
சித்து, தர்ஷிகா, ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் இயக்குநர் பாலாஜி இயக்கிய ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் செப்டம்பர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சஸ்பென்ஸ் திரில்லராக உருவான இப்படம் மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் ஓடிவரும் நிலையில், படத்தின் வெற்றி விழா இயக்குநர் பாலாஜியின் சொந்த ஊரான திருநெல்வேலியில் நடைபெற்றது.
கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்.எஸ். ஸ்விஸ் பிலிம் பேக்டரி இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிகண்டன் பி.கே. ஒளிப்பதிவு செய்ய, சக்தி பாலாஜி இசையமைத்துள்ளார்.
வெற்றி விழாவில் பேசிய தயாரிப்பாளர் கோபால், குறைந்த பட்ஜெட்டில் உருவான ‘தி டார்க் ஹெவன்’ தங்களுக்கு லாபகரமான படமாக அமைந்துள்ளதாகத் தெரிவித்தார். முதலீட்டிலிருந்து இதுவரை இரண்டு மடங்கு லாபம் கிடைத்துள்ளதாக கூறிய அவர், படத்தின் முழுமையான வசூல் விவரங்களை விரைவில் வெளியிட இருப்பதாகவும் தெரிவித்தார்.
படத்தின் நாயகன் சித்து தனது சினிமா பயணம் குறித்து பேசுகையில், ஜூனியர் ஆர்டிஸ்டாக தொடங்கி கதாநாயகனாக உயர்ந்த தனது அனுபவங்களைப் பகிர்ந்தார். சினிமாவில் வாய்ப்புக்காக போராடுபவர்கள் நம்பிக்கையை இழக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.
நடிகை தர்ஷிகா, ‘தி டார்க் ஹெவன்’ தனது முதல் படம் என்றும், பெருமையாகச் சொல்லக்கூடிய படமாக இது அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இயக்குநர் பாலாஜி பேசுகையில், 2019 முதல் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு இப்படத்தை உருவாக்கியதாகக் கூறினார். “ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தான் நிம்மதியாகத் தூங்குவேன்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். படத்தின் வெற்றிக்கு காரணமான நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
விழாவின் நிறைவில் ‘தி டார்க் ஹெவன்’ படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நினைவுக் கேடயங்கள் வழங்கப்பட்டன.





