Spotlightவிமர்சனங்கள்

வேலன் – விமர்சனம்

பிக் பாஸ் ஸ்டார் முகேன், பிரபு, சூரி, மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவாவின் உதவி இயக்குனராக பணிபுரிந்த கவினின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “வேலன்”

கதைப்படி,

ஊரில் நல்ல செல்வாக்கோடு வாழ்ந்து வருகிறது பிரபுவின் குடும்பம். இவரது மனைவியாக ஸ்ரீரஞ்சனி. இவர்களின் மகனாக வருகிறார் நாயகன் முகேன். பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சேரும் முகேன், அங்கு வரும் நாயகி மீனாட்சியை “கண்டதும் காதல்” என்பது போல், நாயகியை கண்டதும் காதல் செய்கிறார்.

ஒருகட்டத்தில், ஒருதலை காதல், இரு தலை காதலாக மாறுகிறது,. இது ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, கேரளாவில் எம் எல் ஏ-வாக இருக்கும் ஹரீஷ் பெராடி, பிரபுவின் குடும்பத்திற்கு பரம்பரை முன்பகை வில்லனாக வந்து நிற்கிறார்.

இந்நிலையில், முகேனின் காதலுக்கு வேறு விதமாக சிக்கல் வர, முகேனிற்கும் மற்றொரு நாயகியாக வரும் மரியாவிற்கு திருமணம் நடைபெறும் என பிரபு வாக்கு கொடுத்து விடுகிறார்.

இறுதியாக முகேனிற்கும் மீனாட்சிக்கும் திருமணம் நடந்ததா.? வில்லன் ஹரீஷ் பெராடியை எப்படி சமாளித்தார்கள்..? என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் முகேன், கதைக்கேற்ற நாயகனாக தோன்றினாலும், ஒரு சில இடங்களில் மீட்டர் சற்று ஏற்றி வைத்து நடித்திருந்திருப்பதை குறைத்திருக்கலாம். மாஸான ஓபனிங்க் பாடலில் பார்ப்பவர்களை ஆட்டம் போட வைக்கிறார் முகேன்.

காதல் மெலடி பாடலில் இளைஞிகளின் மனதை மெதுவாக திருடிவிடுவார் முகேன். ஆக்‌ஷன் காட்சிகளிலும் சற்று கவனம் செலுத்தலாம். சிறு சிறு குறைகள் எட்டிப் பார்த்தாலும், முதல் படத்தில் சற்று நிறைவான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் முகேன். வாழ்த்துகள் & வெல்கம் முகேன் சார்.

நாயகி மீனாட்சி, கேரள பெண்ணாக ஜொலிக்கிறார். பாடல்களிலும் மென்மையாக வருடிச் செல்கிறார்.

இடைவேளை காட்சியில் மாஸான எண்ட்ரீ கொடுத்து படத்திற்குள் நுழைகிறார் சூரி. சூரி நுழைந்த பிறகு படம் அடுத்த கட்டத்திற்கு செல்கிறது. பல படங்களுக்குப் பிறகு சூரியின் நடிப்பை பார்த்து சிரித்து ரசித்த பார்த்த திரைப்படம் என்றால் அது இது தான்.

வழக்கம் போல், பாசமான, வீரமான, அமைதியான தந்தையாக வந்து தனது நடிப்பை கச்சிதமாக செய்து முடித்து செல்கிறார் பிரபு. வில்லனாக ஹரீஷ் பெராடி இன்னும் சற்று கூடுதல் முரட்டுத் தனத்தைக் கொடுத்திருந்திருக்கலாம்.

தம்பி ராமையா தனது நடிப்பில் மீட்டரை சற்று குறைத்திருக்கலாம். முதல் பாதியில் ப்ராங்க் ஸ்டார் ராகுலின் காமெடி பெரிதளவில் கவனம் பெறவில்லை. கண்களால் பலரையும் கட்டி இழுக்கும் யூ டியூப் பிரபலம் பிரிகிடாவின் காட்சிகளும் பெரிதளவில் இல்லை.

படத்தினை இரண்டாக பிரித்தால் சூரிக்கு முன் சூரிக்கு பின் என்று பிரித்து விடலாம். இரண்டாம் பாதியில் சூரியின் காமெடி காட்சிகள் திரையரங்கில் சிரிப்பலைகளை சிதற வைக்கின்றன. வழக்கமான குடும்ப கதை தான் என்றாலும், இரண்டாம் பாதியில் காமெடி காட்சிக்கென்று பல இடங்களை கொடுத்திருந்திருப்பதால் இயக்குனர் தப்பித்துக் கொண்டார்.

கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்… பாடல் காட்சியாக இருக்கட்டும், ஆக்‌ஷன் காட்சியாக இருக்கட்டும் மிகவும் நேர்த்தியாகவும் பிரமாதமாகவும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

சரத்குமாரின் படத்தொகுப்பு, தேவையானதை தேவையான இடங்களில் வைத்து ரசிக்க வைத்துள்ளார்.

வழக்கமான பேமிலி ட்ராமா தான் என்றாலும், தனக்கான முத்திரையை பதிக்க இயக்குனர் முயன்றிருக்கிறார். இரண்டாம் பாதியில் ரசிகர்களை ரசிக்க வைத்த பெருமை பெற்றதால் இயக்குனராக கவின் ஜெயித்திருக்கிறார். வாழ்த்துகள்.

தயாரிப்பாளராக கலைமகன் முபாரக், தனது முதல் முத்திரை நச்சென்று பதித்திருக்கிறார்.

வேலன் –  வேலையை ரொம்ப நன்றாக செய்யவில்லை என்றாலும், வேலை செய்திருக்கிறார்கள். ரசிக்கலாம்.  

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close