Spotlightவிமர்சனங்கள்

2K லவ் ஸ்டோரி – விமர்சனம் 3.25/5

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஜகாவீர், மீனாட்சி கோவிந்தராஜ், லத்திகா பாலமுருகன், பால சரவணன், சிங்கம்புலி, ஜெயபிரகாஷ், ஆண்டனி பாக்யராஜ், ஜி பி முத்து, வினோதினி உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் இந்த ”2K லவ் ஸ்டோரி”.

படத்திற்கு ஆனந்த கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். டி இமான் இசையமைத்திருக்கிறார்.

விக்னேஷ் சுப்ரமணியன் என்பவர் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

கதைக்குள் பயணிக்கலாம்,

கோயம்புத்தூர் பகுதியை மையமாக வைத்து கதை நகர்கிறது. சிறுவயதிலிருந்தே ஜகாவீர் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜ் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

இருவரும் இணைந்து யூ டியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் நடித்து பிரபலமாகின்றனர். தொடர்ந்து, இருவரும் தங்களது நண்பர்களோடு இணைந்து ப்ரீ வெட்டிங் ஷூட் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.

கல்லூரியில் படித்து வரும் லத்திகா பாலமுருகன், ஜகாவீரிடம் தனது காதலை தெரிவிக்கிறார். ஜகாவீர் ஓகே சொன்னாலும், மீனாட்சி ஓகே சொன்னால் மட்டுமே தான் உன்னை காதலிக்க முடியும் என்று கூறிவிடுகிறார்.

மீனாட்சி இவர்களின் காதலுக்கு பச்சைக் கொடி காட்ட,ஜகாவீரும் லத்திகாவும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். சில நாட்கள் காதல் நல்லபடியாக சென்று கொண்டிருக்கும் வேலையில், மீனாட்சிக்கு சிறிய பொசசிவ் வர ஆரம்பிக்கிறது.

இத்தனை வருடமாக தன்னுடனே இருந்த ஜகாவீர், தன்னை விட்டு வேறொரு பெண்ணுடன் நேரத்தை செலவழிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாத மீனாட்சி கோபமடைகிறார்.

இதனால், ஜகாவீர் – லத்திகா காதலில் மோதல் வெடிக்கிறது. அதன்பிறகு, இவர்களின் காதல் என்னவானது.? ஜகாவீர் – மீனாட்சி இவர்களின் நட்பு இறுதிவரை நட்பாகவே நீடித்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் ஜகாவீர். தனது கேரக்டரை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார். முதல் படம் என்பது போல் இல்லாமல், நல்லதொரு நடிப்பைக் கொடுத்து அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார் ஜகாவீர். ஒரு சில இடங்களில் ஓவர் ஆக்டிங் இருந்ததை சற்று கவனித்திருக்கலாம்.

நாயகி மீனாட்சி தனது கேரக்டருக்கு உயிர் சேர்த்திருக்கிறார். கண்களால் பல இடங்களில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மற்றொரு நாயகியான லத்திகா பாலமுருகன் பல இடங்களில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.

காதல், நட்பு இரண்டையும் வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். ஆண் – பெண் நட்பு கடைசி வரை நட்பாக தொடர முடியாது என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது. நிகழ்காலத்தில் அதிலும் 2கே காலத்தில் நட்பானது காதலில் தான் முடியும் என்றும் கூறி வருகிறார்கள்.

அது அப்படியானதாக இல்லை, நிகழ்கால இளைஞர்கள் நட்பையும் காதலையும் எந்த இடத்தில் வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் வைத்து அழகாக தங்களது வாழ்க்கையில் பயணித்து வருகின்றனர் என்பதை வெளிச்சமாக காட்டியிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.

டி இமானின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைத்திருக்கின்றன. பின்னணி இசையும் பலமாக தான் இருந்தது.

ஒளிப்பதிவு காட்சிகள் அனைத்தையும் ரசிக்க வைத்திருக்கிறது.

2K லவ் ஸ்டோரி – 2K ப்ரண்ட்ஷிப் ஸ்டோரி..

Facebook Comments

Related Articles

Back to top button