
தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர்களின் முத்திரை அழுத்தமாக பதியும் அளவிற்கு கதை, திரைக்கதை மிகவும் தெளிவாக வைத்து படம் வருவது அவ்வப்போது நடக்கும்.
அப்படியான கதையில் ஜெயித்தவர்களும் அதிகம் தோல்வியுற்றவர்களும் அதிகம்..
அப்படியாக வெளியாக இருக்கும் ஃபாரின் சரக்கு என்ன மாதிரியான கதை என்பதை விமர்சனம் மூலம் காணலாம்.
அறிமுக இயக்குநர் விக்னேஷ்வரன் கருப்புச்சாமி எழுதி இயக்கியிருக்கும் படம் தான் இந்த ‘ஃபாரின் சரக்கு’. அறிமுக நடிகர்கள் கோபிநாத், சுந்தர், உசேன், சுரேந்தர் சுந்தரபாண்டியன், அஃப்ரினா, ஹரினி, இலக்கியா ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை நெப்டியூன் செய்லர்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் கோபிநாத் தயாரித்திருக்கிறார்.
சஸ்பென்ஸ் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூலை 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
குஜராத் அமைச்சர் ஒருவரின் மகன் ரகசியமாக தமிழகத்துக்கு வருகிறார். தமிழக அமைச்சர் ஒருவரின் ஏற்பாட்டின் மூலம் அவரை 10 நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்கும் பொறுப்பு உசேன் தலைமையிலான ரவுடி கும்பலிடம் ஒப்படைக்கப்படுகிறது.
அதே சமயம், குஜராத் அமைச்சரின் மகனை கண்டுபிடிப்பதில் சில குழுக்கள் ஈடுபடுகிறார்கள். இறுதியில் அவரை கண்டுபிடித்தார்களா? இல்லையா?, அவர்கள் யார்? குஜராத் அமைச்சரின் மகன் எதற்காக தமிழகத்தில் ரகசியமாக தங்க வைக்கப்படுகிறார்? இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைப்பது இரண்டாம் பாதியில்..
படத்தின் கதையை மிகவும் நேர்த்தியாக எழுதிய இயக்குனர் அதை கொடுக்கும் விதத்தில் சற்று சறுக்கியிருக்கிறார். படத்தின் கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் புதுமுகங்கள் என்றாலும், அவர்களை சரிவர இயக்குனர் பயன்படுத்தவில்லையோ என்று தான் தோன்றூகிறது.
படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் கோபிநாத், சுந்தர் இருவரும் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்கள்.
மகாலிங்கம் என்ற கதாப்பாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் உசேன், கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். வயதுக்கு மீறிய சிலரின் தோற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
சண்டைக் காட்சி என்று கூறி ஏதோ காமெடி காட்சியை புகுத்தியிருப்பது எரிச்சலைத் தான் வரவைக்கிறது.
பிரவீன் ராஜ் இசையில் பின்னணி இசையை பெரிதாகவே குறைத்திருக்கலாம். கதை ஒரு பக்கம் செல்ல, இசை ஒரு பக்கமாய் சென்று கொண்டிருக்கிறது.
ஒளிப்பதிவாளர் சிவநாத் ராஜனின் கேமரா படத்திற்கு சற்று ஆறுதலாக இருக்கிறது.
கதைக்கருவை பலமாக எடுத்து திரைக்கதையில் சறுக்கியிருக்கிறார்கள் படக்குழுவினர்.
இந்த படத்துக்கு இந்த டைட்டில் தான் வைக்கணுமா.? என்ற கேள்வி படம் முடிந்ததும் கேட்க வைக்கிறது.
ஃபாரின் சரக்கு – போதை ஏற்றாத சரக்கு





