Spotlightவிமர்சனங்கள்

தொரட்டி; விமர்சனம் 3.5/5

நாயகன் மாயன் (ஷமன் மித்ரு) மற்றும் நாயகி செம்பொண்ணு (சத்யகலா) இரு குடும்பத்தினர்களும் செம்மறி ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வருகின்றனர். ஊர் ஊராக சென்று கிடை போட்டு பிழைப்பு நடத்தும் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

மாயனுக்கு உள்ளூரில் திருட்டுத் தொழிலை செய்து வரும் செந்தட்டி, ஈப்புலி, சோத்துமுட்டி மூவருடனும் நட்பு கிடைக்கிறது. மூவருடனும் சேர்ந்து மாயன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறார்.

சிறிய திருட்டு தொழிலை செய்து வந்த செந்தட்டி, ஈப்புலி, சோத்துமுட்டி மூவரும் பெரிதாக கொள்ளையடிக்க திட்டமிட்டு, போலீஸில் சிக்கிக் கொள்கின்றனர். இவர்கள் போலீஸில் சிக்குவதற்கு நாயகி செம்பொண்ணு ஒருவகையில் காரணமாக இருக்கிறார்.

மாயனுக்கும் செம்பொண்ணுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டால், மாயன் குடிப்பழக்கத்தை விட்ட விடுவான் என்று மாயனின் பெற்றோர்கள் முடிவெடுத்து, இருவருக்கும் திருமணம் செய்து வைக்கின்றனர்.

சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி வருகின்றனர் மாயனும் செம்பொண்ணும். ஜெயில் தண்டனை முடித்து வெளியே வரும் மூன்று திருடர்களும் செம்பொண்ணை தீர்த்துகட்ட முடிவு செய்கின்றனர்.

அதன் பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை…

நாயகனாக வரும் ஷமன் மித்ரு, கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். ஆடு மேய்க்கும் தொழில் செய்வதாக இருக்கட்டும், குடிப்பழக்கத்து அடிமையாகி ஒரு குடிகாரனாக வருவதாக இருக்கட்டும், நாயகியுடன் காதல் புரிவதாக இருக்கட்டும், க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் சண்டைக் காட்சியாக இருக்கட்டும் நாயகனின் மெனக்கெடலை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

படத்தின் மிகப்பெரிய பலம் என்றால், அது நாயகி சத்யகலா தான். சில மாதங்களுக்கு முன் வெளியான நெடுநல்வாடை படத்திற்கு உயிரோட்டமாக இருந்தவர் அஞ்சலி நாயர். அதேபோல் தான், இப்படத்திற்கும் ஒரு உயிரோட்டம் என்றால் அது சத்யகலா தான். மிகவும் எதார்த்தமான நடிப்பில் நம் அனைவரின் மனதையும் கவர்ந்து இழுத்துவிட்டார். நான் தான் பெரிய நடிகை என்று கோலிவுட்டில் சுற்றி வரும் நடிகைகள் இவரிடம் சில நாட்கள் பயிற்சி கூட எடுத்து வரலாம்.

முகத்தில் துளிஅளவு கூட அலங்காரம் இல்லாமல், இயற்கையான நடிப்பை வெளிப்படுத்தி, திரையரங்கினை விட்டு வெளியே வந்தும் அழியாத ஒரு காவியமாகவே மனதில் பதிந்து நிற்கிறார்.

மேலும், மூத்த நடிகர் அழகு தனது கதாபாத்திரத்தை பூர்த்தியாகவே செய்திருக்கிறார். கிராமபுறத்தில் வாழ்ந்தவர்கள் மட்டுமே பார்த்திருக்க முடியும், செம்மறி ஆடு மேய்ப்பவர்கள் எப்படிப்பட்ட மேனரிசத்தை கையாள்வார்கள் என்று, அதே போல் வாழ்ந்தே காட்டியிருக்கிறார் அழகு.

அதுமட்டுமல்லாமல், வெண்ணிலா கபடி குழு ஜானகி, ஆடுகளம் ஸ்டெல்லா,
குமணன், ஆகியோரும் படத்தின் கதைக்கு தேவையான கதாபாத்திரங்களாகவே இருந்தனர்.

திருட்டு மட்டுமே தொழிலாக செய்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்த சுந்தர் ராஜ்,
சீலன், முத்துராமன் மூவரும் சரியான தேர்வு தான். தனது வில்லத்தனத்தையும் மிக தெளிவாகவே செய்து முடித்துள்ளனர்.

வேத் சங்கரின் இசையில் சிநேகனின் பாடல் வரிகளில் அனைத்து பாடல்களும் கிராமத்து மண்வாசனை வீசும் இதமான தென்றல் தான்.

ஜித்தன் ரோஷனின் பின்னனி இசை கதை ஓட்டத்திற்கு ஈடு கொடுத்து, இதமான பயணத்தை கொடுத்திருக்கிறது.

குமார் ஸ்ரீதரின் ஒளிப்பதிவு கிராமப்புற அழகியலை அழகாக கண்முன்னே நிறுத்தியிருக்கிறது.

அழகான காதல், நட்பு, துரோகம், வாழ்வியல் என ஒருசேர ஒரு விருந்தை படைத்திருக்கிறார் இயக்குனர் மாரிமுத்து…

தலைவலி கொடுக்கும் படங்களின் வரிசைக்கு நடுவில் ஒரு ரோஜாவாக தென்படுகிறது தொரட்டி..

தொரட்டி; பதமான வாழ்வியலை, இதமாக பருக வைக்கும்…

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker