
சேத்துமான் என்ற படத்தினை இயக்கிய இயக்குனர் தமிழ் அவர்களின் இயக்கத்தில் உருவாகி இன்று திரைகண்டிருக்கும் படம் தான் “எலக்சன்”.
இப்படத்தில் விஜய்குமார், ப்ரீத்தி அஸ்ரானி, ரிச்சா ஜோஷி, ஜார்ஜ் மரியான், பவல் நவகீதன், திலீபன், நாச்சியாள் சுகந்தி, ராஜிவ் ஆனந்த், குலோத்துங்கன் உதய்குமார் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் மகேந்திரன் ஜெயராஜு. மேலும் இசையமைத்திருக்கிறார் கோவிந்த் வசந்தா
ரீல் குட் பிலிம்ஸ் ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
கதைக்குள் பயணிக்கலாம்…
வேலூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலை மையப்படுத்தி உருவாகிறது எலக்சன் படத்தின் கதை.
அக்கிராமத்தில் சுமார் 40 வருடமாக மாநில கட்சியின் தொண்டனாக இருந்து வருகிறார் ஜார்ஜ் மரியான். தனது கட்சிக்கு விசுவாசமாக இருந்து, அங்கு நடக்கும் தேர்தலில் கட்சியின் மேலிடத்திற்கு கட்டுப்பட்டு அக்கட்சிக்காக பணிபுரிகிறார். ஜார்ஜ் மரியானின் மகனாக வருகிறார் விஜய்குமார்.
தனியார் நிறுவனத்தில் பணிபுரிய, காதல் தோல்வி ஒன்று நடக்க, தொடர்ந்து வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் வர, தனது தந்தை அவமானப்படுத்தப்பட அதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணமாக தேர்தலில் நிற்க துணிகிறார் விஜய்குமார்.
தேர்தலில் நின்று பணத்தை செலவு செய்கிறார். தொடர்ந்து தோல்வியடைந்து பணம் மட்டுமல்லாமல், ஒரு உயிர், நிம்மதி என அனைத்தையும் இழக்கிறார் விஜய்குமார்.
மீண்டும் தேர்தலில் நின்று விஜய்குமார் வென்று காட்டினாரா.? இழந்ததை மீண்டும் பிடித்தாரா.?? தனது இழப்பை எப்படி பழி தீர்த்தார்.?? என்பதே படத்தின் மீதிக் கதை.
மிகவும் அழகான கதையை கையில் எடுத்து அதில் திறம்படவும் நடித்து அசத்தியிருக்கிறார் நாயகன் விஜய்குமார். சில இடங்களில் நீண்ட வசனத்தை பேசி தனது திறமையை அழகாகவே நிரூபித்திருக்கிறார். ஆனால், ஒரு சில இடத்தில் கதையை தாங்கும் அளவிற்கான கேரக்டருக்கு விஜய்குமார் பொருத்தமாக இல்லையே என்ற சந்தேகமும் எழத்தான் செய்தது.
நாயகி ப்ரீத்தி அஸ்ரா, தனக்குக் கொடுக்கப்பட்டதை அளவாக செய்து முடித்திருக்கிறார். க்யூட்டான சில எக்ஸ்ப்ரஷன்களைக் கொடுத்து கதைக்கேற்ற கதாபாத்திரமாக மாறியிருக்கிறார்.
ஜார்ஜ் மரியான் தனது அனுபவ நடிப்பால் அசத்தியிருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து பவல் நவகீதன் மற்றும் திலீபன் இருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்து தங்களது கேரக்டர்களை நிவர்த்தி செய்திருக்கிறார்கள்.
ஊரில் நடக்கும் ஊராட்சி தேர்தலை மையப்படுத்தி கதை நகர்கிறது. ஆங்காங்கே சில இடத்தில் இன்னும் தெளிவான விளக்கத்தைக் கொடுத்து கதையை நகர்த்தியிருக்கலாம் என்று தோன்றியது.
மேலும், உள்ளாட்சி தேர்தலை பற்றிய விஷயத்தை இன்னும் விளக்கமாகவே கொடுத்திருந்திருக்கலாம்.
கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டும் நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.
மகேந்திரன் ஜெயராஜுவின் ஒளிப்பதிவு சண்டைக் காட்சியில் நன்றாகவே வேலை செய்திருக்கிறது.
விஜய்குமார் மற்றும் ப்ரீத்தி இருவருக்குமான கெமிஸ்ட்ரி நன்றாகவே கைகொடுத்திருக்கிறது. கிராம உள்ளாட்சி அரசியலில் இருப்பவர்களுக்கு படத்தின் வீரியம் நன்றாகவே புரியும் விளங்கும்.
எலக்சன் – உள்ளாட்சி வெற்றி….





