
நடன இயக்குனரான பிருந்தாவின் இயக்கத்தில் ஹிரிது ஹருன், சிம்ஹா, ஆர் கே சுரேஷ், முனிஷ்காந்த் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “குமரி மாவட்டத்தின் தக்ஸ்”. இப்படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்த நிலையில், படத்தில் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா இல்லையா என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்.
கதைப்படி,
ஊரில் கந்துவட்டி, அடிதடி செய்து தாதாவாக உருவெடுத்து நிற்கும் தேனப்பனிடம், கணக்காளராக வேலை செய்கிறார் நாயகன் ஹிரிது. தனது தந்தை பார்த்த வேலையை அவரும் அப்படியே தொடர, வாய் பேச முடியா நாயகி அனஸ்வரா ராஜனை பார்த்ததும் காதல் கொள்கிறார் நாயகன்.
ஒருதலை காதலானது செல்ல செல்ல இருதலை காதலாக மாறுகிறது. அனஸ்வராவை ரவுடி ஒருவன் சீண்ட, வேகத்தில் நாயகன் ஹிரிது அவரை கொலை செய்து விடுகிறார்.
இதனால் சிறைக்குச் சென்று விடுகிறார். கொலை செய்த குற்றத்திற்காக பல வருடங்கள் ஜெயிலில் இருக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் ஜெயிலில் இருந்து தப்பிக்க ப்ளான் போடுகிறார் ஹீரோ ஹிரிது.

இந்த ப்ளானுக்காக சிம்ஹா, முனீஸ்காந்தோடு இன்னும் சிலரை கூட்டணிக்காக சேர்த்துக் கொள்கிறார்.
அந்த ஜெயிலின் மிகவும் கண்டிப்பான அதிகாரியாக வரும் ஆர் கே சுரேஷின் கண்ணில் மண்ணைத் தூவி எப்படி இவர்கள் அங்கிருந்து தப்பித்தார்கள் என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் ஹிரிது, பார்ப்பதற்கு அழகாகவும் காட்சிகளில் மிரட்டலாகவும் தெரிகிறார். கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்து காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். நடனம், ஆக்ஷன், காதல் என மூன்றிலும் முத்திரை பதித்திருக்கிறார் ஹிரிது. சினிமாவில் நிச்சயம் இவருக்கான இடம் காத்திருக்கிறது. அதை விரைவில் எட்டுவார்.
நாயகிக்கான இடம் இப்படத்தில் பெரிதாக இல்லை என்றாலும் காரணியாக இருந்து கொடுத்த கேரக்டரை அழகோடு கலந்த அமைதியாக கொடுத்து அசத்தியிருக்கிறார்.
படத்தின் கதையில் பெரிதான ஒரு ஈர்ப்பு எட்டவில்லை என்றாலும், எடுக்கப்பட்ட விதம் மற்றும் ஒளிப்பதிவு படத்தை இன்னும் சிறிது நேரம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை எட்ட வைத்து விடுகிறது.
ஒவ்வொரு காட்சிக்கும் எடுக்கப்பட்டிருக்கும் மெனக்கெடல் நன்றாகவே தெரிகிறது. பல படங்களுக்குப் பிறகு ஆர் கே சுரேஷின் மிரட்டலான நடிப்பை இப்படத்தில் பார்க்கலாம். சிம்ஹாவின் காட்சிகள் அதிரடி கொடுத்திருக்கிறது. முனிஸ்காந்த் பெஸ்ட்..

பின்னணி இசையில் மேஜிக் காட்டியிருக்கிறார் சாம் சி எஸ். கதையோடு பயணித்து நம்மை கவனம் பெற வைத்துள்ளது.
க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் சண்டைக் காட்சி மிகவும் யதார்த்தமாக இருந்தது படத்திற்கு மிகப்பெரும் பலம்.
இயக்குனரின் கைவண்ணம் மேக்கிங்கில் தெரிகிறது. ஆவேசத்தில் தவறுகள் செய்து ஜெயிலுக்குச் செல்லும் குற்றவாளிகள் ஜெயிலில் இருந்து தப்பிச் சென்று நல்ல வாழ்க்கை வாழ்வது போன்ற முடித்திருப்பது எந்த வகையில் ஏற்றுக் கொள்வது என்று தெரியவில்லை.!?
மற்றபடி,
தக்ஸ் – கிங் ஆஃப் மேக்கிங்..



