Spotlightசினிமா

நான் சிந்தித்துக் கொண்டிருந்ததை பா.இரஞ்சித் செய்து காட்டியிருக்கிறார் – இயக்குநர் வெற்றிமாறன்!

“கூகை திரைப்பட இயக்கம்” ஒருங்கிணைத்திருந்த “வடசென்னை” திரைப்படம் குறித்த கலந்துரையாடல் கூகை நூலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் “வடசென்னை” திரைப்படத்தின் இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் தனஞ்செயன், எழுத்தாளர்கள் கரன் கார்க்கி மற்றும் சுகுணா திவாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு அழைப்பாளர்கள் தங்களுடைய பார்வையில் வடசென்னை திரைப்படத்தின் திரைமொழி, காட்சியமைப்புகள், தொழிற்நுட்பம் மற்றும் அரசியல் ஆகியவை குறித்து பேசினார்கள். இறுதியில் இயக்குநர் வெற்றிமாறன் ஏற்புரை வழங்கினார்.

ஏற்புரையில் இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது,

“கூகையின் தொடக்க விழாவிற்கு என்னால் வரமுடியாமல் போனது. இந்த முன்னெடுப்பிற்காக பா.இரஞ்சித்தை பாராட்டுகிறேன். பாலுமகேந்திரா சார் இறந்ததற்குப் பிறகு அவருடைய 7000 புத்தகங்கள் என்னிடம் இருந்தன. அவற்றை வைத்து “BALUMAHENDRA READING CIRCLE” என்ற ஒன்றை தொடங்கலாம் என்று நினைத்திருந்தேன். இப்போது அந்த புத்தகங்கள் எல்லாம் தனஞ்செயன் சார் கல்லூரியில் உள்ள நூலகத்தில் இருக்கின்றன. எனக்கு ஒரு சிந்தனையாக மட்டுமே இருந்ததை பா.இரஞ்சித் இன்று செயல்படுத்தி இருக்கிறார். ஒரு 10 வருடம் கழித்து, இங்கிருந்து கற்றுக் கொண்டு வெளியே வந்தவர்கள் இயக்குநராகவோ, எழுத்தாளராகவோ அவரவர் துறையில் ஆளுமைகளாக வரும்போது இதனுடைய வீரியம் அப்போது புரியும். அப்படிப்பட்ட இந்த இந்த இடத்திற்கு “வடசென்னை” குறித்து பேச வந்ததற்கு உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன்” என்று பேசினார்.

மேலும் கலந்துரையாடலின் போது உதவி இயக்குநர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது,

“வடசென்னைக்குப் பிறகு நிச்சயம் வேறு மாதிரியான புதிய ஒன்றைத் தான் படமாக்க வேண்டுமென்று நினைக்கிறேன். இந்தப் படத்தில் நான் பதிவு செய்துள்ள அத்தனையும், ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை, சந்தித்த மனிதர்கள் பற்றியது தான். இந்தெந்த இடத்தில் இந்தெந்த சம்பவங்கள் நடந்தன என்று அவர் காட்டியவற்றை நேரடியாக நான் கேட்டுப் பெற்றுக் கொண்டவை தான். அவர் அறிமுகப்படுத்திய அந்த உலகம் என்னோடு மிக நெருங்கிய தொடர்புடையதாக உணர்கிறேன்” என்று கூறினார்.

நிகழ்வின் இறுதியில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது உதவி இயக்குநர்கள் கேட்ட கேள்விகளுக்கு நிதானமாகவும், விளக்கமாகவும் பதிலளித்து இயக்குநர் வெற்றிமாறன் நிகழ்வை சிறப்பானதாகவும், அர்த்தம் நிறைந்ததாகவும் மாற்றினார்.

Facebook Comments

Related Articles

Back to top button