
சமீபத்தில் வெளியான கிரைம் த்ரில்லர் திரைப்படமான ‘தி டார்க் ஹெவன்’ (The Dark Heaven) ரசிகர்கள் மற்றும் ஊடகங்களிடம் வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், படக்குழுவினர் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பை சென்னையில் நடத்தினர்.
சென்னை பிரசாத் லேபில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் ஜி. தனஞ்ஜெயன், இயக்குநர் பாலாஜி, நடிகர்கள் சித்து, தர்ஷிகா, ரித்விகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு படம் உருவான விதம், சந்தித்த சவால்கள் மற்றும் படத்திற்குக் கிடைத்த வரவேற்பு குறித்து பகிர்ந்து கொண்டனர்.
பிக்பாஸ் புகழ் சித்து, தர்ஷிகா, ரித்விகா ஆகியோருடன் பிரதீப், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால், ஆர்த்தி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ஏற்கெனவே ‘D3’ படத்தை இயக்கிய பாலாஜி, ‘தி டார்க் ஹெவன்’ படத்தை இயக்கியுள்ளார். மணிகண்டன் பிகே ஒளிப்பதிவு செய்ய, ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பையும், சக்தி பாலாஜி இசையையும் கவனித்துள்ளனர்.
கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.
நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் ஜி. தனஞ்ஜெயன், படத்தை வெளியீட்டிற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே பார்த்ததாகவும், அப்போதே படம் நல்ல த்ரில்லராக வந்திருப்பதாக இயக்குநர் பாலாஜியிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.
ஒரே நேரத்தில் பல திரைப்படங்கள் வெளியாகும் சூழ்நிலையில் ‘தி டார்க் ஹெவன்’ படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பு முக்கியமானது என்று குறிப்பிட்ட அவர், ஊடகங்களும் பார்வையாளர்களும் அளித்த ஆதரவுக்கு பாராட்டு தெரிவித்தார்.
படம் உருவானபோது ஏற்பட்ட சவால்களைப் பற்றியும் பேசிய தனஞ்ஜெயன், ஒரு படம் பெருமளவு படமாக்கப்பட்ட பிறகு அதை நிறுத்திவிட்டு மீண்டும் புதிய முயற்சியைத் தொடங்குவது எளிதான விஷயம் அல்ல என்றார்.
அத்தகைய சூழலில் நடிகர் சித்து முழுமையான ஈடுபாட்டுடன் படத்தில் இணைந்து நடித்ததை அவர் பாராட்டினார்.
நடிகர்கள் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும்போதே அனைத்து விஷயங்களையும் தெளிவாகப் பேசி ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும், அதன் பின்னர் படத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் வாரந்தோறும் அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்கள் வெளியாவதால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதாகவும், பட வெளியீடுகளை முறைப்படுத்துவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிறு முதலீட்டுப் படங்களுக்கு திரையரங்குகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இயக்குநர் பாலாஜி பேசுகையில், ‘தி டார்க் ஹெவன்’ உருவான பயணம் தனக்கு மிகவும் உணர்ச்சிகரமானது என்றார்.
ஏற்கெனவே 60 முதல் 70 சதவீதம் வரை படமாக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்பட்ட சிக்கல்களைத் தொடர்ந்து மீண்டும் படத்தை உருவாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதை நினைவுகூர்ந்தார்.
தயாரிப்பாளர்கள் ஷரண் மற்றும் கோபால், தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் படக்குழுவினர் இந்தப் படம் உருவாக முக்கியமான ஆதரவாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.
நடிகர்கள் சித்து, ரித்விகா, தர்ஷிகா உள்ளிட்டோர் படப்பிடிப்பின்போது நீண்ட நேரம் உழைத்ததாகவும் அவர் பாராட்டினார்.
ஒளிப்பதிவாளர் மணிகண்டன், எடிட்டர் ராஜா ஆறுமுகம் மற்றும் இசையமைப்பாளர் சக்தி பாலாஜி ஆகியோரின் பங்களிப்பையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார்.
குறிப்பாக ஏற்கெனவே எடுக்கப்பட்ட காட்சிகளிலிருந்து தேவையானவற்றைத் தேர்வு செய்து, மீண்டும் படமாக்கப்பட்ட காட்சிகளுடன் இணைத்து முழுமையான படமாக உருவாக்கியதில் எடிட்டரின் பங்கு முக்கியமானது என்று கூறினார்.
