
சாய் தரம் தேஜ், சம்யுக்தா இவர்களது நடிப்பில் புஷ்பா பட இயக்குனர் சுகுமாரின் எழுத்தில் கார்த்திக் வர்மாவின் இயக்கத்தில் இன்று (05/05/2023) தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ள இருக்கும் திரைப்படம் தான் “விரூபாக்ஷா”.
ஏற்கனவே, இரண்டு வாரங்களுக்கு முன் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்டிருக்கிறார்.
கதைப்படி,
ஊரில் தொற்று வியாதி ஒன்று பரவுகிறது. இதற்கு காரணம் ஊரில் தனியாக வசித்து வரும் ஒரு குடும்பத்தினர் மாந்திரீக செயலில் ஈடுபட்டு மக்களை கொன்று வருகின்றனர் என்று நினைத்துக் கொள்கின்றனர் ஊர் மக்கள்.
இரவோடு இரவாக அந்த குடும்பத்தில் இருந்த கணவன் மற்றும் மனைவியை உயிரோடு மரத்தில் கட்டி வைத்து எரித்து விடுகிறார்கள்.
12 வருடங்கள் உருண்டோட, தனது தாயை அழைத்துக் கொண்டு தனது பூர்வீக கிராமமான அக்கிராமத்திற்கு வருகிறார் நாயகன் சாய் தரம் தேஜ். திருவிழா நடைபெறவிருப்பதால் ஊரே பூக்கோலம் பூண்டிருக்கிறது.
வந்த இடத்தில் நாயகி சம்யுக்தாவை காண, உடனே காதலில் விழுகிறார் சாய் தரம் தேஜ்.
மாயமாக சென்ற ஊரில் உள்ள பெரியவர் ஒருவர், திருவிழா அன்று கோவில் அம்மன் சிலை முன்பு நடந்து வந்து இறந்து விடுகிறார். இதனால் ஊரே தீட்டு பட்டு விட்டதாக கூறி அந்த ஊர் முழுவதையும் 8 நாட்களுக்கு மூடும்படி கூறிவிடுகிறார் கோவில் பூசாரி.
ஏதேச்சையாக, அதே ஊரில் தங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார் சாய் தரம் தேஜ். ஊர் மூடப்பட்டாலும், அடுத்தடுத்து இரண்டு தற்கொலைகள் நடக்கிறது. இதனால் ஊரே அதிர்ச்சிக்குள்ளாக, இது தற்கொலை இல்லை கொலை தான் என்று கண்டுபிடிக்கிறார் சாய் தரம் தேஜ்.
இந்த கொலையை செய்தது யார்.? இந்த கொலைக்கும் மாந்திரீகத்திற்கும் என்ன சம்மந்தம்.? 12 வருடங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட குடும்பத்தின் பழி வாங்கும் செயலா.? என்பதே படத்தின் மீதிக் கதை.
தனி ஒருவராக ஒட்டுமொத்த படத்தையும் தாங்கிச் செல்ல வேண்டிய சூழல் சாய் தரம் தேஜ்க்கு. தனது கேரக்டரை நேர்த்தியாக செய்து முடித்திருக்கிறார். படத்தில் அவர் ஓடி வரும் காட்சிகளில் மட்டும் ஏனோ நம்மை அறியாமலேயே நமக்குள் சிரிப்பை வரவழைத்து விடுகிறார்.
கதாநாயகன் என்றிருந்தால் கதாநாயகி கண்டிப்பாக வேண்டுமே என்று திரையில் வந்து போகும் காட்சியாக இல்லாமல், படத்தில் முக்கிய திருப்புமுனையாக வந்து அனைவரையும் கவர்ந்திழுக்கிறார் நாயகி சம்யுக்தா.
ஆங்காங்கே சற்று ஓவர் ஆக்டிங்க் எட்டிப் பார்த்தாலும், திரைக்கதை வேகமாக நகர்வதால் அதெல்லாம் பெரிதான குறையாக தெரியவில்லை.
முதல் பாதியில் இருந்த வேகத்தை இரண்டாம் பாதியில் கொடுக்கத் தவறியிருக்கிறார் இயக்குனர். எப்படா படத்தை முடிப்பீங்க என்ற எண்ணத்திற்கே படம் பார்ப்பவர்களை கொண்டு சென்று விட்டார் இயக்குனர்.
ஷார்ப்பா ஒரு எண்ட் கார்ட் போட்டு படத்தினை முடித்திருந்தால், வீருபாக்ஷா வீறு கொண்டு நடைபோட்டிருக்கும். வித்தியாசமான கதை, பயமுறுத்தும் காட்சியமைப்பு, என இரண்டும் படத்திற்கு சற்று தூணாக இருப்பதால் படம் சற்று நம்மை கவர்கிறது.
அதுமட்டுமல்லாமல், படத்தின் மிகப்பெரும் பலம் என்றால் அது ஒளிப்பதிவும் பின்னணி இசை மட்டுமே.
இந்த இரண்டு மட்டுமே நம்மை திரையரங்கில் இந்த படத்தைப் பார்க்க வைக்கத் தூண்டுகிறது.
ஹாரர் படங்களை ரசிக்கும் ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயமாக எந்தவிதத்திலும் ஏமாற்றத்தை அளிக்காது.
விரூபாக்ஷா – ஓகே