சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், எம் எஸ் பாஸ்கர், ரவீந்திர விஜய், ஆனந்த சாமி நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ரகு தாத்தா.
இப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது.
யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற காலகட்டத்தில் நடக்கும் கதை. எம் எஸ் பாஸ்கரின் பேத்தியாக வருபவர் கீர்த்தி சுரேஷ். இருவரும் தங்களது சகாக்களுடன் இணைந்து ஹிந்தி திணிப்பை எதிர்த்து போராடி வருகிறார்கள்.
வங்கியில் பணிபுரியும் கீர்த்தி சுரேஷ் ஒரு புத்தக எழுத்தாளரும் கூட. பெரியாரின் கொள்கையை உயர்த்தி பிடிப்பவர் பின்பற்றுபவரும் கூட. திருமணத்தின் மீது நாட்டம் இல்லாமல் இருக்கிறார்.
இந்நிலையில், எம் எஸ் பாஸ்கருக்கு புற்றுநோய் இருப்பதாக கூற கீர்த்தி சுரேஷின் திருமணத்தை பார்ப்பது தான் தனது கடைசி ஆசை என எம் எஸ் பாஸ்கர் கூறிவிடுகிறார். இதனால் கீர்த்தி சுரேஷிற்கு பேரதிர்ச்சியாகிறார்.
வேறு வழியின்றி, தனது புத்தக வாசிப்பாளரும் பெரியாரின் கொள்கையை பின்பற்றுபவரும் பெண்ணியத்தை மதிப்பவருமான ரவீந்திர விஜய்யை திருமணம் செய்ய ஒத்துக் கொள்கிறார் கீர்த்தி சுரேஷ்.
இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. அதன்பிறகு ரவிந்திர விஜய்யின் மற்றொரு முகம் கீர்த்தி சுரேஷுக்கு தெரிய வருகிறது.
இத்திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறார் கீர்த்தி சுரேஷ். அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
கதையின் நாயகியாக கீர்த்தி சுரேஷ், கயல் என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். ஆரம்பத்தில் அக்கதாபாத்திரத்தில் சற்று தடுமாறினாலும் செல்ல செல்ல, அக்கதாபாத்திரத்தை நன்றாகவே உள்வாங்கி நடித்து ஜொலித்திருக்கிறார். முதல் பாதியானது சோதனையாக செல்ல இரண்டாம் பாதியானது சற்று ஆறுதல் அளித்துள்ளது.
ரவீந்தர் விஜய் இக்கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிகராக நடித்திருக்கிறார். அனுபவ நடிப்பை ஆங்காங்கே தெளித்திருக்கிறார் எம் எஸ் பாஸ்கர்.
இதெல்லாம் ஒரு கதையாக என முதல் பாதி பயணித்தாலும், இரண்டாம்பாதி சற்று எண்டர்டெயின்மெண்ட் செய்துள்ளது.
பெண்ணியம் பேசும் கீர்த்தி சுரேஷ் நாயகனை பார்த்து இவர் ஒரு ஆண்மகன் இல்லை என்று கூறுவது நியாயமா.? கதையில் இன்னும் சற்று அதிகமாகவே மெனக்கெடல் செய்திருக்கலாம் இயக்குனர்.
ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை ஓகே ரகம் தான்.
ஒளிப்பதிவு பெரும் பலம் தான்.
ரகு தாத்தா – அட போங்க தாத்தா….