
இயக்கம்: ஆண்ட்ரூ பாண்டியன்
நடிகர்கள்: விக்னேஷ், மனிஷா ஜஷ்னானி, ஜான் விஜய், ஒய் ஜி மகேந்திரன், ஜான் விஜய், நாசர், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர்
இசை: சந்தோஷ் ராம்
ஒளிப்பதிவு: தேவ சூர்யா
தயாரிப்பு: ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ்
கதைப்படி,
2047 ஆம் ஆண்டு காலகட்டத்தில் படம் ஆரம்பிக்கிறது. கதையின் நாயகனான விக்னேஷ், இந்திய அரசாங்கத்தின் சீக்ரெட் ஏஜெண்டாக பணிபுரிகிறார்.
மால்கம் டைனஸ்டி என்றவொரு படை பலம் கொண்ட அமைப்பு உலகத்தை தன் கட்டுக்குள் கொண்டு வர முயல்கிறது. அதற்காக, இந்தியாவை டார்கெட் செய்கிறது.
மால்கம் டைனஸ்டியின் தலைவரான தலைவாசல் விஜய், இந்தியா மீது பல லட்சம் கோடி வரி விதிக்கிறார். வரி கொடுக்கவில்லை என்றால் உலகமெங்கும் இருக்கும் இந்தியர்கள் உட்பட அனைத்து இந்தியர்களையும் கொன்று விடுவதாக மிரட்டுகிறார்.
இந்த மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சாது, துணிந்து நிற்கிறது இந்திய அரசாங்கம். மால்கம் டைனஸ்டியை ஒழிக்க ரெட் ஃப்ளவர் என்றவொரு ஆபரேஷனை கையில் எடுக்கிறது இந்திய அரசாங்கம்.
இறுதியில் ரெட் ஃப்ளவர் என்றால் என்ன.? மால்கம் டைனஸ்டியை இந்தியா எப்படி எதிர்கொண்டது.?? இந்த ஆப்ரேஷனில் விக்னேஷ் என்ன செய்தார்.?? ? என்பதே படத்தின் மீதிக் கதை.
படத்தின் கதை ஆரம்பிக்கும் போது, உரத்த குரலில் ஒருவர் பேச ஆரம்பிக்க, படம் ஹாலிவுட் தரத்திற்கு இருக்கிறதே என்று நம்பி சீட்டின் நுனியில் அமர ஆரம்பித்த சிறிது நேரத்திலே தலையில் கைவைக்க வைத்துவிட்டார் இயக்குனர்.
படம் முழுக்க முழுக்க யாரையாவது கொன்று கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் எங்கு செல்கிறார்கள்.? எதற்காக கண்ணில் படுபவர்களையெல்லாம் கொல்கிறார்கள் என்று தலை முதல் கால் வரை எதுவும் புரியவே இல்லை.
படம் முழுவதும் கண்ணாடி அணிந்து வந்து, கான்கிரீட்டால் செய்து உடல் போல் எந்த அசைவுமின்றி வந்து செல்கிறார் விக்னேஷ். ஒரு சில இடங்களில் கான்கிரீட் சரியாக செட் ஆகவில்லை போலும், அந்த இடங்களில் மட்டும் சற்று நடிப்பு தென்பட்டு செல்கிறது.
கதையின் நாயகியான மனிஷா, அழகாலும் கவர்ச்சியாலும் ரசிகர்களை நன்றாகவே கவர்ந்திருக்கிறார். க்ளைமாக்ஸில் நல்லதொரு நடிப்பையும் கொடுக்க அவர் தவறவில்லை.
2047ல் உலகம் என்ன மாதிரியாக இருக்கிறது என்பதற்கான சிறு விளக்கமும் கொடுக்காமல், எடுத்த எடுப்பில் கதைக்குள் நுழைந்து நம்மை குழம்ப வைத்திருக்கிறார்கள். பின்னணி இசை படத்திற்கு சற்று உயிர் கொடுத்திருக்கிறது.
படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களையும் டைட் ப்ரேம் வைத்து நடிக்க வைத்திருக்கிறார்கள். அளவுக்கு அதிகமான வெளிச்சத்தையும் படத்தில் கொடுத்திருக்கிறார்கள்.
படத்தில் சற்று ஆறுதல் ஒன்று உண்டு என்றால் அது, சுபாஷ் சந்திரபோஷ் பற்றி சிறிய துண்டு காணொளி மட்டுமே. இந்திய ராணுவப்படையின் வீரத்தை அது பறைசாற்றுவதாக இருந்தது.
மற்ற கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் அனைவருமே தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை அளவோடு செய்து முடித்திருக்கிறார்கள். கதைக்கொடுத்த முக்கியத்துவத்தை சற்று திரைக்கதையிலும் கொடுத்திருக்கலாம்.
முத்தக்காட்சிக்கும், ஆபாச உடை அணிந்த பெண்கள் நடமாடும் காட்சிக்கும் படத்தில் பஞ்சமே இல்லை..





