
அக்ரிலேண்ட் பிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் ”தெரிஞ்சா காதலிங்க”.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் & தயாரிப்பு – M.கஜேந்திரன் B.A.
இணை தயாரிப்பு : பேச்சியம்மன் K.S சுப்புராஜ், J.சுதாமைகேல்ராஜ்,
கிரண், T. விபின், A.சாதுல்பிரான், அஜன்யா.R , ஆதிரா.K, தீபாஆண்டனி, மீசை வெள்ளைப்பாண்டி, நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த காண்ட்ராக்டர் மைக்கேல்ராஜ் மற்றும் ஆண்டிபட்டியை சேர்ந்த தொழில் அதிபர் B.R.கண்ணன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
கோல்டு சந்துரு என்பவர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். C.M.மகேந்திரா படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
வீபின்ரெஜி என்பவர் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
கிரண், விபின், சாதுல்பிரான் மூவரும் நண்பர்கள். ஒரே ரூமில் வசித்து வருகின்றனர். இதில், கிரண் ஆன்மிகத்தில் நாட்டம் அதிகமுள்ளவராக இருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, கிராமத்தில் தனது தாத்தா மீசை வெள்ளைப்பாண்டியுடன் வாழ்ந்து வருகிறார் அஜன்யா. தாய் தந்தை இல்லாமல், தனது தாத்தா அரவணைப்பில் வளர்கிறார் அஜன்யா.
படிப்பிலும் புத்திசாலித்தனத்திலும் கெட்டிக்காரியாக விளங்குகிறார் அஜன்யா. இந்த சமயத்தில், நாடோடியாக வரும் கிரணுக்கு ஆதரவு கொடுக்கிறார் மீசை வெள்ளைப்பாண்டியன்.
கிரணும் அஜன்யாவும் நெருங்கிய நண்பர்களாக பழகி வருகின்றனர். சொத்துத் தகராறில் மீசை வெள்ளைப்பாண்டியனை ஒருவர் குத்தி கொலை செய்துவிடுகிறார். அஜன்யாவையும் கொல்ல திட்டமிட்ட நிலையில், அஜன்யாவை அழைத்துக் கொண்டு ஓட்டம் பிடித்துவிடுகிறார் கிரண்.
அஜன்யாவை அழைத்துக் கொண்டு தனது நண்பர்கள் தங்கியிருக்கும் வீட்டிற்கு அழைத்து வருகிறார் கிரண். கிரண், விபின், சாதுல்பிரான் மற்றும் அஜன்யா என அனைவரும் நன்றாக பழகி வருகின்றனர்.

இதில், விபின் அஜன்யாவை ஒருதலை காதலாக காதலிக்கிறார். இந்த காதல் இவர்களின் நட்பிற்குள் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதே படத்தின் மீதிக் கதை.
படத்தில் நடித்திருந்த அனைத்து கதாபாத்திரங்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை மிக அழகாக செய்து முடித்திருக்கின்றனர். கிரண், விபின் மற்றும் சாதுல்பிரான் மூவரும் அந்தந்த கதாபாத்திரங்களாகவே மாறி, கதைக்கு முக்கிய பில்லராக இருந்திருக்கின்றனர்.
நாயகி அஜன்யா, அழகோடு சேர்ந்து நடிப்பும் பெரிதாகவே கைகொடுத்ததால், படத்திற்கு கூடுதல் அழகு தான். படம் முழுக்க முழுக்க அஜன்யாவின் முகத்தை மட்டுமே மையப்படுத்தியதால், படம் முடிந்தும் அவரின் முகம் மனதை விட்டு நீங்கா வண்ணம் நிலைத்திருந்தது..
ஆதிரா.K, தீபாஆண்டனி, மீசை வெள்ளைப்பாண்டி, மைக்கேல்ராஜ், B.R.கண்ணன் உள்ளிட்ட நட்சத்திரங்களும் தங்களது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
படம் முழுக்க அநேக காட்சிகள் முகத்தை மட்டுமே குறிவைத்து ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை சற்று ஒளிப்பதிவாளர் தவிர்த்திருந்திருக்கலாம்.
படம் காட்சிப்படுத்திய இடங்கள் அனைத்துமே இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக இருந்தது.
C.M.மகேந்திரா அவர்களின் இசை படத்திற்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது.

அழகான காதல் கதையாக படத்தினை இயக்கியிருக்கிறார் இயக்குனர். காதல் என்பது என்ன.? காதல் யாரையும் வற்புறுத்தி வருவதல்ல என்பதையும் இந்த படத்தின் வாயிலாக இயக்குனர் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார்.
பெண்ணின் மனதை புரிந்து கொண்டு, அவர்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு அதன்பிறகு வரும் காதலை வெளிப்படுத்தும் விதத்தில், ஒரு பெண்ணின் மனதில் எளிதாக ஒரு ஆண் என்பவர் ஆட்சி செய்வான் என்பது இப்படத்தின் வாயிலாக இயக்குனர் கொடுத்த ஒரு செய்தி..
மொத்தத்தில்,
தெரிஞ்சா சொல்லுங்க – காதல்





