
ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி நடிப்லில் கத்துக்குட்டி பட இயக்குனர் இரா. சரவணன் இயக்கத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் படம் தான் “உடன்பிறப்பே”.
ஜோதிகா & சசிகுமார் இருவரும் அண்ணன் தங்கை. பாசமலர் போன்று அளவுக்கதிகமான பாசம் வைத்திருப்பவர்கள். ஜோதிகாவை சமுத்திரக்கனிக்கு மணமுடித்து வைக்கிறார் சசிக்குமார். ஊர் பிரச்சனைக்காக முதல் ஆளாய் வருபவர் சசிகுமார். பிரச்சனை என்றால் முதல் ஆளாய் ” கை” வைப்பவர் சசிகுமார்.
சட்ட ரீதியாக மட்டுமே பிரச்சனைகளை கையாள வேண்டும் என்று ஓடிக்கொண்டிருப்பவர் வாத்தியாராக வரும் சமுத்திரக்கனி.
சமுத்திரக்கனியின் பத்து வயது மகன் விபத்தில் இறந்துவிட, சசிகுமாரின் சண்டை சச்சரவு தான் இதற்கு காரணம் என்று கூறி பதினைந்து வருடங்கள் சசிகுமாருடன் பேசாமல் இருக்கிறார் சமுத்திரக்கனி.
ஜோதிகாவையும் சசிகுமாரையும் பதினைந்து வருடங்கள் பிரித்து வைக்கிறார் சமுத்திரக்கனி.
மீண்டும் இந்த பாசப்பறவைகள் இணைந்தார்களா , இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை…
தனது கதாபாத்திரத்தை ரம்மியமாகவும் கம்பீரமாகவும் செய்து முடித்திருக்கிறார் சசிக்குமார். ஆக்ஷன், பாசம் என அனைத்து சென்டரிலும் தட்டி தூக்கியிருக்கிறார். வசனங்கள் ஒவ்வொன்றும் உச்சரிப்பில் க்ளாப்ஸ் வாங்குகிறார்.
மாதங்கி கதாபாத்திரத்தில் அழகாகவும் ஜோதியாகவும் ஜொலித்திருக்கிறார் ஜோதிகா. படத்தின் முதல் பாதியில் காட்சிகள் பலவற்றில் தோன்றி டயலாக்குகளை தெறிக்கவிடும் ஜோதிகா, இரண்டாம் பாதியில் சைலண்ட் ஆகி விடுகிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் டாப் கியர் போட்டு தூக்கியிருக்கிறார் ஜோ.. 50 வது படத்தின் தேர்வை அட்டகாசமாக தேர்ந்தெடுத்திருக்கிறார்.
நேர்மையான மனிதராக சமுத்திரக்கனி அழகாக தனது கேரக்டரை செய்து முடித்திருக்கிறார்..
காமெடி என்ற பெயரில் சூரி தான் நம்மை கொஞ்சம் இல்ல அதிகமாகவே கடுப்பேற்றி விடுகிறார்.
மற்ற படங்களில் இருந்து சற்று வித்தியாசமான கதாபாத்திரயத்தில் தோன்றியிருக்கிறார் கலையரசன்.
சிஜா ரோஸ், ஆடுகளம் நரேன், தீபா, வேல்ராஜ் என அனைவரும் கதாபாத்திரத்தை நேர்த்தியாக செய்து முடித்திருக்கிறார்கள். ..
அண்ணன், தங்கை பற்றிய வழக்கமான பாசக் கதைதான் என்றாலும், அதை சொன்ன விதத்திலும், எடுக்கப்பட்ட விததிலும் இயக்குனர் இரா. சரவணன் வென்றிருக்கிறார்.
டி இமானின் இசை படத்திற்கு பலம்.. பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்..
வேல்ராஜ்ஜின் ஒளிப்பதிவு கிராமபுறத்தை ரம்மியமாக காட்டியிருக்கிறது.
ரூபனின் எடிட்டிங் – ஷார்ப்..
உடன்பிறப்பே – பாசத்தின் உயிரோட்டம் …