
ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, கருணாகரன், இளவரசு, தம்பி ராமையா, நாசர், சின்னி ஜெயந்த், வடிவுக்கரசி, கிரேஸி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த திரு. மாணிக்கம்.படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சுகுமார். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கும் இப்படத்தினை GPRK CINEMAS நிறுவனம் தயாரித்திருக்கிறது.
கதைக்குள் பயணிக்கலாம்…
தமிழக – கேரள எல்லைப் பகுதியான குமுளி தான் படத்தின் கதைக்களம். அங்கு ஒரு லாட்டரி கடை நடத்தி தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் சமுத்திரக்கனி.
இவருக்கு மனைவியாக வருபவர் அனன்யா. இவர்களுக்கு இரண்டு மகள்கள். இரண்டாவது பெண் மகளுக்கு பேச்சு சரிவர வராததால், அவருக்கு ஆபரேஷன் பண்ண வேண்டிய சூழல். ஆப்ரேஷனுக்கு பல லட்சம் ரூபாய் ஆகுமென மருத்துவர்கள் கூறி விடுகின்றனர்.
தனது மகளை வரதட்சணை கேட்டு நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல், வீட்டிற்கு திருப்பி விட்டதை நினைத்து கண்கலங்கி நிற்கிறார் பாரதிராஜா. அப்போது, தனக்கு அதிர்ஷடமாவது அடிக்கட்டும் என சமுத்திரக்கனியின் கடையில் லாட்டரி ஒன்றை வாங்குகிறார். ஆனால், அதை வாங்குவதற்கு பணம் இல்லாததால், பணத்தைக் கொடுத்து அந்த லாட்டரியை வாங்கிக் கொள்வதாகவும் அதை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறி சென்று விடுகிறார் பாரதிராஜா.
சமுத்திரக்கனியும் அப்படியே செய்ய, எடுத்து வைத்த லாட்டரிக்கு ஒன்றரை கோடி ரூபாய் பம்பர் விழுகிறது. நேர்மையை தனது உயிராக வைத்திருக்கும் சமுத்திரக்கனி, அந்த லாட்டரியை எடுத்துக் கொண்டு யாரென்றே தெரியாத பாரதிராஜாவை தேடிச் செல்கிறார்.
இதை அறிந்த அனன்யா, குடும்ப கஷ்டத்தை வைத்து அப்பணம் நமக்கு தான் சொந்தம் என வாதமிட, தொடர்ந்து உறவினர்களும் சமுத்திரக்கனிக்கு நெருக்கடி கொடுக்க, யார் பேச்சையும் கேட்காமல் பாரதிராஜாவை தேடிச் செல்கிறார் சமுத்திரக்கனி.
இறுதியில் சமுத்திரக்கனியின் நேர்மை வென்றதா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் சமுத்திரக்கனி, மாணிக்கம் என்ற கதாபாத்திரத்தை தனது உள்ளோட்டமாக நினைத்து ஏற்று நடித்திருக்கிறார். ஒரு குடும்பஸ்தனாக இருக்கும் போதாக இருக்கட்டும், தனது மகள்கள் மீது வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் இடத்திலாக இருக்கட்டும், எந்த இடத்திலும் தனது நேர்மையை விட்டுக் கொடுக்காத பண்பாக இருக்கட்டும் என பல இடங்களில் கைதட்டல் கொடுக்கும் நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
சமுத்திரக்கனியின் மனைவியாக அனன்யா பொருத்தமாக நடித்திருந்தாலும், ஒரு சில இடங்களில் ஓவர் ஆக்டிங்கை கொடுக்காமல் இல்லை. அதிலும் பாரதிராஜா கொஞ்சம் இல்ல ரொம்பவே ஓவர் ஆக்டிங் கொடுத்திருக்கிறார்.
இப்படத்தில் தம்பி ராமையாவை எதற்காக படத்தில் சேர்த்தார்கள் என்று தெரியவில்லை.. இவர் வரும் காட்சிகள் எல்லாம் எரிச்சல் தான். இவருடைய கதாபாத்திரம் படத்திற்கு எந்த வகையிலும் பயன்படவில்லை என்று தெரிந்தும் இயக்குனர் ஏன் இந்த காட்சிகளை வைத்தார் என்று தெரியவில்லை.
படத்தில் மற்ற கதாபாத்திரங்களான நாசர், கருணாகரன், சின்னி ஜெயந்த், வடிவுக்கரசி என படத்தில் நடித்த நடிகர்கள் தங்களது கேரக்டர்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.




