Spotlightவிமர்சனங்கள்

777 சார்லி – விமர்சனம் 3.5/5

றிமுக இயக்குனர் கிரண்ராஜ் இயக்கத்தில் ரக்‌ஷித் ஷெட்டி, சங்கீதா ஸ்ரீங்கேரி, பாபி சிம்ஹா மற்றும் சார்லி (நாய்) உள்ளிட்டவர்கள் நடித்திருக்கும் படம் தான் “777 சார்லி” . கன்னட மொழியில் உருவாகியிருக்கும் இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. கே ஜி எப் 2 படத்திற்கு பிறகு கன்னட திரை உலகில் இருந்து சற்று பிரம்மாண்டமாக வெளியீடாக வந்திருக்கிறது இப்படம்.

சார்லியின் பயணம்..

சிறுவயதிலேயே ஒரு விபத்தில் தனது குடும்பத்தை இழந்துவிடும் நாயகன் தர்மா (ரக்‌ஷித் ஷெட்டி), தான் உண்டு தான் வேலை உண்டு என்று, எந்த இடத்திலும் மற்றவருக்குச் சிரிப்பைக் கூட கொடுக்காத நபராக வாழ்ந்து வருகிறார்.

வேலைக்கு செல்வதும் வீட்டுக்கு வருவதுமாய் ஒரு இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் தர்மா.. இப்படியான இவரது வாழ்க்கையில் சார்லி என்ற பெண் நாய் நுழைகிறது. ஒரு வாரம் கட்டாயமாக சார்லியை பார்த்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார் தர்மா..

ஆரம்பத்தில் சார்லி மீது வெருப்பைக் காட்டும் தர்மா, அதன் பாசத்தையும் அன்பையும் போக போக புரிந்து கொள்கிறார். பின் சார்லியின் எல்லாமுமாக மாறுகிறார். இருவரும் ஒருவருக்கொருவர் பாசமாக இருக்கும் சமயத்தில், சார்லிக்கு கேன்சர் இருப்பது தெரிய வருகிறது தர்மாவிற்கு..

இதனால் உடைந்து போன தர்மா, சார்லிக்காக என்ன செய்தார் எந்த எல்லை வரை சென்றார் என்பதே படத்தின் மீதிக் கதை..

நாயகன் ரக்‌ஷித் ஷெட்டி யதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். எமோஷ்னல், அன்பு, பாசம் என அனைத்து இடத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். தமிழக இளைஞிகளின் மனதை வருடக்கூடியவராக தனது தோற்றத்தை கொடுத்திருக்கிறார் ரக்‌ஷித்.

நாயின் மீது வெறுப்பைக் காட்டும் போதாக இருக்கட்டும், அதன் மீது வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்டும் இடமாக இருக்கட்டும் பல இடங்களில் கண்களை குளமாக்கி விடுகிறார் ரக்‌ஷித்.

மற்றொரு நாயகன் தான் என்று தான் கூற வேண்டும் இந்த சார்லியை… பல படங்களில் நாயின் காட்சியை பார்த்திருந்தாலும், மற்ற படங்களை காட்டிலும் 100 மடங்கு அதிகமான ஈர்ப்பை கொடுத்திருக்கிறது இந்த சார்லி.

சின்ன சின்ன சேட்டைகள், சின்ன சின்ன எமோஷன் உள்ளிட்ட காட்சிகளை மிகவும் தத்ரூபமாக காண்பித்திருக்கிறார் இயக்குனர். வீட்டில் செல்ல பிராணிகளை வளர்ப்பவர்களின் மனதை எளிதில் இப்படம் கவர்ந்து விடும், பிராணிகளை வளர்க்காதவர்களை வளர்க்கத் தூண்டும் அளவிற்கும் இப்படம் தனது உயிரோட்டத்தை கொடுத்திருக்கிறது.

சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றி அசத்தியிருக்கிறார் பாபி சிம்ஹா. நடிகை சங்கீதாவின் அழகு மிகுந்த நடிப்பும் பாராட்டுக்குறியது.

ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை படத்திற்கு மேலும் பலமாக அமைந்துள்ளது. காட்சிப்பதிவில் கூடுதல் கவனம் கொண்டு படத்தினை எடுத்திருக்கிறார்கள் படக்குழுவினர்.

சார்லியின் ஒவ்வொரு அசைவையும் அணுஅணுவாக ரசித்து ரசித்து படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் எஸ் காஷ்யப்.

பல இடங்களில் உணர்ச்சி பொங்க, கண்களை குளமாக்க பெரிதும் காரணமாக இருந்திருப்பது நோபின் பாலின் பின்னணி இசை தான்.

டீ கடையில் வயதான தம்பதியரின் காதல், சிறு குழந்தையின் மழலை பேச்சு, டாக்டர் மற்றும் உதவியாளரின் டைமிங்க் காமெடி, என பல இடங்களில் இயக்குனரின் கலை வண்ணம் பேசப்படுவது பலம்.

ஒரு மனிதனுக்கும் ஒரு நாய்க்கும் இடையே நடக்கும் உயிரோட்டத்தை எந்த வித மாற்றமும் இல்லாமல் நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குனர் கிரண்ராஜ். புதுவிதமான உணர்ச்சி பொங்க ஒரு அனுபவத்தை கொடுத்து ”சார்லி”யை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். படத்தின் நீளத்தில் சற்று கவனம் செலுத்தியிருந்தால் சார்லி இன்னும் ரசனைக்கு ஏற்றதாய் இருந்திருக்கும்.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close