இயக்கம்: தருண் மூர்த்தி
நடிகர்கள்: மோகன்லால், ஷோபனா, மனியன்பில்லா ராஜூ, இர்ஷாத் அலி, பிரகாஷ் வர்மா, பினு பப்பு, பர்ஹான் பாசில், தாமஸ் மேத்யூ, அம்ரிதவர்ஷினி
ஒளிப்பதிவு: ஷாஜி குமார்
இசை: ஜேக்ஸ் பிஜோய்
எடிட்டிங்: ஷபீக் நிஷாத் யூசுப்
தயாரிப்பு: ரேஜாபுத்ரா விஷுவல் மீடியா
எழுத்து: கே ஆர் சுனில், தருண் மூர்த்தி
கதைப்படி,
வீட்டு தொழில் செய்யும் மனைவி ஷோபனா, கல்லூரி படிக்கும் மகன் தாமஸ் மேத்யூ, பள்ளி செல்லும் மகள் அம்ரிதவர்ஷினி என தன்னுடைய குடும்பமே உலகம் என்று வாழ்ந்து வருபவர் மோகன்லால்.
குடும்பத்தின் மீது இருக்கும் பாசத்தைப் போலவே, தான் வைத்திருக்கும் பழைய அம்பாசிடர் கார் மீதும் அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார்மோகன்லால்.
அந்த ஏரியாவில் அதை வைத்து டாக்சி ஓட்டி தனது பிழைப்பை நடத்தி வருகிறார் மோகன்லால். பல வருடங்களுக்கு முன் சென்னையில் சினிமாவில் டூப் ஸ்டண்ட் கலைஞராக வேலை பார்த்தவர் மோகன்லால்.
இந்நிலையில், வண்டியில் சிறிய பழுது காரணமாக மெக்கானிக் செட்’டில் கொண்டு விடுகிறார் மோகன்லால். அடுத்தநாள், அந்த வண்டியானது போலீஸ் நிலையத்தில் நிற்கிறது. மெக்கானிக் செட்’டில் வேலை பார்த்தவன், அந்த காரில் கஞ்சா வைத்து பிடிபட்டதாக காரை பிடித்து வைத்திருக்கிறார் எஸ் ஐ ஆக வரும் பினு.
எந்த காரணத்திற்காகவும் காரை தர முடியாது என்று கூறி விடுகிறார் பினு. அதன்பிறகு அங்கு வரும் இன்ஸ்பெக்டர் பிரகாஷ்வர்மாவிடம் மோகன்லால் தனது நிலையை கூற, காரை திருப்பி தர கூறிவிடுகிறார் பிரகாஷ்வர்மா.

அதனைத் தொடர்ந்து தான் ஒரு திருமணத்திற்கு செல்லவிருப்பதாகவும் அங்கு தங்களை கொண்டு செல்லுமாறும் மோகன்லாலிடம் பிரகாஷ்வர்மா கேட்க, அவரும் ஓகே சொல்லி விடுகிறார்.
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் செல்லுமாறும் பிரகாஷ்வர்மா கூற, மோகன்லால் கடும் எதிர்ப்பையும் மீறி காட்டிற்குள் சென்ற அவர்கள், மோகன்லாலுக்கு தெரியாமல் அவரது வண்டியின் பின்னால் மூட்டையாகக் கட்டி ஏற்றிக் கொண்டு வந்த ஒரு ஆணின் சடலத்தை மலையிலிருந்து கீழே போடுகின்றனர் பிரகாஷ் வர்மாவும் பினுவும்.
இதனை அறிந்த மோகன்லால் அதிர்ச்சியாகிறார். இதனை வெளியே கூறினால், உன்னையும் குடும்பத்தையும் அழித்துவிடுவேன் என்று மோகன்லாலுக்கு கடும் எச்சரிக்கை செய்கிறார் பிரகாஷ்வர்மா.
அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
பல வருடங்களுக்குப் பிறகு மோகன்லலைன் உட்சபட்ச நடிப்பின் அழகை இப்படத்தில் காணலாம். அப்படியொரு யதார்த்தமான நடிப்பைக் கொடுத்து அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார்.
குடும்பத்தோடு மகிழ்ச்சியாக துள்ளிக் குதித்து ஜாலியாக இருக்கும் தருணமாக இருக்கட்டும், குடும்பத்திற்கு ஒன்று என்றதும் பாத்ரூமில் அழுது தனது பாசத்தை வெளிப்படுத்தும் இடமாக இருக்கட்டும் என பல இடங்களில் கைதட்டல் கொடுக்கும் நடிப்பைக் கொடுத்திருக்கிறார் மோகன்லால். போலீஸ் ஸ்டேஷனில் துள்ளிக் குதிக்கும் காட்சியில் திரையரங்குகளில் விசில் சத்தம் விண்ணைப் பிளக்கிறது.
மோகன்லாலின் மனைவியாக ஷோபனா கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். தனக்குக் கொடுக்கப்பட்டதை அளவாக செய்து முடித்திருக்கிறார்.
படத்தின் மிகப்பெரும் பலமே இன்ஸ்பெக்டராக நடித்திருந்த பிரகாஷ்வர்மா தான். தனது பாடி லேங்குவேஜ்’ல் அனைவரையும் மிரள வைக்கிறார் பிரகாஷ்வர்மா. இவரைக் கண்டாலே கோபம் தான் வருகிறது என்று கூறும் அளவிற்கு தனது கேரக்டரை மிகப் பொருத்தமாக பொருந்தியிருந்தார் பிரகாஷ்வர்மா.

வில்லனுக்கான பவர் ஏறும் போது தான் ஹீரோவிற்கான பவர் அதை விட பல மடங்கு ஏறும். அதை இப்படத்தில் நன்றாகவே கடைப்பிடித்திருக்கிறார்கள்.
மேலும் எஸ் ஐ’ஆக நடித்திருந்த பினுவும் தனது கேரக்டரை கச்சிதமாக செய்து முடித்திருந்தார். அவரது கண்கள் அக்கதாபாத்திரத்திற்கு மிகச்சரியான பொருத்தம்.
மேலும், படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் தங்களது வேலையை சரியாக செய்து முடித்திருந்தனர்.
எளிமையாக குடும்ப பாங்கான படமாக ஆரம்பித்து அதன்பின் நடக்கும் காட்சி அனைத்தும் ஒரு சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் போன்று சென்று நம்மை சீட்டின் நுனியில் அமர வைக்கும் ஒரு படைப்பைக் கொடுத்து விட்டார் இயக்குனர். மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு மோகன்லாலின் நடிப்பிற்கு சரியான தீனி கொடுத்திருக்கும் படம் இதுவாகும்.
குடும்பத்தோடுச் சென்று திரையரங்குகளுக்குச் சென்று பார்க்கும்படைப்பாக இப்படம் இருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
படத்திற்கு ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை இருபெரும் தூணாக வந்து நிற்கிறது. ஒவ்வொரு இடத்திலும் இசையமைப்பாளர் தனது திறமையை நிரூபித்துக் கொண்டே இருந்தார். அதிலும் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி அல்டிமேட்.
ஒளிப்பதிவிற்கென்று நன்றாகவே மெனக்கெடல் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
தொடரும் – ஒற்றைக் காட்டு யானையின் வெறியாட்டம்..




