Spotlightசினிமா

‘2323 ‘ டீசரை வெளியிட்ட எஸ். ஏ. சந்திரசேகரன்!

மூன்று நூற்றாண்டுகளின் சம்பவங்களோடு கதை சொல்லும் படமாக ‘2323 The beginning ‘உருவாகியிருக்கிறது.

கதை ,திரைக்கதை, வசனம் எழுதி எடிட்டிங் பொறுப்பையும் ஏற்று இயக்கியுள்ளார் சதீஷ் ராமகிருஷ்ணன். இவர் இதற்கு முன்பு ‘தமிழனானேன்’ என்றொரு படத்தை எடுத்திருந்தார்.

இந்த’ 2323 ‘படத்தைப் பற்றி இயக்குநர் பேசும் போது,

“இது மூன்று நூற்றாண்டுகளில், அதாவது 300 ஆண்டுகளில் நடக்கும் கதை. இதை மூன்று பாகமாக எடுக்கிறேன். இப்படம் 2020 -ல் முதல் பாகத்தில் தொடங்குகிறது. கதை, மூன்றாம் பாகத்தில் 2323-ல் முடியும்.

இப்போது முதல் பாகத்தை உருவாக்கியுள்ளேன். இது 2020-ல் தொடங்கும் கதை.

இயற்கையைக் கட்டுப்படுத்தும் ஒரு கண்டுபிடிப்பை மாயோன் என்கிற நாயகன் கண்டுபிடிக்கிறான். அதைக் கொண்டு புயலை உருவாக்கலாம். கட்டுப்படுத்தவும் முடியும். ஆனால் அவனது அறிவியல் தொழில்நுட்பத்தை எதிரிகள் திருடி அவனுக்கு எதிராகப் பயன்படுத்தி அவனை அழிக்க நினைக்கிறார்கள். அவன் அவர்களை எதிர்த்துப் போராடி எப்படி மீள்கிறான் என்பதுதான் கதை.” என்கிறார்.

இப்படத்தின் டீசரை வெளியிட்ட இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரன் மிகவும் ரசித்துப் பாராட்டி வாழ்த்தி இருக்கிறார். இன்னொரு இயக்குநரான சுப்பிரமணியம் சிவாவும் டீசரை வெளியிட்டுப் படம் வெற்றியடைய வாழ்த்தியதுடன் படத்தின் வியாபார சம்பந்தமான சில ஆலோசனைகளையும் கூறியிருக்கிறார் .’மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ‘ இயக்குநர் ராஜேஷும் இந்த டீசரை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் மேலும் பேசும்போது,

“இருபதே நாட்களில் இந்த படப்பிடிப்பை முடித்து விட்டோம். இப்படத்தில் நாயகனாக நான் நடித்து இருக்கிறேன். நாயகிகளாக சாத்விகா ,கிரிஸ்டல் என இருவர் நடித்திருக்கிறார்கள். சாத்விகா கன்னடத்தில் இரு படங்களிலும் தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து இருக்கிறார். கிறிஸ்டல் பம்பாயில் பிறந்தவர். நியூயார்க்கில் வசிக்கிறார். அவர் ஹாலிவுட்டில் இரண்டு படங்களிலும் இந்தியில் இரண்டு படங்களிலும் நடித்திருக்கிறார் .

இவர்களுடன் ‘எமன்’ படப் புகழ் அருள் டி சங்கர் ,ராஜேந்திரன் கிருஷ்ணராஜ், ப்ரீத்தா, காசி,ஒரிசா பாலு ,டாக்டர் அபர்ணா, வினீஷ் ,ஆனந்த் ஆர். லிங்கா , சரவணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு D.M.சந்துரு. இசை மகராஜ் தேவர், ஏ.ஆர்.தாமஸ், ஸ்ரீராம் ஆனந்த்.

வெற்றி தமிழ் உருவாக்கம் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை மசனையன் மகேந்திர குமார் தயாரித்திருக்கிறார்.

மசாலா படத்தில் சலித்துப் போயிருக்கும் ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட அனுபவத்தை தரும்,”என்றவர், “நான் எப்பொழுது படம் எடுத்தாலும் தமிழரின் பெருமை களையும் வீரக்கலைகளையும் இடம்பெறச் செய்து அவற்றை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கம் உடையவன்.அந்த வகையில் இது தமிழ் உணர்வுள்ள அனைவரையும் கவரும் ” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் சதிஷ் ராமகிருஷ்ணன்.

Facebook Comments

Related Articles

Back to top button