
லைகா தயாரிப்பில் கமல், ஷங்கர் இணைந்துள்ள படம் இந்தியன் 2.
கமலின் அரசியல் வருகை, ஆப்ரேஷன் உள்ளிட்ட பல பிரச்சினைகளால் சூட்டிங் தொடர்ந்து தாமதமானது.
தற்போது இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்காக பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈ.வி.பி.பிலிம் சிட்டியில் செட் அமைக்கும் பணிகள் நேற்றிரவு (புதன்கிழமை) நடைபெற்று வந்தன.
அப்போது, சுமார் 9.30 மணியளவில் எதிர்பாராத விதமாக, செட் அமைக்கும் பணியின்போது பயன்படுத்தப்பட்டு வந்த கிரேன் அறுந்து விழுந்துள்ளது.
பல அடி உயரத்தில் இருந்து விழுந்த கிரேனில் சிக்கி, 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அவர்களின் 3 பேர் தகவல்கள் கிடைத்துள்ளன. மது (29) சந்திரன் (60) மற்றும் கிருஷ்ணா (34) ஆகியோர் இறந்துள்ளனர்.
மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். அவர் 7 பேர் அருகில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து இந்தியன் 2 படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த துயர சம்பவத்திற்கு நடிகர் கமல்ஹாசன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்’ என்று கூறியுள்ளார்.





