Spotlightசினிமா

அன்பில் அவன் – திரைப்பட விமர்சனம் 2.25/5

நடிப்பு: அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ், சாபுமோன் அப்துசமத், ரேவதி

இயக்கம்: ஆர். கார்த்திகேயன்
கதை: விக்னேஷ் ராஜா
திரைக்கதை: விக்னேஷ் ராஜா, ஆர். கார்த்திகேயன், அசோக் செல்வன்
தயாரிப்பு: கே. கருணாமூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம்
தயாரிப்பு நிறுவனம்: ஐங்கரன் இன்டர்நேஷனல் & ஹேப்பி ஹை பிக்சர்ஸ்
இசை: கோவிந்த் வசந்தா
ஒளிப்பதிவு: கௌதம் ராஜேந்திரன்
படத்தொகுப்பு: செல்வா ஆர்.கே.
சண்டைக்காட்சிகள்: பீட்டர் ஹெய்ன்

கல்லூரி காலத்தில் காதலிக்கும் சூர்யா – இயல் இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் திருமணத்திற்குப் பிறகு பல வருடங்களாக தங்களுக்குப் பிடிக்காத வேலையைச் செய்துகொண்டு, ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

ஒருகட்டத்தில், “இந்த வாழ்க்கை போதும்… இனி நம்முடைய கனவை நோக்கிப் போகலாம்” என்று முடிவெடுக்கும் இருவரும், மலைப்பகுதியில் இருக்கும் ஒரு பழமையான பங்களாவை வாங்கி அதை ‘ஹோம் ஸ்டே’வாக மாற்றத் திட்டமிடுகிறார்கள்.

ராணி பத்மினியாக வரும் ரேவதிக்குச் சொந்தமான அந்த பங்களாவை பல சிரமங்களுக்கு மத்தியில் சூர்யாவும் இயலும் வாங்குகின்றனர்.

ஆனால் அதே பங்களாவின் மீது அந்தப் பகுதி எம்.எல்.ஏ. ராஜநாயகமாக வரும் கதிர் பாலுவுக்கும் ஒரு கண் இருக்கிறது. ரேவதி பலமுறை மறுத்ததால் அவரால் வாங்க முடியாமல் போன அந்த பங்களா தற்போது சூர்யாவின் கைக்கு வந்ததும், அதை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று திட்டம் தீட்டுகிறார்.

அவருக்கு வலதுகையாக இன்ஸ்பெக்டர் தவசியாக மஹா டெல்லி கணேஷும், வழக்கறிஞர் மார்ட்டினாக சாபுமோன் அப்துசமத்தும் இருக்கிறார்கள்.

இவர்களின் தடைகளையும் மிரட்டல்களையும் மீறி சூர்யா தனது மனைவியின் கனவுக்காக அந்த ‘ஹோம் ஸ்டே’வை திறந்தாரா இல்லையா என்பதே ‘அன்பில் அவன்’ படத்தின் மீதிக்கதை.

சூர்யாவாக அசோக் செல்வனும், இயலாக ப்ரீத்தி முகுந்தனும் நடித்திருக்கிறார்கள். தனித்தனியாக இருவரது நடிப்பிலும் பெரிய குறை சொல்ல முடியவில்லை. ஆனால் கணவன் – மனைவியாக இவர்களுக்குள் இருக்க வேண்டிய காதல் கெமிஸ்ட்ரி திரையில் அழுத்தமாகப் பதிவாகவில்லை.

படத்தின் மையமே இவர்களுடைய காதலும், அந்தக் காதலுக்காக சூர்யா எவ்வளவு தூரம் செல்கிறார் என்பதும்தான். அப்படியிருக்க, இருவருக்கும் இடையேயான காதல் மொழி இன்னும் வலுவாக எழுதப்பட்டிருக்க வேண்டியது அவசியம்.

அசோக் செல்வன் மலையின் உச்சியிலிருந்து தண்ணீருக்குள் குதிக்கும் காட்சிக்காக பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறார். அவரது உழைப்பைப் பாராட்டலாம். ஆனால் திரைக்கதையில் அந்தக் காட்சி ஏற்படுத்த வேண்டிய தாக்கம் என்ன என்பது தெளிவாக இல்லை. அதனால் அவ்வளவு ரிஸ்க் எடுத்த காட்சியும் படத்திற்கு பெரிய பலமாக மாறாமல் போய்விடுகிறது.

இடைவேளைக்கு முன்பு அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன் இடையே நீண்ட உரையாடல் ஒன்று வருகிறது. உணர்ச்சிப்பூர்வமாக நம்மை கதைக்குள் இழுக்க வேண்டிய முக்கியமான காட்சி அது.

ஆனால் வசனங்களும் காட்சியின் நீளமும் சேர்ந்து அந்த உணர்வை நமக்குக் கடத்துவதற்குப் பதிலாக, “இன்னும் எவ்வளவு நேரம் பேசுவாங்க?” என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகிறது.

