
மகாபாரத கதைகளை கேட்காதவர்கள், படிக்காதவர்களே இருக்க முடியாது. முந்தைய காலங்களில் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் இக்கதைகள் அனைவரின் மனதிலும் ஒரு ஆழமான காவியமாக பதிந்திருக்கும்.
இக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் குருக்ஷேத்திரம். இப்படத்தினை நாகண்ணா என்பவர் இயக்கியிருக்கிறார். கன்னடத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இப்படத்தினை கலைப்புலி எஸ் தாணு தமிழகமெங்கும் வெளியிடுகிறார். இன்று முதல் திரைக்கு வந்துள்ளது இப்படம்.
வழக்கமான மகாபாரத கதைதான் என்றாலும், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிகவும் நேர்த்தியாகவும், தெளிவாகவும், கச்சிதமாகவும் வடிவமைத்திருக்கிறார்கள் படக்குழுவினர்.
பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் நடக்கும் யுத்தம். இதில் தர்மம் வென்றதா அதர்மம் வென்றதா என்பதே படமாக கொடுத்திருக்கிறார்கள்.
படம் முழுவதும், கெளரவர்களின் ஒருவரான துரியோதனனை மையப்படுத்தியே கதை நகர்கிறது.
பீஷ்மராக பழம் பெரும் நடிகர் அம்பரீஷ் நடித்து அக்கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். பலம் வாய்ந்த துரியோதனனாக தர்ஷன் நடித்துள்ளார்.
கர்ணனாக அர்ஜுன் நடித்துள்ளார். மிகவும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், ரவிச்சந்திரன், நிகில் குமார், சோனுசூட், சிநேகா, ரவிஷங்கர், ஹரிப்பிரியா உள்ளிட்டவர்கள் கதாபாத்திரங்களாகவே மாறியுள்ளனர்.
படத்தின் மிகப்பெரிய பலம், நம்மை அக்காலத்திற்கே அழைத்துச் செல்லும் அளவிற்கு பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்பட்ட அற்புதமான கலை வடிவமைப்பு.
அரண்மனை காட்சிகளாக இருக்கட்டும், யுத்தம் நடக்கும் காட்சிகளாக இருக்கட்டும் அனைத்தையும் மிகவும் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
க்ளைமாக்ஸ் காட்சிகளில் நடைபெறும் துரியோதனுக்கும் பீமனுக்குமான கடாயுத சண்டைக் காட்சிகள் நம்மை பிரம்மிக்க வைக்கிறது.
ஹரி கிருஷ்ணா இசையில், பின்னனி இசை கதைக்கேற்ற இன்னதமான பயணம். ஜே வின்செண்ட் அவர்களின் ஒளிப்பதிவு காட்சியமைப்புகள் அனைத்தையும் மிகவும் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்திருக்கிறது.
பிரம்மாண்டமாக செட் அமைத்து பிரம்மிக்க வைத்தவர் ஆர்ட் இயக்குனர் கிரன் குமார் மன்னே.
விஷுவல் மற்றும் CG காட்சிகளும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.
இக்கால மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் நம்முடைய புராணக் கதைகளை பார்க்க ஓர் அறிய வாய்ப்பாகவே இப்படத்தை கருதலாம்.
குருக்ஷேத்ரம் – பிரம்மாண்ட படைப்பு…





