Spotlightசினிமாவிமர்சனங்கள்

V3 – விமர்சனம் 3/5

யக்குனர் அமுதவாணன் இயக்கத்தில் வரலக்‌ஷ்மி சரத்குமார், பாவனா, எஸ்தேர் அனில், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் “வி 3”.

கதைப்படி,

ஆடுகளம் நரேன், தனது இரண்டு மகள்களோடு (பாவனா மற்றும் எஸ்தேர்) எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஒருநாள் இரவில் வேலை முடிந்து வீடு திரும்பும் பாவனாவை ஐந்து வாலிபர்கள் கற்பழித்து விடுகிறார்கள்.

இந்த செய்தி நாடு முழுவதும் காட்டுத்தீயாக பரவ, கற்பழிக்கப்பட்ட பாவனாவிற்கு நீதி கேட்டு போராட்டம் வெடிக்கிறது. இதனால், நெருக்கடிக்கும் உள்ளாகும் ஆளும் அரசாங்கம் இந்த வழக்கை முடிக்க நினைக்கிறது.

தனிக்கவனம் எடுத்து இந்த வழக்கை விசாரித்த காவல்துறை, ஐந்து நபர்களை என் – கவுண்டர் செய்து கொன்று விடுகிறார். வழக்கும் முடித்து வைக்கப்பட, கொலை செய்யப்பட்ட ஐந்து வாலிபர்களின் பெற்றோர்கள் தங்கள் மகன்கள் அப்படிபட்டவர்கள் இல்லை என்று காவல்நிலையத்தில் கதறுகிறார்கள்.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த ஐவர் என்கவுண்டரை விசாரிக்க வழக்கைக் கையில் எடுக்கிறது. இதற்காக, ஐஏஎஸ் வரலக்‌ஷ்மி நியமிக்கப்படுகிறார்.

வழக்கு சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரிடம் விசாரணை நடத்துகிறார் வரலக்‌ஷ்மி.. அதன்பிறகு திடுக்கிடும் பல சம்பவங்கள் இந்த என்கவுண்டரில் நடந்திருப்பதை கண்டறிகிறார் வரலக்‌ஷ்மி.

இறுதியாக என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

விசாரணை நடத்தும் மனித உரிமைகள் ஆணையத்தில் சிறப்பு அதிகாரியாக வரும் வரலக்‌ஷ்மி, தனக்கு கொடுக்கப்பட்ட சிவகாமி ஐஏஎஸ் என்ற கதாபாத்திரத்தை மிகவும் மிடுக்காக செய்து முடித்திருக்கிறார்.

படத்தின் ஒட்டுமொத்த காட்சிகளில் இவரது காட்சிகள் சிறிதளவு தான் என்பது சற்று ஏமாற்றம் தான். களம் கண்டு தனது விசாரணையை நடத்தும் காட்சியாக வைத்திருந்தால், கதையின் வேகத்தோடு தன்னுள் எப்போதும் இருக்கும் வேகத்தையும் சேர்த்து கொடுத்து அசத்தியிருப்பார் வரலக்‌ஷ்மி.

விந்தியா கதாபாத்திரத்தில் நடித்த பாவனா மிகவும் போல்டாக நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் வேறு யாரும் நடித்திருப்பார்களா என்பது ஒரு கேள்விக்குறி தான்.. லிப் சிங்கில் மட்டும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்.

விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ்தேர் தனது கேரக்டரை செவ்வென செய்து முடித்திருக்கிறார். இவர் பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகளாக நடித்து அப்போதே தனது நடிப்பில் ஜொலித்தவர்.

தனது மகளுக்கு இப்படியான இன்னல் நடந்ததை எண்ணி அழும் காட்சிகளில் பார்ப்பவர்களையும் அழ வைத்து விட்டார் ஆடுகளம் நரேன்.

படத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை அப்படியே பிரதிபலித்தவர் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக வந்த DC.

படத்தின் மையக்கருவை மிகவும் வலுவாக கையில் எடுத்த இயக்குனர், அதை கொண்டு செல்லும் விதத்தில் சற்று தடுமாறியிருக்கிறார். மற்றபடி, போலி என்கவுண்டர்கள், அரசியல்வாதிகளின் மற்றொரு முகம், அநீதி இழைக்கப்படும் பெண்களுக்கு நீதி என பல முக்கிய பிரச்சனைகளை கையில் எடுத்து சாட்டையடி கொடுத்ததற்காக இயக்குனர் அமுதவானனுக்கு சல்யூட் வைக்கலாம். ஃப்ளாஷ் பேக் காட்சிகள் அடிக்கடி வருவதை சற்று குறைத்திருக்கலாம். வசனங்கள் நெத்தியடி..

சிவா பிரபுவின் ஒளிப்பதிவு படத்திற்கு கைகொடுத்திருக்கிறது. பாவனா ஐவரிடம் இருந்து தப்பித்து ஓடும் காட்சிகளில் கேமரா கவனம் பெறுகிறது.

ஆலன் செபஸ்டீன் இசையில், பாடல்கள் ஓகே ரகம்… சோக கீதத்தை சற்று குறைத்திருக்கலாம். பின்னணி இசை கதையோடு பயணம்.

வி 3 – வாள் வீச்சு…

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close