
பரத், அஜய் கார்த்திக், அபர்னிதி, பவானி ஸ்ரீ, சங்கீதா, ஆனந்தநாக், பிரகாஷ் ராஜ், கிஷோர் நடிப்பில், ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் “காளிதாஸ் 2”.
ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் என். யோகேஸ்வரன் மற்றும் ஃபைவ் ஸ்டார் செந்தில் தயாரித்துள்ளனர்.
படத்திற்கு இசையமைத்துள்ளார் சாம் சி.எஸ்., ஒளிப்பதிவு செய்துள்ளார் சுரேஷ் பாலா.
ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது. அங்கிருந்த இளம் தம்பியின் குழந்தை திடீரென காணாமல் போய்விடுகிறது. அந்த குழந்தையை கண்டுபிடிக்க வருகிறார் இன்ஸ்பெக்டர் காளிதாஸ்.
காளிதாஸ், தனது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார். இந்நிலையில், போலீசின் சந்தேகம் ஜூனியர் வக்கீல் (அஜய் கார்த்திக்) மீது திரும்புகிறது. அவரை கைது செய்ய முயன்றபோது, சீனியர் வக்கீல் (பிரகாஷ் ராஜ்) அவரை காப்பாற்றுகிறார்.
இறுதியில் தொலைந்து போன குழந்தைக்கு என்ன ஆனது? உண்மையான குற்றவாளி யார்? என்ற கேள்விகளுக்கு எதிர்பாராத திருப்பத்துடன் பதில் அளிக்கிறது இந்த காளிதாஸ் 2 பட கிளைமாக்ஸ்.
இதற்கு முன் வெளிவந்த காளிதாஸ் படத்தினை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த படம் அநேக மக்களால் வரவேற்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக வெளிவந்த இரண்டாம் பாகம் நம்மை அதே அளவு ரசிக்க வைத்திருக்கிறது. வழக்கமான கிரைம் கதையாக ஆரம்பிக்கும் படம், மெதுவாக நகர்ந்து வித்தியாசமான திரில்லர் பாதையில் சென்று பார்வையாளர்களை ஈர்க்கிறது. குறிப்பாக ஒருவரை வில்லன் என்று நினைக்க வைக்கும் நிலையில், அடுத்த நொடி கதையை மாற்றுவது படத்தின் பெரிய பலம்.

போலீஸ் அதிகாரியாக பரத், மிக எளிமையான மற்றும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். சினிமா பாணியில் இல்லாமல், யதார்த்தமான பாணியில் அவர் செய்யும் விசாரணை படத்திற்கு வலு சேர்க்கிறது.
ஜூனியர் வக்கீலாக அஜய் கார்த்திக், நெகட்டிவ் சாயலில் நல்ல பரபரப்பை உருவாக்குகிறார். அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் சந்தேகத்தை தூண்டுகிறது. பவானி ஸ்ரீ, படத்திற்கும் அவர் கதாபாத்திரத்துக்கும் சிறப்பு சேர்த்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு வரும் சங்கீதா, மாறுபட்ட கதாபாத்திரத்தில் கவர்கிறார். பிரகாஷ் ராஜ், கிஷோர், ஆனந்தநாக் உள்ளிட்டவர்கள் தங்கள் அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
சாம் சி.எஸ். இசை, குறிப்பாக பின்னணி இசை, திரில்லர் உணர்வை அதிகரிக்கிறது, பாடல்கள் சுமார் ரகம் தான். சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு, ஒரே அடுக்குமாடி குடியிருப்புக்குள் நடந்தாலும் காட்சிக்கு காட்சி வேறுபட்டு நம்மை கதைக்குள் வைத்திருக்கிறது.
இயக்குனர் ஸ்ரீ செந்தில், ஒரு எளிய கதையை வைத்து, ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை பரபரப்பை தக்க வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.