ஒரு எமோஷனல் காட்சிக்கு வசனங்கள் மட்டும் போதாது; அந்த வசனங்கள் பார்வையாளர்களின் மனதுக்குள் இறங்க வேண்டும். அந்த இடத்தில்தான் படம் தடுமாறுகிறது.

எம்.எல்.ஏ. ராஜநாயகமாக கதிர் பாலுவுக்கு ஆரம்பத்தில் நல்ல பில்டப் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இடைவேளையில் அவரது கதாபாத்திரத்தை வைத்து கொடுக்கப்படும் பிரேக், இரண்டாம் பாதையில் பெரிய மோதல் இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகிறது.

ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ற அளவுக்கு க்ளைமாக்ஸில் அந்த கதாபாத்திரம் பயன்படுத்தப்படவில்லை. இடைவேளையில் மிரட்டலாக நின்ற வில்லன், இறுதியில் வலுவிழந்து போவது ஏமாற்றம்.

வழக்கறிஞர் மார்ட்டினாக சாபுமோன் அப்துசமத்தும், இன்ஸ்பெக்டர் தவசியாக மஹா டெல்லி கணேஷும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை ஓரளவு நிறைவாக செய்திருக்கிறார்கள்.

ஆனால் தமிழ் சினிமாவில் வில்லன் என்றாலே “எம்.எல்.ஏ. அல்லது போலீஸ்” என்ற வழக்கமான டெம்ப்ளேட் இன்னும் எத்தனை படங்களில்தான் தொடரப்போகிறதோ!

படத்தின் முக்கியமான பலவீனங்களில் ஒன்று க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி.

பீட்டர் ஹெய்ன் போன்ற அனுபவமிக்க சண்டைப் பயிற்சி இயக்குநர் பணியாற்றிய படம் என்பதால் இயல்பாகவே எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால் க்ளைமாக்ஸில் வரும் சண்டைக்காட்சிகள் மிகவும் செயற்கையாகத் தெரிகின்றன.

சண்டைக்காட்சிகளில் வேகம் இருக்கிறது; ஆனால் அந்த வேகத்திற்குள் நம்பகத்தன்மையும் உணர்ச்சியும் இல்லை. அதனால் ஹீரோ – வில்லன் மோதல் உச்சத்தைத் தொட வேண்டிய இடத்தில் படம் தடுமாறுகிறது.

“மாஸ்டர்… என்ன ஆச்சு?” என்று கேட்க வைத்துவிடுகிறது அந்த க்ளைமாக்ஸ்!

படத்தின் பெரிய ஆறுதல் கௌதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு. மலைப்பகுதிகளையும் பங்களாவைச் சுற்றியுள்ள இயற்கை அழகையும் அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.

கோவிந்த் வசந்தாவின் இசையும் சில இடங்களில் காட்சிகளுக்கு தேவையான உணர்வை கொடுக்கிறது. படம் தடுமாறும் சில இடங்களில் இசையும் ஒளிப்பதிவும் ஓரளவுக்கு கைகொடுக்கின்றன.

காதலுக்காகவும், காதலித்த பெண்ணின் கனவுக்காகவும் ஒருவன் எந்த எல்லை வரை செல்வான் என்ற அழகான அடிப்படையை வைத்துக்கொண்டு உருவாகியிருக்கிறது ‘அன்பில் அவன்’.

அந்த அடிப்படையை இன்னும் அழுத்தமான காதல் காட்சிகள், வலுவான வசனங்கள், நம்பகமான வில்லன் கதாபாத்திரம் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் க்ளைமாக்ஸ் ஆகியவற்றுடன் சொல்லியிருந்தால் படம் வேறு உயரத்தைத் தொட்டிருக்கலாம்.

அசோக் செல்வனின் உழைப்பு தெரிகிறது. ப்ரீத்தி முகுந்தனும் தனது கதாபாத்திரத்திற்கு தேவையானதை செய்திருக்கிறார். தொழில்நுட்ப ரீதியாக ஒளிப்பதிவும் இசையும் கைகொடுக்கின்றன.

ஆனால் காதலை மையமாகக் கொண்ட படத்தில் காதலே பார்வையாளர்களிடம் முழுமையாக கனெக்ட் ஆகாமல் போவதும், வில்லன் பில்டப்புக்கு ஏற்ற மோதல் இல்லாமல் போவதும், செயற்கையான க்ளைமாக்ஸ் சண்டையும் படத்தை பின்னுக்கு இழுக்கின்றன.

‘அன்பில் அவன்’ – காதலில் அழுத்தம் இருந்திருந்தால், இன்னும் மனதில் நின்றிருப்பான்!

Facebook Comments

Related Articles

Back to top button