
சீனிவாசன் இயக்கத்தில் திருவருள் ஜெகநாதன் தயாரிப்பில் ‘சண்டியர்’ ஜெகன்,
ஈடன், ஏ.வெங்கடேஷ் ,பாலசரவணன் ,பூ ராமு ,ராமச்சந்திரன் (ராம்ஸ்), வைஷாலி , ஸ்ரீநிகிலா, ஐஸ்வர்யா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் துரிதம்.
கதைப்படி,
சென்னையில் வாடகை கார் டிரைவராக வருகிறார் ஜெகன். இவரது காரில் நாயகி ஈடன் உடன் அவரது தோழிகளான வைஷாலி , ஸ்ரீநிகிலா, ஐஸ்வர்யா உள்ளிட்ட நால்வரும் தினசரி அலுவலகத்திற்கு பணிக்குச் செல்வது வழக்கமான ஒன்று.
நாயகி ஈடனை ஒருதலைபட்சமாக காதலிக்கிறார் ஜெகன். ஈடனின் தந்தையான வெங்கடேஷ், கிராமத்தில் இருந்து கொண்டு மணிக்கொருமுறை தனது மகளுக்கு போன் செய்து எங்க இருக்க.? என்ன பண்ட்ற.? என்ற டார்ச்சர் கொடுக்கும் ஒரு குணம் படைத்தவர்.
இந்நிலையில், தீபாவளி நெருங்கி விட இதோடு சென்னையை விட்டு சென்று விட தனது வேலையை ராஜினாமா செய்து விடுகிறார் ஈடன்.. ஈடன் இனி தனது காரில் வரமாட்டார் என்று அறிந்து காதல் தோல்வியாக எண்ணிக் கொண்டு கவலையில் இருக்கிறார் ஜெகன்.
அதே சமயம், ஊரில் கீழ் சாதி மேல் சாதி மோதலில் தனது தந்தையை பறி கொடுத்துவிட்டு சென்னையில் பணிபுரிந்த ராம்ஸ் தீபாவளிக்கு தனது காருக்கு பயணப்படுகிறார்.
எதிர்பாராதவிதமாக, நாயகி ஈடனை நாயகன் ஜெகன் சென்னையில் இருந்து பைக்கில் கூட்டிச் செல்லும் நிலை ஏற்படுகிறது.
செல்லும் வழியில் நாயகி ஈடனை காரில் கடத்தி விடுகிறார் ராம்ஸ்.
அதன்பிறகு நாயகன் நாயகியை கண்டுபிடித்தாரா.? நாயகியின் தந்தை வெங்கடேஷுக்கு உண்மை தெரிந்ததா.? நாயகனின் காதலை நாயகி ஏற்றுக் கொண்டாரா.? என்பதே படத்தின் மீதிக் கதை.
சண்டியர் என்ற ஹிட் படத்தில் நடித்த ஜெகனே இந்த படத்தின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். கதைக்கான ஹீரோவாக ஜொலித்திருக்கிறார் ஜெகன். நீண்ட வசனம், கிடைக்காத காதலுக்கான ஏக்கம், ஆக்ஷன் என எல்லா இடத்திலும் இறங்கி அடித்திருக்கிறார்.
உடல்மொழியும் ஜெகனுக்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது. ஜெகனுக்கும் பாலசரவணனுக்குமான காமெடி காட்சிகள் நன்றாகவே வொர்க்-அவுட் ஆகியுள்ளது.
பாலசரவணன், அதிரி புதிரியாக ஓடும் கதைக்களத்தில் ஒரு ரிலாக்சேஷனாக வந்து நிற்கிறார். நாயகி ஈடன், கதைக்கேற்ற ஜோடியாக வந்திருக்கிறார்.
எமோஷன் காட்சிகளில் நன்றாகவே நடித்து காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். இப்படியுமா ஒரு தந்தை இருப்பார் என்ற எண்ணம் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் வெங்கடேஷ். தனது சீனியர் நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் தந்தையான வெங்கடேசிடம் நாயகி ஈடன் சிக்கி விடுவாரோ என்ற ஒரு படபடப்பை கொண்டு வந்து காட்சியை விறுவிறுப்பாக்கி வைத்துவிட்டார் இயக்குனர்.
கிராமத்தில் நடக்கும் ஜாதி மோதல், சிட்டியில் நடக்கும் காதல் இரண்டையும் பைபாஸ் ரோட்டில் சேர்த்திருக்கிறார் இயக்குனர்.
படம் முழுக்க ரோட்டில் நடக்கும்படியான திரைக்கதையை கொண்டு வடிவமைத்திருக்கிறார் இயக்குனர்.
கதையிலும், க்ளைமாக்ஸ் காட்சியிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் துரிதம் இன்னும் வேகம் எடுத்திருந்திருக்கும்…
க்ளைமாக்ஸில் நாயகி நாயகனை பார்த்த கணம் – அழகு
வாசன் & அன்பு டென்னிஸின் ஒளிப்பதிவு படத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.
இருவரும் பைக்கில் செல்லும் காட்சி, வேனில் பின்னால் இருவரும் அமர்ந்திருந்த காட்சி, பைக் & ஆட்டோ சந்தித்து கொள்ளும் காட்சி என பேவரைட் ஒளிப்பதிவை கச்சிதமாகவே கொடுத்திருக்கின்றனர்.
நரேஷின் பின்னணி இசை பரபரக்க வைத்த கதையின் ஓட்டத்திற்கு கைகொடுத்திருக்கிறது.
துரிதம் – பரபரக்க வைத்த ஒரு பைக் ரைட்…