Spotlightதமிழ்நாடு

சர்வமும் நமக்கு நாமே – ”மகளிர் ஆளுமை விருது” வழங்கும் விழாவில் ராதிகா சரத்குமார்!

சென்னை: வேல்ஸ் பல்கலைக்கழகம் Panache Events & Branding நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் “மகளிர் ஆளுமை விருதுகள் 2018” பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிவாலயா அரங்கில் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் ஜார்க்கண்ட் மாநில ஆளுனர் திரௌபதி முர்மு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 12 சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பு பேருரை ஆற்றினார்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களையும், விருது பெறும் மகளிரையும் வரவேற்று பேசிய வேல்ஸ் பல்கலைக்கழக அகடமிக் துணைத்தலைவர் ஆர்த்தி கணேஷ், “2018 மகளிர் ஆளுமை விருதுகள் நமது பயணத்தில் ஒரு மைல்கல். ஒரு சாதாரண ஆசிரியராக இருந்து இன்று மாநில கவர்னராக உயர்ந்திருக்கும் திரௌபதி முர்மு அவர்கள் இன்றைய இளம் தலைமுறை மகளிருக்கு மிகப்பெரிய உத்வேகம் அளித்து வந்திருக்கிறார், அவர் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது எங்களுக்கு பெருமை. பல்வேறு துறை சார்ந்த 12 பேருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. அவர்களை தேர்வு செய்த நடுவர் குழுவுக்கும் நன்றி என்றார்.

1992ல் 36 மாணவர்களுடன் துவங்கப்பட்ட எங்கள் வேல்ஸ் கல்வி நிறுவனம் இன்று 25000க்கும் மேற்பட்ட மாணவர்கள் 5000 ஆசிரியர்களை கொண்டு இயங்கி வருகிறது. அதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள், அப்படி அவர்களின் ஆளுமையை சிறப்பிக்க இந்த விழாவை நடத்துவதில் பெருமை கொள்கிறோம், ஜார்க்கண்ட் மாநில மேதகு ஆளுனர் திரௌபதி முர்மு கலந்து கொள்வது மிகச்சிறப்பான விஷயம் என்றார் வேல்ஸ் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ஐசரி கே கணேஷ்.

விருது பெற்றுவர்கள் சார்பாக நடிகை ராதிகா சரத்குமார் பேசும்போது, “மகளிர் ஆளுமை விருதுகளை எங்களுக்கு வழங்கிய வேல்ஸ் பல்கலைக்கழகத்திற்கு நன்றி. பெண்களாகிய நம்மை யாரும் இயக்க முடியாது, சர்வமும் நமக்கு நாமே. பல்வேறு துறைகளில் இருந்து நாங்கள் விருதுகளை பெற்றிருக்கிறோம். நாம் என்னவாக வேண்டுமானாலும் ஆகலாம், ஆனால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக, உறுதியாக இருக்க வேண்டும்” என்றார்.

தமிழில் வணக்கம் என்று சொல்லி தனது பேச்சை ஆரம்பித்த சிறப்பு விருந்தினர் ஜார்க்கண்ட் மாநில ஆளுனர் மேதகு திரௌபதி முர்மு, “இந்த நவீன சமூகத்தில் இந்தியா மேம்பாடு அடைந்து கொண்டே இருக்கிறது. இந்தியா நமது சாதனையார்களை கண்டு பெருமை கொள்கிறது. சின்னபிள்ளை அவர்கள் தமிழ்நாட்டின் பெருமைமிகு பெண்மணி. சமூக விரோத சக்திகளை ஒழிக்க, சமூக நிர்வாகம் தேவை. கல்வி நிறுவனங்கள் சமூகத்தில் எல்லோரையும் ஊக்குவிக்கின்றன. பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பெண்களுக்கு சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்க வேண்டும்” என்றார்.

விழாவில்,

1. திருமதி ராதிகா சரத்குமார் – கலை மற்றும் பண்பாடு

2. திருமதி எஸ்.மலர்விழி – கல்வி

3. திருமதி சி.மகேஸ்வரி ஐபிஎஸ் – பொதுச்சேவை

4. டாக்டர் ரெஜினா ஜே முரளி – கல்வி

5. திருமதி ரூபி பியூட்டி – உடல் பயிற்சி.

6. திருமதி விஜயலக்‌ஷ்மி தேவராஜன் – சமூக சேவை

7. டாக்டர் கே.பிரேம் சாந்தா – கல்வி

8. திருமதி ஷீபா பிரின்ஸ் – தொழில்முனைவோர்

9. டாக்டர் அறிவழகி ஸ்ரீதரன் – கல்வி

10. திருமதி விமலா பிரிட்டோ – சமூக சேவை

11. திருமதி இந்திரா ராஜேந்திரன் – கல்வி

12. திருமதி சித்ரா லட்சுமி – தொழில்முனைவோர்

ஆகிய 12 பேருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. கல்லூரியில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. வேல்ஸ் பல்கலைக்கழக துணை தலைவர் ஜோதிமுருகன், ரெஜிஸ்ட்ரர் வீரமணி, சேவியர் பிரிட்டோ, கிரோத் குமார் ஜேனா ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Facebook Comments

Related Articles

Back to top button