பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, டேனி உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகி நேற்றைய தினம் மிகப்பெரும் எதிர்பார்ப்போடு வெளியான திரைப்படம் தான் தங்கலான்.
இப்படத்திற்கு கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய, ஜி வி பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார்.
மூர்த்தி கலை இயக்குனராக பணிபுரிய ஸ்டூடியோ கீரீன் நிறுவனம் இப்படத்தினை தயாரித்திருக்கிறது.
1850 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடக்கும் கதையாக பயணிக்கிறது இப்படத்தின் கதை.
தனது மனைவி பார்வதி மற்றும் 5 பிள்ளைகளோடு வாழ்க்கை நடத்தி வருபவர் தங்கலான் (விக்ரம்). சொந்தமாக சிறிதளவு விவசாய இடத்தில் விவசாயம் செய்து வந்தவர், அதிகாரத்தால் அந்நிலத்தை பறித்து விடுகிறார் மிராசு.
அவருக்குக் கீழ் கூலியாக வேலை பார்த்து வருகின்றனர் விக்ரமும் அவரது குடும்பத்தார்களும்.,
இந்நிலையில், தங்கத்தைத் தேடி ஆங்கிலேயனான டேனி வருகிறார். விக்ரமின் கிராம மக்களிடம் உதவி கோருகிறார். கிடைக்கும் தங்கத்தில் பங்கு தருவதாகவும் கூறுகிறார். ஆனால், தங்கத்தைத் தேடிச் சென்றால் பிசாசு கொன்று விடும் என்று நினைத்துக் கொண்டு யாரும் வர அஞ்சுகிறார்கள்.
கிடைக்கும் பணத்தில் தனது நிலத்தை மீட்டு விடலாம் என்று விக்ரம் கிளம்புகிறார். அவருடன் பசுபதி உட்பட சிலரும் கிளம்புகிறார்கள்.
பல தடைகளை மீறி தங்கம் இருக்கும் இடத்தை அடைகிறார்கள். தங்கத்தை தோண்டி எடுப்பதற்காக தனது கிராம மக்களையும் அழைத்துச் செல்கிறார் விக்ரம்.
அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
படத்தின் ஒட்டுமொத்த கதையையும் தாங்கிச் செல்பவராக வருகிறார் விக்ரம். எமோஷன்ஸ், ஆக்ஷன் என பல இடங்களில் உடம்பு சிலிர்க்கும்படியான நடிப்பைக் கொடுத்து அசரடித்திருக்கிறார் விக்ரம்.
இக்கதைக்கு, இக்கதாபாத்திரத்திற்கு விக்ரமை விட்டால் வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்பதை ஆணித்தனமாக பல இடங்களில் நிரூபித்தும் காட்டியிருக்கிறார் விக்ரம்.
விக்ரமிற்கு இணையான ஒரு நடிப்பைக் கொடுத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டார் நடிகை பார்வதி. தனது கேரக்டரின் வலுவை நன்றாக உணர்ந்து அதில் வென்றும் காட்டி விட்டார் பார்வதி.
சூனியக்காரியாக மாளவிகா மோகனன் மிரட்டியிருக்கிறார்.
வலுவான கதையை சொல்லும் இடத்தில் சற்று தடுமாறியிருக்கிறார் ரஞ்சித் என்று தான் சொல்ல வேண்டும். பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும்படியான திரைக்கதையை கொடுத்திருந்தால் இன்னும் வலுவாகவே கதை மக்களிடத்தில் சென்றிருக்கும். இருந்தாலும், மண்ணிற்கான போராட்டம், உரிமைக்கான போராட்டம் என பல இடங்களில் வசனங்கள் மூலம் சாட்டையை வலுவாகவே சுழற்றியிருக்கிறார் ரஞ்சித்.
ஜி வி பிரகாஷின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே தாறுமாறு தான்.
ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம்.
தங்கலான் – வென்றான்.