
அறிமுக இயக்குனர் ஃபெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, இயக்குனர்கள் பாக்கியராஜ், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் OTT தளத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் ‘பொன்மகள் வந்தாள்’.
OTT தளத்தில் படம் வெளியாவதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தடைகளை தாண்டி இன்று அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது.
விமர்சனம்:
கதைப்படி, ஊட்டியில் ஜோதி என்ற பெண் ஒரு குழந்தையை கடத்திச் செல்லும் போது, அதை தடுக்க வந்த இரு இளைஞர்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விடுகிறார். கொடூர கொலைகாரி ஜோதியை கைது செய்யுமாறு தமிழகம் முழுவதும் கோரிக்கை வலுக்கிறது.
ஜோதியின் வீட்டைச் சுற்றி பல குழந்தைகளின் சடலங்களையும் போலீஸார் கைப்பற்ற்றுகின்றனர். இந்நிலையில், ஜோதியை போலீஸார் என்கவுண்டர் செய்து விடுகின்றனர். இந்த வழக்கு அப்போது ம்டித்து வைக்கப்பட்டுவிடுகிறது.
சுமார், 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘ஜோதி’ வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது. இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று பாக்யராஜ் மனு செய்கிறார். ஜோதிக்கு ஆதரவாக வக்கீலாக வரும் வெண்பா (ஜோதிகா) வாதாட வருகிறார்.
எதற்காக ஒரு கொடூர கொலைகாரிக்காக ஜோதிகா வாதாட வேண்டும்..??? ஜோதிக்கு என்ன தான் நடந்தது..?? ஜோதிகா யார்..?? என்ற பல கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் பதிலளித்திருக்கிறார் இயக்குனர் ஃபெட்ரிக்.
ஜோதிகா, வென்பாவாக படம் முழுவதும் வாழ்ந்திருக்கிறார். நீதிமன்றத்தில் நீதிக்காக வாதாடும் காட்சியாக இருக்கட்டும், பெண் குழந்தைகள் பாலியல் கொடுமையை பற்றி கூறும் போதாக இருக்கட்டும் பார்ப்பவர்களின் கண்களின் ஓரத்தில் ஈரத்தை எட்டி பார்க்க வைத்துவிடுகிறார். நாட்டில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை சுட்டிக் காட்டி அவர்களின் வேதனைகளை நம் கண் முன்னே நிறுத்திவிட்டார்.
எதிர்நின்று வாதாடும் வக்கீலாக ஜாம்பவான் பார்த்திபன், வழக்கம்போல் தனது வார்த்தை அம்புகளை கனக்கச்சிதமாக வீசியிருக்கிறார். யதார்த்தமான நடிப்பு.
வெண்பாவின் தந்தையாக பாக்யராஜ், நீதிபதியாக பிரதாப் போத்தன், இவருக்கு உதவியாக வரும் பாண்டியராஜன், ஊருக்குள் நல்லவராக வரும் வில்லன் தியாகராஜன் உள்ளிட்ட அனைவரும் படத்திற்கு சரியான கதாபாத்திர தேர்வு…
தனது பேச்சிலும், கண் பார்வையிலும் வில்லத்தனத்தை நிலைநிறுத்திய தியாகராஜனுக்கு கூடுதல் சல்யூட்.
பெண் குழந்தைகளை பெற்ற அனைத்து பெற்றோர்களும் கட்டாயம் பார்க்க வேண்டியவளாக வீடு தேடி வந்திருக்கிறார் இந்த ‘பொன்மகள்’.
தினசரி, நாளிதழில் துண்டு செய்தியாக வந்து செல்லும் அளவிற்கு நாட்டில் பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை நடந்த வண்ணம் உள்ளது. இதற்கு ஒரு முடிவு எப்போது.?
வீட்டில் எது ’Bad Touch, எது Good Touch’ என்று பெண் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கும் பெற்றோர்கள், ஆண் குழந்தைகளுக்கும் பெண்களை எப்படி பார்க்கணும், எப்படி மதிக்கணும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.
மிக அழகான கதையை மிகவும் நேர்த்தியாக நகர்த்தி சென்றிருக்கிறார் ஃபெட்ரிக். கதையின் நகர்வில் சற்று வேகத்தை ஏற்படுத்தியிருக்கலாம். சொல்ல வந்த கருத்தை, எடுத்த கருவை கச்சிதமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
ராம்ஜியின் ஒளிப்பதிவு ஊட்டியை மிகவும் அழகாக காட்டியிருக்கிறது. நீதிமன்ற காட்சியையும் அழகுபடுத்தியுள்ளது.
கோவிந்த் வசந்தாவின் இசையில், பின்னனி இசை கதை நகர்வோடு பயணம் புரிய வைத்துள்ளது. மனதை வருடும் இசையை கொடுத்துள்ளார் இசையமைப்பாளர்..
வீட்டில் இருந்து குடும்பத்தோடு பார்க்க வேண்டிய, பார்க்கக் கூடிய படமாக வந்திருக்கிறது ‘பொன்மகள் வந்தாள்’.
பொன்மகள் வந்தாள் – பொன்மகள் கொண்டாடப்பட வேண்டியவள்…





