ஹலிதா ஷமீம் இயக்கத்தில், கதீஜா ரகுமான் இசையைமப்பில், பிரவீண் கிஷோர், எஸ்தர் அனில், கௌரவ் காளை மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் மின்மினி.
பள்ளிப் பருவத்தில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகளை அந்த நிஜ வயதில் நாயகன், நாயகியை வைத்துப் படமாக்கி, அதன்பின் அவர்களது இளமைப் பருவக் காட்சிகளைப் படமாக்க எட்டு வருடங்கள் காத்திருந்து, அதே நாயகன், நாயகி கதாபாத்திரங்களில் நடித்தவர்களை வைத்தே எடுக்கப்பட்ட ஒரு படம். அப்படியான நாயகன் ஆக பிரவீண் கிஷோர், எஸ்தர் அனில் தங்களது டீன் எஜ் பருவத்தில் நடித்த பின், எட்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இளமைப் பருவத்தில் நடித்துள்ளார்கள். அந்த ஒரு காத்திருப்புக்காக, முயற்சிக்காக இயக்குனர் ஹலிதாவை மனமுவந்து பாராட்டலாம்.
2016ம் ஆண்டில் ஊட்டியில் உள்ள ஒரு கான்வென்ட்டில் நடக்கும் கதை. கௌரவ் அந்த கான்வென்ட்டின் செல்லமான விளையாட்டு வீரர். அந்தப் பள்ளிக்குப் புதிதாக படிக்க வருகிறார் பிரவீண். அவரை வேண்டுமென்றே ‘டீஸ்’ செய்கிறார் கௌரவ். ஆனாலும், அவருக்கு பிரவீணைப் பிடிக்கும். பதிலுக்கு பிரவீண் கௌரவ்வுடன் நட்பாகப் பழகுவதற்குள் விபத்தில் கௌரவ் இறந்து போகிறார். பிரவீணைக் காப்பாற்றிய கௌரவ் அவரது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளாமல் போகிறார். இது மனதளவில் பிரவீணுக்கு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. கௌரவ்வின் உடல்உறுப்புகள் தானம் செய்யப்பட்டு, அவரது இதயம் எஸ்தர் அனிலுக்குப் பொருத்தப்படுகிறது. கௌரவ் பற்றி தெரிந்து கொண்ட எஸ்தர், கௌரவ் படித்த ஊட்டி கான்வென்ட்டில் வந்து படிக்கிறார். கௌரவ்வின் ஆசைகள் என்ன என்பதைத் தெரிந்து கொண்டு அதை நிறைவேற்ற ஆசைப்படுகிறார்.
எட்டு வருடங்களுக்குப் பிறகு லடாக் மலையில் பிரவீண் பைக் பயணம் செல்கிறார். அவர் பின்னாலேயே எஸ்தரும் பைக் பயணம் போகிறார். எஸ்தர் யார் என்பது பிரவீணுக்குத் தெரியாது. கௌரவ்வின் ஆசையை நிறைவேற்றத்தான் பிரவீண் போகிறார் என்பது எஸ்தருக்கும் தெரியும். இருவரும் அங்கு சந்தித்துக் கொள்கிறார்கள். அதன்பின் அவர்களது பயணம் எப்படிப் போகிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
பள்ளியின் செல்லப் பிள்ளையாக விளையாட்டு வீரராக துடிப்பாக வலம் வருகிறார் கௌரவ் காளை. அவருக்கும் பிரவீணுக்கும் இடையிலான ஆரம்ப மோதல், அதன்பின் அவர்களது நட்பு என்றுதான் கதை நகரும் என நாம் எதிர்பார்க்க கௌரவ் திடீரென இறந்து போகிறார். அந்த குறுகிய நேரத்துக் காட்சிகளிலேயே நம் மனதில் இடம் பிடிக்கிறார் கௌரவ். அப்படி ஒரு துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பிரவீண் கிஷோர் பள்ளி நாட்கள் காலத்தில் பயந்த சுபாவம் கொண்டவராக, அமைதியான மாணவராக நடித்துள்ளார். கௌரவ் அவரை என்னதான் ‘டீஸ்’ செய்தாலும் ஒதுங்கி ஒதுங்கி போகிறார். ஆனால், அதற்குப் பின் ஒரு நட்பு இருக்கிறது என்பது தெரிந்ததும் கலங்கிப் போகிறார். கௌரவ்வின் திடீர் மறைவு அவரை நிறையே அமைதியாக்கிவிடுகிறது.
லடாக் பைக் பயணக் காட்சிகள் பிரவீண், எஸ்தர் இடையில் நட்பு மலருமா அல்லது காதல் மலருமா என்ற கேள்வியுடனேயே நகர்கிறது. இடைவேளை முழுவதும் பைக் பயணமாகவே நகர்ந்தாலும் கிளைமாக்சில் சில எதிர்பாராத திருப்பங்களை வைத்து உணர்வுபூர்மாய் படத்தை முடித்திருக்கிறார்கள். அந்த இளமைக்கால நடிப்பில் பிரவீண், எஸ்தர் இருவரது நடிப்பும் யதார்த்தமாய் அமைந்துள்ளது.
இடைவேளை வரை ஊட்டி மலை, இடைவேளைக்குப் பிறகு லடாக் மலை என ஒரு ஒளிப்பதிவாளருக்கு அவரது பெரும் ஆசையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு. இப்படியான கதைக்களம் ஒளிப்பதிவாளர்களுக்குப் பிடித்த ஒன்று. தயாரிப்பாளராகவும் இருப்பதால் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா அவருக்கான எல்லைகளை சிறகை விரிப்பதை போல பரந்து விரித்திருக்கிறார்.
கதீஜா ரகுமான் இசையில் பின்னணி இசை ஆச்சரியப்படுத்தியுள்ளது. முதல் படத்திலேயே உணர்வுபூர்வமான ஒரு படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இடைவேளைக்குப் பின்பான காட்சிகள் அழகியலாக இருந்தாலும் நீண்டு கொண்டே போகிறது. நினைத்திருந்தால் அவற்றை அரை மணி நேரத்தில் கூட முடித்திருக்கலாம். ஒரே வகுப்பில் படித்த எஸ்தரை பிரவீணுக்குத் தெரியவே தெரியாது என்பதெல்லாம் நம்பும்படி இல்லை. எட்டு வருடங்களில் வேறு எங்குமே பிரவீணை எஸ்தர் சந்திக்கவில்லையா என்ற கேள்விகளும் எழுகின்றன. இருந்தாலும் ஒரு மாறுபட்ட படத்தைப் பார்த்த திருப்தி கிடைக்கிறது.