Spotlightசினிமா

களம் இறங்க இது தான் சரியான தருணம் … தயாரிப்பாளராக ஆரா சினிமாஸ் மகேஷ்!

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா திரைப்படம் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கிறது. இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்குவதால், படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

நடிகர் வீரா இது பற்றி கூறும்போது, “ஒரு திரைப்படத்தின் வியாபாரத்தில் முதன்மையானவர் ஹீரோ. அந்த ஹீரோவாக என்னை நடிக்க வைக்க ஒப்புக் கொண்டதற்கும், இந்த படத்தை தயாரித்ததற்கும் தயாரிப்பாளர் மகேஷ் அவர்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். மேலும், என் வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு நகைச்சுவை படத்தில் நடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதால் நான் மிகவும் பதட்டமாக உணர்கிறேன்” என்றார்.

இயக்குனர் அவினாஷ் ஹரிஹரன் தனது பங்கிற்கு கூறும்போது, “நான் மிக நீண்ட காலமாக தொலைக்காட்சி விளம்பரங்களை தயாரித்துக் கொண்டிருந்தேன். ராஜதந்திரம் படத்தின் விளம்பரப் பாடல் நிகழ்ச்சியில் முதன்முறையாக வீராவும் நானும் சந்தித்தோம். அங்கு தான் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பாவின் அடிப்படை கருத்தாக்கம் தோன்றியது. முழுமையான கதையை உருவாக்கியவுடன், படத்துக்கு ஒரு தயாரிப்பாளரை தேடும் மிகப்பெரிய பணியில் ஈடுபட்டோம். கதையை கேட்டு உடனடியாக ஒப்புக் கொண்ட மகேஷ் சாருக்கு நன்றி” என்றார்.

படத்தின் அடிப்படை கருப்பொருள் பற்றி அவர் மேலும் கூறும்போது, “இது பல்வேறு கதாபாத்திரங்களை உள்ளடக்கிய முழு நீள காமெடி திரைப்படம். பாண்டிச்சேரியை சேர்ந்த ஒரு புகைப்படக் கலைஞர், சென்னையை சேர்ந்த திருமண ஒருங்கிணைப்பாளர் மற்றும் மும்பையை சேர்ந்த அடியாள் ஆகியோர் தங்கள் தொழிலில் மீண்டும் மேலே வரும் நோக்கில் இருக்கும் போது, ஒரு அரசியல்வாதியால் ஏற்படும் குழப்பத்தால் என்ன ஆகிறார்கள் என்பதை சொல்கிறது” என்றார்.

ஆரா சினிமாஸ் தயாரிப்பாளர் மகேஷ் கோவிந்தராஜ் கூறும்போது, “30 திரைப்படங்களை விநியோகித்த அனுபவத்தில் இது தான் திரைப்பட தயாரிப்பில் இறங்க சரியான நேரம் என நான் உணர்கிறேன். உண்மையில், இது பார்வையாளர்களின் நாடித் துடிப்புகளைப் புரிந்து கொள்ள ஒரு நல்ல கற்றல் அனுபவம். நான் என் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய போது, பொழுதுபோக்கு மற்றும் நல்ல உள்ளடக்கங்களைக் கொண்ட திரைப்படங்களை உருவாக்குவதுதான் என் நோக்கமாக இருந்தது. உலகளாவிய பார்வையாளர்களுக்கு அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். இது பார்வையாளர்களை பற்றி மட்டுமல்ல, என் முதல் தயாரிப்பை கிளாப் போர்டு புரொடக்ஷன்ஸ் சத்தியமூர்த்தி வெளியிடுகிறார் என்பதில் நானும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

வீரா, மாளவிகா நாயர், பசுபதி, ரோபோ ஷங்கர் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இந்த அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா படத்தில் நடித்திருக்கிறார்கள். ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்ய, மேட்லி ப்ளூஸ் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

Facebook Comments

Related Articles

Back to top button