Spotlightவிமர்சனங்கள்

தேள் – விமர்சனம் 3.5/5

 

நடனப்புயல் பிரபுதேவா நடிப்பில் இயக்குனர் ஹரிகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “தேள்”. இதுவரை ஏற்றிடாத கதாபாத்திரத்தில் தோன்றியுள்ள பிரபுதேவா, ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டாரா இல்லையா .?? என்பதை படத்தின் விமர்சனம் மூலம் காணலாம்.

கதைப்படி,

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கந்துவட்டி தொழில் செய்பவரிடம் முரட்டுத்தனமான அடியாளாக வேலை செய்து வருகிறார் பிரபுதேவா.

அனாதையாக வளர்ந்து வரும் பிரபுதேவாவிடம், திடீரென ஒருநாள், நான் தான் உனது அம்மா என்று பிரபுதேவாவிடம் கூறுகிறார் ஈஸ்வரி ராவ்.

முதலில் நம்ப மறுக்கும் ஈஸ்வரி, போக போக ஈஸ்வரியின் பாசத்தால் அவரை அம்மாவாக பார்க்க ஆரம்பிக்கிறார் பிரபுதேவா.

இந்த சூழ்நிலையில், ஒருநாள் ஈஸ்வரி தொலைந்து போகிறார். அதன்பிறகு, பிரபுதேவாவின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களே “தேள்” படத்தின் மீதிக் கதை.

இப்படி ஒரு கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்ததற்காகவே பிரபுதேவாவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ளலாம். இதுவரை அவரது கேரியரில் ஏற்றிடாத கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். வசனங்கள் அதிகமில்லாது, தனது நடிப்பை மட்டுமே முழு முதலீடாகக் கொண்டு இக்கேரக்டரை செதுக்கியிருக்கிறார் பிரபுதேவா. ஒரு அடியாளுக்கு உரித்தான உடல் மொழியில் அக்கதாபாத்திரத்திற்கு உயிரூட்டிருக்கிறார் பிரபுதேவா.

சம்யுக்தாவின் கேரக்டரையும் நாம் கண்டிப்பாக பாராட்டிட வேண்டும். கனமான கதாபாத்திரத்தை கனக்கச்சிதமாக செய்திருக்கிறார் சம்யுக்தா. நடனப்புயலை பார்க்க வைத்து நடனத்தில் டாப் ஸ்கோர் அடித்திருக்கிறார் சம்யுக்தா.

பாவப்பட்ட அம்மா கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டினையும் பெறுகிறார் ஈஸ்வரி ராவ். வலுவான கதாபாத்திரத்தை உணர்ந்து அதற்கு மேலும் வலு சேர்த்திருக்கிறார் ஈஸ்வரி.

யோகி பாபுவின் காமெடி காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கும்படியாக உள்ளது. மேலும், சத்ரு, பரணி, இமான் அண்ணாச்சி, மாரிமுத்து என அனைத்து நடிகர்களும் மீட்டருக்கு ஏற்றாற்போல் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டை வித்தியாசமான கோணத்தில் காண்பித்து அசர வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

சி சத்யாவின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைத்துள்ளன.. பின்னனி இசை கதையோடு பயணித்து, கதையோடு நம்மையும் பசை போட்டு ஓட்ட வைத்துள்ளார் சத்யா.

பிரபுதேவாவை இதுவரை பார்த்திராத கோணத்தில் காட்டியதற்காகவே இயக்குனர் ஹரி குமாரை வெகுவாக பாராட்டலாம். கனமான கதையை எடுத்து அதை வலு இழக்காமல் ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர்.

தேள் – வ(லு)லி கொண்ட கதை..

 

Facebook Comments

Related Articles

Back to top button