
பாண்டிராஜ் அவர்களின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், சரவணன், ஆர் கே சுரேஷ், யோகிபாபு, காளி வெங்கட், மைனா நந்தினி, தீபா சங்கர், ஜானகி சுரேஷ், மகிழினி, அருள்தாஸ், செம்பன், ரோஷ்னி, முத்துகுமார், செண்ட்றாயன், கிச்சா ரவி, ரோஹன், ஆதித்யா கதிர் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “தலைவன் தலைவி”.
இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சுகுமார்.
படத்தினை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
கதைக்குள் பயணிக்கலாம்…
மதுரையில் பரோட்டா கடை ஒன்றை நடத்தி வருகிறது விஜய் சேதுபதியின் குடும்பம். விஜய் சேதுபதியின் அம்மாவாக தீபா சங்கரும் அப்பாவாக சரவணனும் வருகின்றனர்.
பக்கத்து ஊரில் செம்பனின் மகளாக வருகிறார் நித்யா மேனன். நித்யா மேனனின் சகோதரனாக வருகிறார் ஆர் கே சுரேஷ்.
விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தை பிறக்கிறது.

கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வருகிறது. பிறகு இணைகிறார்கள். இப்படியாக தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.
இந்த சண்டைக்கு எல்லை எது.? இவர்களின் வாழ்க்கையில் அடுத்து என்ன நடந்தது உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை வைத்திருக்கிறார் இயக்குனர்.
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டுபவர் நடிகர் விஜய் சேதுபதி. இப்படத்திலுமே அதையே கொடுத்திருக்கிறார். ஆகாச வீரன் என்ற கதாபாத்திரமாகவே படம் முழுக்க தென்பட்டார் விஜய் சேதுபதி.
விஜய் சேதுபதிக்கு சவால் விடும்படியான நடிப்பைக் கொடுத்து அசத்தி விட்டார் நடிகை நித்யா மேனன். பேரரசி என்ற கதாபாத்திரத்தில் தோன்றி அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்துவிட்டார் நித்யா மேனன். கோபம், அன்பு, காதல், அழுகை என அனைத்திலும் ரவுண்டு கட்டி அடித்திருக்கிறார் நித்யா மேனன்.

விஜய் சேதுபதி – நித்யா மேனன் இருவருக்குமிடையேயான கெமிஸ்ட்ரி படத்தில் நன்றாகவே வொர்க் அவுட் ஆகியுள்ளது. சீரியஸாக சென்று கொண்டிருக்கும் காட்சியானது டக்கென காமெடி கோணத்தில் திரும்புவது படத்தினை சற்று கலகலப்பாக போக வைத்திருக்கிறது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி – நித்யா மேனனை தவிர வேறு யாரும் அந்தளவிற்கு பொருத்தமாக இருந்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். இவர்களின் காதலை காட்சிகளாக காணும் போது எந்த இடத்திலும் சோர்வடைய வைக்கவில்லை.
யோகிபாபுவின் காமெடி ஆங்காங்கே சற்று கைகொடுத்திருக்கிறது. ஆர் கே சுரேஷ், செம்பன், ரோஷ்ணி, மைனா நந்தினி, காளி வெங்கட் என அனைவருமே படத்தில் கொடுக்கப்பட்ட வேலைகளை சரியாக செய்திருக்கின்றனர்.
அதிலும், தீபா சங்கரின் நடிப்பு ஒருபடி மேல் சென்று அனைவரையும் ஓரங்கட்ட வைத்துவிட்டார்.
சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே படத்தினை வேறு ஒரு இடத்திற்கு எடுத்துச் சென்று விட்டது. ஒளிப்பதிவு கலர் ஃபுல்லாக கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

சிறியதான ஒன்லைன் என்றாலும் அதை எடுத்துச் சென்ற விதத்திற்காக இயக்குனர் பாண்டிராஜை வெகுவாக பாராட்டலாம். கணவன் மனைவிக்குள் நடக்கும் சண்டை, காதல் என இரண்டையும் களத்தில் காண்பது போல் திரைக்கு எடுத்து வந்திருக்கின்றனர்.
குடும்பத்தில் அன்றாடம் நடக்கும் கணவன் – மனைவி பிரச்சனைகளை திரையில் கண்டால் குடும்பமாக சென்று பார்ப்பவர்களுக்கு “அட நம்ம கதை தான்…” என்று கூறும் அளவிற்கு திரைக்கதையை திறமையாக கையாண்டு கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.
தலைவன் தலைவி – குடும்பம்..





