேர்வாகியிருந்தார். நிறைய திறமை இருக்கு. இவங்களோட இணைஞ்சு இன்னும் ஆக்‌ஷன்ல நிறைய புதுமையா பண்ணனும்.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close
Close