Spotlightஇந்தியா

”கொரோனா” உயிரிழப்பு 908 ஆக அதிகரிப்பு!

சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 908 ஆக உயர்ந்துள்ளது. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் சிகிச்சைக்கு ரோபோ பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உலகையை நடுநடுங்க வைக்கும் கொரோனா வைரஸ் கடந்த மாதம் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது. என்னவென்று கண்டறியும் முன்னரே காவு வாங்கத் தொடங்கிய இந்த வைரஸ் விஷம் உலகத்தில் ஏராளமான நாடுகளுக்கு பரவியுள்ளது. இன்றைய கணக்கீட்டின்படி சுமார் 28 நாடுகளில் தனது நச்சுக்கரத்தை விரித்துள்ளது கொரோனா வைரஸ். காற்றினால் பரவும் இந்த வைரசைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வரும் நிலையில் மருந்து கண்டுபிடிக்கப்படாததால் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்குதலுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் சீனாவில் மட்டும் இந்த வைரசின் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 906 ஆகவும் வெளிநாடுகளில் 2 பேரையும் சேர்ந்து இதுவரை 908 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் கொரானா வைரசுக்கு நேற்று ஒரே நாளில் 89 பேர் பலியாகினர். இந்த எண்ணிக்கையானது 2002 – 2003ம் ஆண்டில் பரவிய சார்ஸ் வைரஸால் முன்பு ஏற்பட்ட உயிர் பலி எண்ணிக்கையைவிட அதிகமாகும்.

இந்த நிலையில் சீனாவுக்கு சுற்றுலா சென்று வந்த பிரமாண்டமான சொகுசுக் கப்பலான டைமண்ட் பிரின்சஸ் கப்பலை யோகோஹாமா பகுதியில் நங்கூரமிட ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தக் கப்பலில் 138 இந்தியர்கள் உள்ளிட்ட 3,700 பயணிகள் இருந்த நிலையில் தற்போது அதில், கொரோனோ வைரஸ் தாக்குதலுக்கு ஆளான 63 பேர் ஆளாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையடுத்து கப்பலுக்கு ராணுவத்தை அனுப்ப ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது. இதனிடையே டைமண்ட் பிரின்சஸ் கப்பல் நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில் பல நாட்களாக கப்பல் நிறுத்தப்பட்டு பயணிகள் கடும் மன அழுத்தத்தில் இருப்பதால் அவர்கள் பயணம் செய்த அனைத்து செலவுகளுக்கான முழுப் பணத்தையும் திருப்பித் தர இருப்பதாக உறுதியளித்துள்ளது.

இதனிடையே உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்குதலுக்கு பாதிப்புக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 234 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6 ஆயிரத்து 315 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் உலக சுகாதார மையம் கூறியுள்ளது. இந்த அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், கொரோனா தாக்குதல் குறித்து அறிந்து கொள்வதற்கதாக உலக சுகாதார மையத்தின் சிறப்புக்குழு சீனா சென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கும் இந்த நோயின் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சிகிச்சைக்கு ரோபோக்களைப் பயன்படுத்த சீன அரசு முடிவு செய்துள்ளது.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த நோய் பரவும் வேகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Facebook Comments

Related Articles

Back to top button