
பிரபல தயாரிப்பாளரான எஸ் சஷிகாந்த் அவர்களின் இயக்கத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின், ஆடுகளம் முருதாஸ், தீபா உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகி இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் தான் டெஸ்ட்.
மாதவன் மற்றும் நயன்தாரா போன்ற உயர் நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளதால், படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இப்படத்தினை சக்ரவர்த்தி ராமச்சந்திரா மற்றும் சஷிகாந்த் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
சுமன்குமார் எழுதியிருக்கும் இக்கதைக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் விராஜ் சிங் கோஹில்.
சக்திஸ்ரீ கோபாலன் இசையமைத்திருக்கும் படத்திற்கு டி எஸ் சுரேஷ் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
கதைக்குள் பயணித்துவிடலாம்…
நீண்ட வருடமாக இந்திய கிரிக்கெட் அணியில் பெஸ்ட் பேட்ஸ்மேனாக தனது அழுத்தமான முத்திரையை பதித்து வந்த சித்தார்த், கடைசி இரண்டு போட்டிகளில் சரிவர பெர்பார்மன்ஸ் காட்டாததால், சென்னையில் நடக்கவிருக்கும் இந்தியா – பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார் சித்தார்த்.
தான் கண்டுபிடித்த மாசு இல்லா வாகன எஞ்சீனை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டி, வருடக்கணக்கில் தமிழக அரசிடம் அலைந்து கொண்டிருக்கும் நன்கு படித்த Engineer தான் மாதவன்.
திருமணமாகி வருடங்கள் ஆகியும், குழந்தை இல்லாததால் விரக்தியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் மாதவனின் மனைவியும் பள்ளி ஆசிரியருமான நயன்தாரா.
வாங்கிய கடனை அடைக்க முடியாமலும், மருத்துவத்திற்கு பணம் இல்லாமலும் மிகுந்த சிரமத்தில் இருக்கிறார் மாதவன்.
இந்த நிலையில், மாதவனின் கையில் சித்தார்த்தின் மகன் சிக்கிக் கொள்ள, இதனை தனக்கு சாதகமாக்கி எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்று குறுக்கு வழியில் தனது செயல்பாடுகளை திருப்புகிறார் மாதவன்.
இந்த பாதகமான சூழலை சித்தார்த் எப்படி கையாண்டார்.? மாதவனுக்கு என்ன நடந்தது.?? நயன்தாராவின் நிலைப்பாடு என்ன.??? என்பதே படத்தின் மீதிக் கதை.
வழக்கம் போல் தனது கேரக்டருக்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை தெளிவாக செய்து முடித்திருக்கிறார் மாதவன். கண்டுபிடிப்பாளனை இந்த உலகம் எப்படி பார்க்கும் என்பதை கூறும் இடத்தில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார். மனைவியுடனான காதல், முக்கியமான இடத்தில் வேறு முகத்தைக் காட்டுவது என பல இடங்களில் நன்றாகவே தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார் மாதவன்.

ஒரு சில இடங்களில் ஓகே ரகமாக இருந்தாலும், பல இடங்களில் ஓவர் ஆக்டிங்கை கொடுத்து காட்சிகளை சிதைத்துவிட்டார் நயன்தாரா.
இந்த கதாபாத்திரத்திற்கு இவர் தான் பொருத்தமானவர் என்று கூறும் அளவிற்கு தனது நடிப்பில் அசாத்திய திறமையை வெளிப்படுத்தியிருந்தார் சித்தார்த். அர்ஜூன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.
ஆடுகளம் முருகதாஸ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்திருக்கிறார்.
பல படங்களில் பார்த்த ஒரு கதை தான் என்றாலும், கதையில் என்னென்ன தன்னால் கொடுக்க முடியுமோ அதை அளவாகவும் அழகாகவும் கொடுத்து கைதட்டல் பெற்றிருக்கிறார் இயக்குனர்.
அடுத்து என்ன நடக்கும் என்ற தோற்றத்தை கொண்டு வந்ததில் வென்றிருக்கிறார் இயக்குனர்.
இருந்தாலும், திரைக்கதையின் வேகம் நம்மை சோதனைக்குள் கொண்டு சென்று விட்டது. மிகவும் மெதுவாக கதை நகர்வதால் எப்போதுதான் க்ளைமாக்ஸ் வரும் என்று கூறும் அளவிற்கு கொண்டு சென்று விட்டார் இயக்குனர்.
விராஜ் சிங் கோஹில் அவர்களின் படத்திற்கு தேவையான வெளிச்சத்தைக் கொடுத்து ஒளிப்பதிவை நச்சென கொடுத்திருக்கிறார்.
சக்தி ஸ்ரீ கோபாலனின் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை என்றாலும், பின்னணி இசையை ஏற்றுக் கொள்ளலாம்.
மொத்தத்தில்,
டெஸ்ட் – மித வேகம்….





