
பிரபதீஷ் சாம்ஸ் இயக்கத்தில் வேதிகா, இனிகோ பிரபாகர், பிரதாப் போத்தன், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், சாந்தினி, ஹரீஷ் பெராடி, செண்ட்றாயன், பூஜா சங்கர், வேலு பிரபாகரன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் இந்த “கஜானா”
இசையமைத்திருக்கிறார் அச்சு ராஜாமணி. ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள் கோபி துரைசாமி மற்றும் வினோத் . ரியாஸ் படத்தொகுப்பினை கவனித்திருக்கிறார்.
நாகமலையில் புதையல் ஒன்று இருப்பதாகவும் அதை தேடிச் செல்லும் பலர் மர்மமான முறையில் இறந்து விடுவதாகவும் தெரிந்து கொண்ட வேதிகா, அதனைப் பற்றி அறிந்து கொள்ள பழம்பெரும் எழுத்தாளர் ஹரீஷ் பெராடியை தேடிச் செல்கிறார்.
அங்கு, அவர் வைத்திருக்கும் புத்தகத்தை படிக்க ஆரம்பிக்கிறார் வேதிகா. கதை ப்ளாஷ் பேக் செல்கிறது. நாக வம்சத்தைச் சேர்ந்த நாயகன் இனிகோ பிரபாகர் நாக மலையினைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு டீமை காட்டிற்குள் அனுப்புகிறார்.
சென்ற டீமோ, புதையலை தேட ஆரம்பிக்கிறது. அதனைத் தொடர்ந்து புலி, நாகம், குரங்கு, யானை என பல விலங்குகள் இவர்களை தாக்க ஆரம்பிக்கிறது. அதனைத் தொடர்ந்து அங்கு வரும் இனிகோ பிரபாகர், புதையல் தனக்குத் தான் சொந்தம் என்றும் அதனைத் தேடிச் செல்கிறார்.
புதையலை அடைய வேண்டும் என்றால் அதன் திறவுகோலான ஈட்டி வேண்டும் என்று அதனைத் தேடி அலைகிறார் இனிகோ பிரபாகர்.
இறுதியில், புதையல் ஒன்று இருப்பது உண்மைதானா.? அந்த புதையலின் மர்மம் தான் என்ன.?? புதையலை எடுக்க வரும் நபர்களை கொல்வது யார்.? புதையலை காப்பது யார்.?? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் விடை வைத்திருக்கிறார் இயக்குனர்.

கதையின் நாயகனாக நடித்து அசத்தியிருக்கிறார் இனிகோ பிரபாகர். ஆரம்பத்தில் சற்று கதாபாத்திரத்திற்குள் செல்ல சிரமப்பட்டாலும், அடுத்தடுத்து வரும் காட்சிகளை மிக எளிதாக கையாண்டு தனது நடிப்பின் திறமையை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார் இனிகோ பிரபாகர். பல படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இனிகோ, இப்படத்தில் கதையின் நாயகனாக படம் முழுக்க வந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
முதல் பாதியில், காட்சிகள் சற்று நம்மை சோதித்தாலும் காட்சிகள் நகர நகர நம்மையும் அந்த மர்ம தேசத்துக்குள் பயணப்பட வைத்துவிட்டார் இயக்குனர்.
யோகிபாபு மற்றும் மொட்டை ராஜேந்திரனின் காமெடி ஆங்காங்கே எட்டிப் பார்க்க வைத்தது இயக்குனரின் திறமை. காமெடி ரசிக்கும்படியாக இருந்தது.
மேலும், இரண்டாம் பாதியில் நம்மை அதிகமாகவே ரசிக்க வைக்க காட்சிகள் ஏராளம். புதையலானது எப்படி வந்தது.? அந்த புதையலில் என்ன இருக்கிறது என்பதற்கான 2டி காட்சிகள் நம்மை மெய் சிலிர்க்க வைத்தது. யானை, புலி, பாம்பு என விலங்குகளை காட்டிய விதமும் பிரமிப்பு தான்.
ஆரி சூரி கதையில் ஆரம்பித்து வீரபத்திரன் கதை வரையிலான காட்சியமைப்பை மிகவும் கச்சிதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். இதற்காகவே இயக்குனரை வெகுவாக பாராட்டலாம்.

இரண்டாம் பாதியில் கருட தேசத்தைச் சேர்ந்தவராக வரும் சாந்தினியும் நடிப்பில் மிளிர்கிறார். சில காட்சிகள் என்றாலும் தனக்கானதை அழகாக செய்திருக்கிறார் வேதிகா.
க்ளைமாக்ஸ் காட்சியில் யாழியின் வெறியாட்டம் ரசிக்க வைத்தது. தமிழனின் வரலாறை வெளிக்கொண்டு வந்ததற்காக இயக்குனரை பெரிதாகவே பாராட்டலாம்.
பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரும் பலம் என்றே கூறலாம். சின்ன சின்ன குறைகள் ஆங்காங்கே எட்டிப் பார்த்தாலும், கதையின் நோக்கத்திற்காகவும், திரைக்கதையின் வேகத்திற்காகவும் நிச்சயம் ஒருமுறை திரையரங்கிற்கு விசிட் அடிக்கலாம்.
கஜானா – தமிழனின் பெருமை





