Spotlightவிமர்சனங்கள்

தடம் விமர்சனம் 3.5/5

தடையறத்தாக்க படத்தின் வாயிலாக தரமான இயக்குனருக்கான அங்கீகாரம் பெற்ற மகிழ்திருமேனியின் இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் உருவாகியுள்ளது ‘தடம்’.

கதைப்படி,

எழில், கவின் என இரு வேடங்களில் அருண்விஜய் தோற்றமளிக்கிறார்.

எழில் – நன்றாக படித்து தனியார் கம்பெனியில் வேலை பார்த்து, சொந்தமாக கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனியும் ஆரம்பித்து அந்த பணிகளையும் செய்து வருகிறார். கையோடு ஒரு காதலும் இருக்கிறது.

கவின் – தனது நண்பர் யோகிபாபுவோடு இணைந்து திருட்டு தொழில் செய்து, அதை வைத்து சூதாட்டம் விளையாடி வருபவர்.

இந்நிலையில், ஆகாஷ் என்ற வாலிபர் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார்.
வழக்கை விசாரிக்கும் காவல்துறை, கொலையை செய்தது அருண்விஜய் தான் என்ற தகவல் உண்மையாகிவிட ஆனால் அது எழிலா அல்லது கவினா..?? என்ற குழப்பம் நீடிக்கிறது.

அந்த கொலையை யார் செய்தது..?? எதற்காக செய்தார்கள்..?? என்பதே படத்தின் மீதிக் கதை.

அருண்விஜய்யின் மாறுபட்ட நடிப்பில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார். கடின முயற்சி, உழைப்பு, என தனக்கு உரித்தான அனைத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக போலீஸ் ஸ்டெஷனில் வரும் சண்டைக் காட்சியில் மிரட்டி எடுத்திருக்கிறார். காதல், பாசம், கோபம் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார் அருண்விஜய்.

தான்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட் என இரண்டு கதாநாயகிகளும் அழகிலும் நடிப்பிலும் எந்த குறைவில்லாமல் பூர்த்தி செய்திருக்கிறார்கள். போலீஸ் கேரக்டரில் நடித்திருக்கும் வித்யா பிரதிபா மிடுக்கென இருக்கும் அழகிலும் கம்பீரத்திலும் நம்மை ஈர்த்து விடுகிறார்.

யோகிபாபுவின் காமெடி அவ்வப்போது மட்டுமே எடுபட்டுள்ளது.

தரமான க்ரைம் த்ரில்லர் கொடுத்தமைக்கு இயக்குனர் மகிழ் திருமேனிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளலாம். நொடிக்கு நொடி திருப்பம், சஸ்பென்ஸ், த்ரில்லர் என காட்சிக்கு காட்சி படபடப்பை கொடுத்து அனைவரையும் சீட்டின் நுனியில் அமர வைக்கிறார்.

அதிலும் கடைசி 20 நிமிடங்கள் ஊர்ஜிதம் செய்ய முடியாத அளவிற்கு கதை ஓட்டத்தை மாற்றியிருப்பது படத்தின் மிகப்பெரிய பலம்.

அருண்ராஜ் இசையில் விதி நதியே பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். புதுமுக இசையமைப்பாளர் என்றாலும் தன் இசையால் உயர்ந்து இருக்கிறார்.

ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் கச்சிதம். அதிலும் போலீஸ் ஸ்டேஷனின் நடக்கும் சண்டைக் காட்சியில் ஒளிப்பதிவாளரின் கைவண்ணம் பலம்.

தடம் – அருண் விஜய்யின் வெற்றித் தடம்

Facebook Comments

Related Articles

Back to top button