
அறிமுக இயக்குனர் ஹாரூன் இயக்கத்தில் வி எம்ம் முனிவேலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “வெப்”. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அதில் தனக்கென தனிமுத்திரை பதிக்கும் நடிகராக தமிழ் சினிமாவில் விளங்கி வரும் நட்டி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி நல்லதொரு வரவேற்பைப் பெற்றதால், படத்தின் விமர்சனம் எப்படி என்பதை பார்த்து விடலாம்.
ஐடி நிறுவனத்தில் பணிபுரிகின்றனர் அபி, நிஷா மற்றும் மஹா.. இவர்கள் மூவரும் நெருங்கிய நண்பர்கள். பகல் நேரத்தில் பணியினை முடித்ததும், இரவு நேரத்தில் பஃப், பார்ட்டி என சுற்றி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், அளவுக்கு மீறி மது மற்றும் போதை பொருளை பயன்படுத்துகின்றனர் மூவரும்.
போதையிலேயே இரவு நேரத்தில் காரை எடுத்து பயணம் செய்கின்றனர். இது தொடர் நிகழ்வாகவே நடந்து வருகிறது. ஒருநாள், பார்ட்டியை முடித்து காரில் செல்லும் போது அவர்கள் கடத்தப்படுகின்றனர். இவர்கள் மூவரோடு புதிதாக திருமணம் ஆன தீபாவும் சிக்கிக் கொள்கிறார்.
நால்வரையும் நட்டி கடத்தி விடுகிறார். இவர்களை, ஒரு பழைய பங்களா ஒன்றில் கட்டிப் போட்டு கொடுமைபடுத்துகிறார். இவர்களை மயக்கத்திலேயே வைத்திருக்கிறார்.
படத்தின் முதல் பாதி முழுவதும், இப்படியாகவே செல்கிறது. எதற்காக நட்டி, நம்மை கடத்திருக்கிறார் என்பது தெரியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர் நான்கு பெண்களும். அச்சமயம், தீபாவையும் அவரது கணவரையும் கொன்று விடுகிறார் நட்டி..
இதெல்லாம், நட்டி எதற்காக செய்கிறார்.? என்ன சொல்ல வருகிறார்.?? என்பதே படத்தின் மீதிக் கதை..
படத்தின் கதாநாயகிகளாக வந்த ஷில்பா மஞ்சுநாத், சுபா, சாஸ்வி பாலா மூவரும் அபி, நிஷா, மஹா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதுதான், நமக்கான சுதந்திரம் இப்படி தான் வாழ வேண்டும் என்று கலாச்சாரத்தை மறந்து தன் போக்கு வாழ்வை வாழ்ந்து வரும் கதாபாத்திரங்களாக மூவரும் நடித்திருக்கிறனர்.
இளமை துள்ளலோடு, கதாபாத்திரத்தோடு ஒன்றிய நட்சத்திரங்களாக ஜொலித்திருக்கின்றனர் ஷில்பா, சுபா மற்றும் சாஸ்வி. படத்தின் ஆரம்பத்திலேயே வரும் பாடலில், மூவரும் கதாபாத்திரமாக கதைக்குள் பயணம் செய்ய ஆரம்பித்துவிடுகின்றனர்.
ஆங்காங்கே எட்டிப் பார்த்த ஓவர் ஆக்டிங்கை சற்று குறைத்திருக்கலாம். அல்லது இதை மறைக்க திரைக்கதையில் சற்று சுவாரஸ்யத்தை கூட்டியிருந்திருக்கலாம்..
நட்டியின் சினிமா பயணத்தில், அவருக்கு இது ஒரு வித்தியாசமான படமாக நிச்சயம் இருக்கும். கண்ணில் மை, கன்னத்தில் தழும்பு என்று வைக்கப்பட்ட கோடு இவற்றை தவிர்த்திருந்திருக்கலாம்.
ஒரு வீட்டிற்குள்ளேயே படத்தின் 75 சதவீத படமும் நகர்வதால், கதையில் சற்று சுவாரஸ்யத்தையோ அல்லது காமெடி கலந்த ஒரு ஓட்டத்தையோ நன்றாகவே கொடுத்திருக்கலாம்.. ஆனால், ..??
இதையெல்லாம் நட்டி எதற்காக செய்கிறார் என்பதற்கு வழக்கம் போல் ஒரு ப்ளாஷ் பேக் காட்சி வைக்கப்பட்டுள்ளது.. நட்டி, தங்கை, விபத்து, பழிக்கு பழி என கதை நாம் நினைத்தது போல் இருந்தாலும், நினைக்காததும் படத்தில் இருந்து நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது இந்த “வெப்”.
தேவதையாக காட்சியளிக்கிறார் நடிகை அனன்யா மணி. மொட்டை ராஜேந்திரன் காமெடி சிரிக்க வைக்கத் தவறிவிட்டது.
படத்தின் மிகப்பெரும் பலமே க்ளைமாக்ஸ் காட்சி தான்… படத்தின் ஓட்டத்தில் ஆயிரம் குறைகள் இருந்தாலும், அனைத்திற்கும் தீர்வு கொடுக்கும் விதமாகவும் மருந்து கொடுக்கும் விதமாகவும் க்ளைமாக்ஸ் காட்சியை வைத்து அசர வைத்துவிட்டார் இயக்குனர்.
தற்போதைய சூழலில், இப்படி ஒரு விழிப்புணர்வு படம் நிச்சயம் வேண்டும். அதுவும், இளைய சமுதாயம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்ற கேள்விக்கு ஒரு பதிலாகவும் இப்படம் உருவாகியுள்ளது..
இளைய சமுதாயத்தினர் தங்களின் உரிமை, தன்னோட சுதந்திரம் என்று சொல்லிக் கொண்டு செய்யும் சில செயல்கள் சமுதாயத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் இயக்குனர் சொல்லத் தவறவில்லை… விழித்துக் கொள்ளுங்கள் என்பதை சாட்டைக் கொண்டு அடிக்கும் விதமாக கூறியிருக்கிறார் இயக்குனர் ஹாரூன்..
கஸ்தூரி ராஜாவின் இசையில் பாடல்களை இன்னும் சற்று நன்றாகவே கொடுத்திருக்கலாம். கிறிஸ்டோபர் ஜோஸப்பின் ஒளிப்பதிவு, வீட்டிற்குள் நடக்கும் காட்சிகளை நன்றாகவே காட்டியிருக்கிறார்.
வெப் – தலைமுறைகளின் விழிப்புணர்வு…