Spotlightவிமர்சனங்கள்

தாதா 87 விமர்சனம் 3.5/5

வட சென்னையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது ‘தாதா 87’. தனது ஏரியாவில் காதல் மன்னனாக வலம் வருபவர் நாயகன் ஆனந்த் ரவி. அவருடைய ஏரியாவில் யாராவது புதிதாக ஒரு இளம்பெண் வந்தால், அவரிடம் சென்று ஐ லவ் யூ சொல்வது தான் இவரது முதல் வேலை.

அப்படியாக நாயகி ஸ்ரீபல்லவி, அவரது ஏரியாவிற்கு புதிதாக குடியேற, அவரை துரத்தி துரத்தி காதலிக்கிறார் நாயகன் ஆனந்த் பாண்டி.

இது ஒரு புறம் செல்ல, ஏரியா கவுன்சிலர் பதவிக்கு இருதரப்பினரிடையே கடும் போட்டி வர, இருவரையுமே காலி செய்துவிட சதுரங்க ஆட்டம் ஆடுகிறார் எம் எல் ஏ-வாக வரும் மனோஜ்குமார். இவர்கள் அனைவரும் பயப்படும் ஓரே ஆள் ‘தாதா’வாக வரும் சாருஹாசன்(சத்யா) தான். இவர்கள் மட்டுமல்ல, அந்த ஏரியாவே இவரைக் கண்டு அஞ்சும்.

“பொண்ணுங்கள் தொட்டா கொளுத்துவேன்’ இதுதான் சத்யா கேரக்டரோட ஒன்லைன்.

எம் எல் ஏ-வுக்கு துணை போகும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காட்டானாக நடித்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ.

தனது மகள்(ஸ்ரீ பல்லவி) பின்னால் சுற்றி தொந்தரவு செய்வதால் நாயகனை அதட்ட சாருஹாசனிடம் செல்கிறார் ஜனகராஜ்.

பல இடங்களில் இருந்து எதிர்ப்பு இருந்தாலும் தனது காதலில் நாயகன் ஆனந்த் பாண்டி வெற்றி பெற்றாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகனாக வரும் ஆனந்த் பாண்டிக்கு அடையாளம் விஜய் டிவி என்றாலும், நாயகனுக்கான முத்திரை இப்படம் தான். முதல் படம் போல் இல்லாமல், இயல்பான நடிப்பு, நடனம், நகைச்சுவை, காதல், எமோஷன் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார் ஆனந்த் பாண்டி.

தனது வயதில் முடியவில்லை என்றாலும், கதைக்கு தேவை என்பதால் மிகுந்த சிரமப்பட்டு நடித்து தனக்கான கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார் சாருஹாசன். இவருக்கான ஜோடி கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா, பார்வையில் காதல் சொல்லிவிட்டு செல்கிறார். தனது அனுபவ நடிப்பில் உயர்ந்து நிற்கிறார் ஜனகராஜ்.

காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கதிர். பல இடங்களில் இவர் அடிக்கும் காமெடி ரசிக்க வைக்கிறது.

படத்தின் மிகப்பெரிய பலம், உயிரோட்டம் என அனைத்திற்கும் ஒப்பானவர் நாயகி ஸ்ரீ பல்லவி மட்டும் தான். இந்த வயதில் இப்படியான கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்காகவே இவருக்கு விருதுகள் பலவற்றை பறைசாற்றிவிடலாம்.

’அதிதி பாலன்’க்கு ஒரு ’அருவி’

’ஸ்ரீ பல்லவி’க்கு ‘தாதா 87’ .

காதல் என்பது செக்ஸ் மட்டுமல்ல அதையும் தாண்டிய ஒரு வாழ்க்கை உள்ளது, அது காமத்திற்கும் மேல் ஒரு சுகத்தை கொடுக்கும் என்ற ஒற்றை வரிக்கு உயிர் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய் ஸ்ரீ. தனது முதல் படம் என்றாலும், 90 சதவீத மதிப்பெண் எடுத்து டாப் லிஸ்ட் இயக்குனர் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார் விஜய் ஸ்ரீ.

லீயான்டர் லீ மார்ட்டி, அல் ரூபன், தீபன் சக்ரவர்த்தி என மூன்று பேர் சேர்ந்து இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள். ’ஒரு நிமிஷம் தல’ பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னனி இசை மிரட்டியிருக்கிறார்கள்.

ராஜபாண்டியின் ஒளிப்பதிவு வட சென்னையை அழகாக காட்டியிருக்கிறது.

தாதா 87 – தரமான படைப்பு..

Facebook Comments

Related Articles

Back to top button