கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், மேகா ஆகாஷ், மாறன், சேசு, தமிழ், எம் எஸ் பாஸ்கர், ஜான் விஜய், ரவி மரியா, கூல் சுரேஷ், நிழல்கள் ரவி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த வடக்குப்பட்டி ராமசாமி.
இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஷான் ரோல்டன். ஒளிப்பதிவு செய்திருக்கிறார் தீபக். படத்தொகுப்பு செய்திருக்கிறார் சிவ நந்தீஸ்வரன்.
சந்தானத்தை வைத்து டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இரண்டாவது படைப்பாக இந்த வடக்குப்பட்டி ராமசாமி படத்தை இயக்கியிருக்கிறார்.
சரி… நாம கதைக்குள் போயிடலாம்..
1970 களில் வடக்குப்பட்டி என்ற கிராமத்தில் கதைக்களம் நகர்கிறது. தனது இடத்தில் ஒரு கோவிலை கட்டி, அங்கு தரிசனத்திற்காக வரும் மக்களை ஏமாற்றி அதில் பணம் சம்பாதித்து அதில் பிழைப்பு நடத்தி வருகிறார் சந்தானம்.
அந்த சமயத்தில் ஊருக்கு தாசில்தாரராக வருகிறார் நடிகர் தமிழ். மக்களை இன்னும் அதிகமாக ஏமாற்றி அதிக பணம் சம்பாதிக்க திட்டம் கொடுக்கிறார். அதில் தனக்கு கமிஷன் தர வேண்டும் என்றும் தமிழ் கூறுகிறார்.
ஆனால், அதை தர மறுத்து அந்த திட்டத்தை தானே செயல்படுத்திக் கொள்வதாக கூறி விடுகிறார் சந்தானம்.
இதனால் கோபம் கொண்ட தமிழ், திட்டம் தீட்டி கலெக்டரின் ஒப்புதலோடு கோவிலை மூட வைக்கிறார்.
பல வேலைகளை செய்து மீண்டும் கோவிலை சந்தானம் எப்படி திறந்தார் என்பதே படத்தின் மீதிக் கதை.
வழக்கம் போல் தனது காமெடி திறனை முழுமையாகவே செயல்படுத்தியிருக்கிறார் சந்தானம். தனக்கான காட்சிகளை குறைத்து மற்ற நடிகர்களுக்கு நன்றாகவே ஸ்பேஸ் கொடுத்து நடித்திருக்கிறார்.
படத்தின் மிகப்பெரும் பலமே சேசுவும் மாறனும் தான். இருவரும் அடிக்கும் காமெடி களபரங்கள் சிரித்து சிரித்து வயிறே வலிக்கும் அளவிற்கு காமெடிகளை சிதறடித்திருக்கிறார்கள்.
ஜான் விஜய் மற்றும் ரவி மரியா இருவரையும் அளவோடு வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர்.
அதுமட்டுமல்லாமல், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன் என படத்தில் நடித்த சின்ன சின்ன கதாபாத்திரங்கள் கூட படத்திற்கு பெரிதாக வலு சேர்த்துள்ளது.
இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலமாக வந்தது படத்திற்கு கூடுதல் பலம்.
இறைவனை நம்பாத ஒருவன், எப்படி இறைவனை ஏற்றுக் கொள்கிறான் என்பதை காமெடி கலந்த நகைச்சுவையோடு கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
வடக்குப்பட்டி ராமசாமி – காமெடிக்கு பஞ்சமில்லை..