Spotlightவிமர்சனங்கள்

மதுரை மணிக்குறவர் – விமர்சனம்

ராஜரிஷி இயக்கத்தில் ஹரிக்குமார், மாதவிலதா, காளையப்பன், சுமன், ராதாரவி, சரவணன், எம் எஸ் பாஸ்கர் மற்றும் கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “மதுரை மணிக்குறவர்”.

கதைப்படி,

நாயகன் ஹரிக்குமார் மதுரையில் உள்ள மார்கெட்டில் குறைந்த வட்டிக்கு தொழிலாளர்களுக்கு பணம் கொடுக்கும் பிஸினஸ் மற்றும் பன்றி வளர்ப்பு தொழிலும் செய்து வருகிறார்.

மார்கெட்டில் நடக்கும் தகராறில் ஆரம்பித்து, குளத்தை மீனுக்காக ஏலம் எடுக்கும் வரையிலும் ஹரிக்குமாருக்கு ஏரியா எம் எல் ஏ சுமன் உடனான மோதல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது.

அதே சமயத்தில், ஹரிக்குமாருக்கு தனது மாமன் மகளுக்குமான திருமண ஏற்பாடுகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.

சுமனின் சூழ்ச்சியால் திருமணம் நின்றுவிட, மாதவிலதாவை திருமணம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார் ஹரிக்குமார். திருமணம் நடந்து முடிந்து விடுகிறது.

ஒருகட்டத்தில் சுமன், சரவணன் மற்றும் கூடவே இருந்து வில்லனாக மாறும் காளையப்பன் மூவரும் சேர்ந்து ஹரிக்குமாரை கொலை செய்து விடுகின்றனர்.

இந்நிலையில், ஹரிக்குமாரை போன்றே உருவம் கொண்ட ஒருவர் அந்த பகுதியின் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணி அமர்கிறார்.

யார் அவர்.? இறந்து போன ஹரிக்குமாருக்கும் என்ன தொடர்பு.? இறந்து போன ஹரிக்குமாரை கொன்ற வில்லன்களை பழி தீர்க்கப்பட்டனரா .? என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் ஹரிக்குமார் வழக்கம்போல், குரலை உயர்த்தியும், ஓவர் ஆக்டிங்க் செய்தும் கொடுக்கப்பட்ட காட்சியை பல இடங்களில் வீண்டித்திருக்கிறார். பேசாம நீங்க டைரக்‌ஷன் பக்கமே போயிடுங்க ஹரிக்குமார் சார். நமக்குதான் நடிப்பு சுத்தமா வரலையே.? ஆக்‌ஷன் காட்சியில் மட்டுமே கொஞ்சம் கவனம் ஈர்க்கிறார்.  நாயகி மாதவிலதா பார்ப்பதற்கு அழகாக இருக்கீறார். நடிப்பில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்.

ரஜினி நடித்த சிவாஜி படத்தின் வில்லன் சுமன், இப்படத்தில் இப்படியொரு நடிப்பை கொடுப்பார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.

சரவணன் ஓவர் ஆக்டிங் செய்து காட்சிகளை கசக்கி பிழிகிறார். வில்லன்களை நீச்சல் குளத்திலும், காட்டின் நடுவே ரோட்டிலும், குளம் அருகே ஒரு ரோட்டிலும் மட்டுமே பார்க்க முடிந்தது. கூடவே ஒரு பெண், கையில் லேப்டாப்-பையும் வைத்துக் கொண்டு.

இவர்கள் கொடுமை தான் தாங்க முடியவில்லை என்று பார்த்தல் கோபம் வரும் அளவிற்கு கஞ்சா கருப்பு, போண்டா மணி, இவர்களின் காமெடிகள் மேலும் கோபத்தை தான் வர வைக்கிறது.

வழக்கமான ஹீரோ வில்லன் கதை தான், பெரிதான ஒரு ஈர்ப்போ சுவாரஸ்யமோ எதுவும் இல்லாமல் போனது கதைக்கு பெரிய பாதிப்பு தான்.

மிகப்பெரும் வம்சாவளியைச் சேர்ந்தவர் ஹரிக்குமார் என்று கதை ப்ளாஷ் பேக் நோக்கியும் செல்கிறது. ஒரு பாட்டிற்கும் பைட்டிற்கும் மட்டுமே வந்து செல்கிறார் ராதாரவி. இதில் ராதாரவியின் மனைவியாக கெளசல்யா. வசனங்கள் எதுவும் இல்லாமல் நடித்து கொடுத்திருக்கிறார். வெறும் 5 நிமிட காட்சிகள் மட்டுமே.. இந்த கதாபாத்திரத்திற்கெல்லாம், எப்படி கெளசல்யா ஓகே சொல்கிறார் என்று தெரியவில்லை.

இளையராஜாவின் இசையில், மனசுல பெரிய வந்தான் மதுரக்காரன். பாடல் மட்டுமே கேட்கும் ரகம். மற்றபடி இசையில் பெரிதான ஒரு ஈர்ப்பு இல்லை. இளையராஜா பாடலின் சுவை சுத்தமாக இப்படத்தில் இல்லை.

ஆல் டைம் குடிகாரராக எம் எஸ் பாஸ்கர், பத்து நிமிட காட்சிக்கு மட்டும் ராஜ்கபூர், கஞ்சா கருப்பை சற்று ஏற்றுக் கொள்வதே அவரது குரலுக்காக தான், அதையும் வேறு ஒரு நபர் டப்பிங் செய்து வெறுப்படைய வைத்திருக்கிறார்கள்.

குடியும் கும்மாளமுமாய் இருக்கும் வில்லன்களை அழிக்கும் வழக்கம் போல ஒரு தமிழ் சினிமா என்று கடந்து செல்லும் படமாக வந்திருக்கிறது “மதுரை மணிக்குறவர்”.

மதுரை மணிக்குறவர் – ”இது என்னடா மதுரைக்காரனுக்கு வந்த சோதனை”ன்னு தலையில கை வைத்து சொல்ல வைத்துவிட்டார் இயக்குனர்.

Facebook Comments

Related Articles

Back to top button