
Ameen Barif அவர்களின் எழுத்து மற்றும் இயக்கத்தில் நடிகர்கள் முனீஷ்காந்த், சுபாஷ் செல்வம், ராஜேஷ் மாதவன் மற்றும் வின்சு ரச்சேல் சாம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் இணையத் தொடர் தான் இந்த காக்கி சர்க்கஸ்.
லோக்கல் சிறைச்சாலை ஒன்றில் வார்டனாக இருக்கிறார் முனீஷ்காந்த். அங்கு வரும் கைதிகள் அனைவருக்கும் தான் எழுதிய புத்தகங்களை கொடுத்து, படிக்க வேண்டும் என்று கட்டளை இடுகிறார்.
இதனால், வேறு வழியின்றி அனைவரும் அந்த புத்தகங்களை வாங்கி படிக்கின்றனர். அதே சமயம், அந்த சிறைச்சாலைக்குள் ஒரு அம்மன் சிலை இருக்கிறது. அந்த சிலைக்குக் கீழே இருக்கும் உண்டியலில் வரும் கைதிகள் அனைவரும் காசு போட வேண்டும் என்றும் கூறுகிறார்கள். உண்டியல் நிரம்பியதும் ஊர்காரர்கள் அந்த பணத்தை எடுத்துச் சென்று விடுவார்கள். இதுதான் பல வருட வழக்கமாக இருந்து வருகிறது.
அதே சிறையில் போலீஸாக பணிபுரிந்துவருகிறார் கதையின் நாயகனான சுபாஷ் செல்வம். சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்பவர்களை அவ்வப்போது பிடித்து ஜெயிலில் அடைக்கிறார் சுபாஷ் செல்வம்.
இந்நிலையில், சிறைக்குள் இருக்கும் உண்டியல் பணத்தை மட்டும் யாரோ திருடிச் சென்று விட, அதிர்ச்சியாகின்றனர் முனிஷ்காந்தும் சுபாஷ் செல்வமும்.
உண்டியல் பணம் திருடு போய்விட்டது என்றால், சிறைச்சாலைக்கும் அவப்பெயர் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், ஊர் மக்கள் முன்னிலையிலும் தலைகுணிவு ஏற்பட்டு விடுமே என்று பணத்தைத் திருடிய குற்றவாளியை தேட ஆரம்பிக்கின்றனர்.
இறுதியில், உண்டியல் பணத்தை திருடிய அந்த திருடனை சுபாஷ் செல்வம் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே இந்த தொடரின் மீதிக் கதை.
இந்த கதையின் நாயகனாக படம் முழுவதும் வந்திருக்கிறார் சுபாஷ் செல்வம். திட்டம் இரண்டு என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சுபாஷ் செல்வம், இந்த படத்தில் முழு நேர ஹீரோவாக வந்திருக்கிறார். கதைக்கு என்ன தேவையோ கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை அழகாக செய்து முடித்திருந்தார் சுபாஷ் செல்வம்.
பல படங்களில் நடித்த ஒரு அனுபவ நடிப்பை மிகவும் இயல்பாக கொடுத்திருக்கிறார் முனிஷ்காந்த். க்ளைமாக்ஸ் காட்சிகளில் சற்று கண்கலங்க வைத்தாலும், மீண்டும் கலகலக்க வைத்துவிடுகிறார் முனிஷ்காந்த். இந்த கதாபாத்திரத்திற்கு இவரை விட்டால் வேறு யார் இருக்கிறார் என்று கூறும் அளவிற்கு மிகவும் பொருத்தமாக பொருந்தியிருந்தார் முனிஷ்காந்த்.
அழகு தேவதையாக வந்து செல்கிறார் வின்சு ரச்சேல் சாம். சின்ன சின்ன இடங்களில் கூட, அழகோடு நடிப்பிலும் நன்றாகவே நம்மை கவர்கிறார்.
மலையாளத்தில் அனைவராலும் அறியப்பட்ட நடிகரான ராஜேஷ் மாதவன், இந்த படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதிலும், ஒரு காட்சியில் தனது ஈகோவை சீண்டிப் பார்த்துவிட்டார்கள் என்று நடந்து வரும் காட்சிகளில் மாஸ் காட்டிவிடுகிறார்.
பின்னணி இசை படத்திற்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது. ஒளிப்பதிவும் பெரிய பங்கை ஆற்றியிருக்கிறது.
டப்பிங் ஆங்காங்கே சற்று நான் சிங் இருந்ததை பார்க்க முடிந்தது. அதை சற்று கவனித்திருந்திருக்கலாம்.
தொடர் முழுவதும் காமெடிக்கான இடங்கள் முழுக்க முழுக்க இருந்தும் அதனை இயக்குனர் சரிவர பயன்படுத்தவில்லையோ என்று தான் தோன்றியது. ஒரு சில இடங்கள் மட்டுமே காமெடி ஒர்க் அவுட் ஆகியுள்ளது. பல இடங்களில் ட்ரை ஆகத் தான் இருக்கிறது.
பரபரப்பை ஏற்றி, இன்னும் சுவாரஸ்யத்தை கூட்டியிருந்தால் காக்கி சர்க்கஸ், படு ஜோராக இருந்திருக்கும்..
Rating : 2.5/5



