
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள ‘சீன்’ (Scene) திரைப்படத்தின் முதல் பிரம்மாண்ட விளம்பர நிகழ்ச்சி துபாயில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சூர்யா நடித்துள்ள ‘டி.எஸ்.பி. இன்பராஜ்’ கதாபாத்திரத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டது.
ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2டி என்டர்டெய்ன்மென்ட் சார்பில் ஜோதிகா – சூர்யா தயாரித்துள்ள இப்படத்தில் நஸ்ரியா நஜீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ள இப்படம் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகிறது.
துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சூர்யா, நஸ்ரியா, நஸ்லென், இயக்குநர் ஜித்து மாதவன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஜித்து மாதவன், படத்தின் கதையை கேட்ட ஐந்து நிமிடங்களிலேயே சூர்யா சிரிக்கத் தொடங்கியதாகவும், அப்போதே அவருக்குக் கதை பிடித்துவிட்டதை உணர்ந்ததாகவும் தெரிவித்தார்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் மீண்டும் நடித்துள்ள நஸ்ரியா, ‘சீன்’ திரைப்படம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நஸ்லென், சூர்யாவுடன் நடித்தது தனது கனவு நனவான தருணம் என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, “சீன் படத்தை கிரைம் திரில்லர் என்றும், மர்டர் மிஸ்டரி என்றும் சொல்லலாம். அதே நேரத்தில் இது ஒரு முழுமையான ஃபேமிலி என்டர்டெய்னராகவும் இருக்கும்” எனத் தெரிவித்தார்.
மேலும், தனது 28 ஆண்டுகால திரைப்பயணத்தில் 48 திரைப்படங்களை நிறைவு செய்துள்ள நிலையில், ‘சீன்’ திரைப்பட அனுபவம் மிகவும் புத்துணர்ச்சியாக இருந்ததாகக் கூறினார்.
ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனம் புதிய இளம் திறமைசாலிகளுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் சூர்யா தெரிவித்தார்.
வித்தியாசமான கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ள ‘சீன்’ திரைப்படம் நவம்பர் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.