“இது வழக்கமான சக்சஸ் மீட் அல்ல. ஊடகங்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நடத்தப்படும் சந்திப்பு. விரைவில் பெரிய வெற்றி மற்றும் வசூல் விவரங்களுடன் மீண்டும் சந்திப்போம்,” என்று பாலாஜி தெரிவித்தார்.
நடிகை தர்ஷிகா பேசுகையில், ஒரு திரைப்படத்தின் வெற்றியில் ‘Word of Mouth’ மிகப்பெரிய பங்கு வகிப்பதாகக் கூறினார்.
படத்தை முதலில் பார்த்த ஊடகங்கள் வழங்கிய நேர்மறையான கருத்துகள் பார்வையாளர்களிடம் சென்றடைந்ததாகவும், அதன் மூலம் பலர் படத்தைப் பார்க்க திரையரங்குகளுக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.
ஒரு நடிகருக்கு முதல் படம் எப்போதும் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட தர்ஷிகா, எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு கேட்டாலும் ‘தி டார்க் ஹெவன்’ தான் தனது முதல் படம் என்று பெருமையாகச் சொல்வேன் என்றார்.
நடிகை ரித்விகா பேசுகையில், ஊடகங்களின் விமர்சனங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகும் ரீல்ஸ் உள்ளிட்டவை படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவியதாகத் தெரிவித்தார்.
படத்திற்கு தற்போது கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சி அளித்தாலும், இன்னும் அதிகமான பார்வையாளர்களிடம் படம் சென்றடைய வேண்டும் என்றார்.
“எந்தப் படமாக இருந்தாலும் திரையரங்கிற்கு வந்து பாருங்கள். அப்போதுதான் முழுமையான திரையரங்க அனுபவம் கிடைக்கும். OTT-யில் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டாம். மக்கள் திரையரங்கிற்கு வந்தால்தான் சினிமா வளர்ச்சி பெறும்,” என்று ரித்விகா கேட்டுக்கொண்டார்.
நிகழ்வில் நடிகர் சித்து தனது திரைப்பயணம் குறித்து உணர்ச்சிபூர்வமாகப் பேசினார்.
சினிமாவில் வாய்ப்பு தேடி சாலிகிராமம், தசரதபுரத்தில் ஒரு சிறிய அறையில் தங்கி, பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு தனது புகைப்படங்களுடன் வாய்ப்பு தேடி அலைந்த நாட்களை நினைவுகூர்ந்தார்.
சினிமா வாய்ப்புக்காக காத்திருந்த காலத்தில் பசி, அவமானம் உள்ளிட்ட பல சவால்களைச் சந்தித்ததாகவும் அவர் கூறினார்.
தன்னுடன் வாய்ப்பு தேடியவர்கள் பின்னர் திரைப்படங்களில் நடித்து வெற்றி பெறுவதைப் பார்த்தபோது மகிழ்ச்சி இருந்தாலும், தனக்கான வாய்ப்பு எப்போது வரும் என்ற ஏக்கமும் இருந்ததாக சித்து தெரிவித்தார்.
தற்போது பல ஊர்களில் ‘தி டார்க் ஹெவன்’ படத்திற்கு கிடைக்கும் வரவேற்பையும், திரையரங்குகளில் ரசிகர்களின் ஆதரவையும் நேரில் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகக் கூறினார்.
“இந்தத் தருணத்திற்காக நான் 14 ஆண்டுகள் காத்திருந்தேன். சினிமாவை நாம் எந்த அளவுக்கு விரும்புகிறோமோ, அது நம்மைக் கைவிடாது என்பதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். இது எனக்கு ஒரு ஆரம்பம்தான்,” என்று சித்து நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தனது இந்தப் பயணத்தில் முக்கிய காரணமாக இருந்த இயக்குநர் பாலாஜிக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
இந்த நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பிகே, தயாரிப்பாளர்கள் ஷரண் மற்றும் கோபால், இசையமைப்பாளர் சக்தி பாலாஜி, நடிகர்கள் வேல ராமமூர்த்தி, ஜெயக்குமார், ஆர்த்தி, சுமித்ரா, பிரதீப், விவேக், செல்வா, மனோஜ், அலெக்ஸ், டேனி உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.
‘தி டார்க் ஹெவன்’ படத்திற்கு கிடைத்த ஆதரவுக்கு ஊடகங்களுக்கும் ரசிகர்களுக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.





