
ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாச்சலேஸ்வரன் PA , பெளசி இவர்களின் நடிப்பில் ஸ்வினத் எஸ். சுகுமாரின் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் தயாரிப்பில் பாலாஜி சுப்ரமணியம் அவர்களின் ஒளிப்பதிவுல் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “ஸ்வீட் ஹார்ட்”.
இப்படத்தினை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்திருக்கிறார்.
கதைக்குள் பயணித்துவிடலாம்…
கதையின் நாயகனான ரியோ ராஜ், சிறுவயதிலேயே தனது தாயை பிரிந்து விட்டதால் தாயின் பாசத்திற்காக ஏங்கி நின்றவர். இந்நிலையில், நாயகியான கோபிகாவும் ரியோவும் காதலிக்கிறார்கள்.
திருமணத்தை தொடர்ந்து தள்ளிக் கொண்டே செல்கிறார் ரியோ. இதனால் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு நிலவ, இருவரும் பிரிகிறார்கள்.
பிரிந்த இரண்டு மாதத்தில், தான் கர்ப்பமாக இருப்பதாக ரியோவிடம் கூறுகிறார் கோபிகா. அதிர்ச்சியாகும் ரியோ, கருவை கலைக்க என்ன செய்ய வேண்டுமோ அதற்கான முன்னெடுப்புகளை செய்கிறார்.
ஆனால், கருவை கலைக்க கோபிகாவிற்கு விருப்பமில்லை. கோபிகாவின் காதல் வீட்டிற்கு தெரிந்த காரணத்தால், அவர் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல்.
இறுதியில், ஒரு கருவின் மகத்துவத்தை ரியோ புரிந்து கொண்டாரா இல்லையா.?? ரியோ-கோபிகா ஜோடி கைகூடியதா இல்லையா.? என்பதே படத்தின் மீதிக் கதை.
ஜோ படத்தில் கொடுத்த அதே நடிப்பை இப்படத்திலும் கொடுத்து ரசிகர்களின் மனதில் ஆழமாக நடிகனாக பதிந்திருக்கிறார் நாயகன் ரியோ ராஜ். இவரின் கதைத் தேர்வும் பாராட்டும்படியாக இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி. காதல் கொள்வதில் ஆரம்பித்து, மாட்டிக் கொண்டு முழிப்பது, குழந்தையை கையில் ஏந்தும் போது அழும் காட்சி என படத்தில் அநேக இடங்களில் தனது நடிப்பின் திறமையை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார் ரியோ.
நாயகி கோபிகா ரமேஷ், அழகாக காட்சிகளை நகர்த்தியிருக்கிறார். வீட்டிற்குள்ளே செல்போன்களை திருடி காதலனிடம் பேசும் காட்சி, தனது தந்தையிடம் தான் கர்ப்பமாக இருப்பதாக சொல்லும் காட்சி என தனக்கான நடிப்பை கொடுத்து நன்றாகவே ஸ்கோர் செய்துவிட்டார் நாயகி கோபிகா.
காமெடி கதாபாத்திரத்தில் நடித்து காட்சிகளை கலகலப்பாக நகர்த்தி சென்றிருக்கிறார் நடிகர் அருணாச்சலேஸ்வரர்.
சின்ன சின்ன கதாபாத்திரங்களில் சில படங்களில் நடித்த இவருக்கு இப்படம், அவரது சினிமா கேரியரில் முக்கியமான படமாக அமைந்திருக்கிறது. இவருடன் ஜோடி சேர்ந்த பெளசி அழகிலும் நடிப்பிலும் நம்மை நன்றாகவே கவர்கிறார்.
ஒரு மெல்லிய கோடு போல, இக்கதையை கையிலெடுத்து அதை திறம்பட கையாண்டிருக்கிறார் இயக்குனர். தான் கூற வந்ததை சரியாக கூறிச் சென்றிருக்கிறார் இயக்குனர்.
அதிகப்படியான நடிகர்கள் இல்லாமல், சண்டைக் காட்சியும் இல்லாமல், ஒரு நீட்’டான படத்தை படைத்திருக்கிறார் இயக்குனர்.
ஒரு தாயின் அருமையும் ஒரு குழந்தையின் அருமையும் குறித்து சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். குழந்தையை ரியோ கையில் ஏந்தும் காட்சியும் பின்னணி இசையும் சேர்ந்து படம் பார்ப்பவர்களை கண்ணீர் சிந்த வைத்திருக்கிறது.
பாடல்கள் கேட்க ரகமாக இருக்கிறது. பின்னணி இசையும் தனது யூனிக்கை கொடுத்துவிட்டார் யுவன். பாலாஜி சுப்ரமணியம் அவர்களின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக காட்சிகளை கொடுத்திருக்கிறது.





