
வெப் என்ற திரைப்படத்தினை இயக்கிய இயக்குனர் ஹரூன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த 7/G திரைப்படம்.
இப்படத்தில், சோனியா அகர்வால், ஸ்மிருதி வெங்கட், சித்தார்த் விபின், சிநேகா குப்தா, சுப்ரமணியம் சிவா, கல்கி ராஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் கண்ணா. இசையமைத்திருக்கிறார் சித்தார்த் விபின்.
ட்ரீம் ஹவுஸ் சார்பில் ஹரூன் இப்படத்தினை தயாரித்திருக்கிறார்.
ஜூலை 5 முதல் இப்படம் திரைக்கு வருகிறது.
படத்தின் கதை மற்றும் விமர்சனத்தை பார்த்துவிடலாம்.
கதையின் நாயகியான ஸ்மிருதி வெங்கட், தனது கணவரோடு சேர்ந்து அடுக்குமாடி குடியிருப்பில் தனது கனவு வீடு ஒன்றை வாங்குகிறார். இந்த வீட்டின் எண் தான் 7/G.
இவர்களுக்கு 4 வயது மதிக்கத்தக்க மகன் இருக்கிறார். நாட்கள் ஓட, தான் இருக்கும் வீட்டில் அவ்வப்போது ஒரு சில மர்மங்கள் நடப்பதை உணர்கிறார் ஸ்மிருதி. இதனைத் தொடர்ந்து தனது தோழி ஒருவரிடம் இந்த விஷயத்தை கூற, மறுநாள் ஸ்மிருதியின் தோழி அவர்களது வீட்டிற்கு அழைத்து வருகிறார்.
அச்சமயம், அந்த வீட்டிற்குள் இருக்கும் அமானுஷ்யம் ஸ்மிருதியின் தோழியை விரட்டுகிறது. தொடர்ந்து தன்னை துன்புறுத்தும் அந்த அமானுஷ்யம் யார் என்பதை ஸ்மிருதி கண்டுபித்தாரா.?? எதற்காக அந்த வீட்டில் அந்த அமானுஷ்யம் இருக்கிறது.??? என்பதற்கான விடை தான் படத்தின் இரண்டாம் பாதி.
நாயகிகள் சோனியா அகர்வால் மற்றும் ஸ்மிருதி வெங்கட் இருவரும் கதைக்கு என்ன தேவையோ அதை அளவாக கொடுத்திருந்தனர். முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த இசையமைப்பாளர் சித்தார்த் விபின், தனது கேரக்டரின் வலு அறிந்து நன்றாகவே நடித்து அசத்தியிருக்கிறார்.
அடுத்தடுத்த காட்சிகள் என்ன நடக்கும் என்பதை படம் பார்க்கும் ரசிகர்கள் எளிதில் தெரிந்து கொள்ளும்படியாக கதை நகர்வதால், படத்தில் பெரிதான சுவாரஸ்யத்தை காண முடியவில்லை.
மேலும், ப்ளாஷ் பேக் காட்சிகளிலும் வலுவான காரணம் இருக்கும் என்று பார்த்தால், அதிலும் பெரிதான ஒரு காரணம் இல்லை.
பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு ஓகே ரகமாக இருக்கிறது. அமானுஷ்யம் தோன்றும் காட்சிகளில் மட்டும் மிரட்டலாக இருக்கிறது.
ஹாரர் பட விரும்பிகள் ஒருமுறை விசிட் அடிக்கலாம் என்று சொல்லிக் கொண்டு படத்தின் விமர்சனத்தை முடித்துக் கொள்ளலாம்..





