Spotlightவிமர்சனங்கள்

கன்னி மாடம் – விமர்சனம் 3.5/5

றிமுக இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் ‘கன்னி மாடம்’.

என்ன தான் கூற வருகிறது இந்த ‘கன்னி மாடம்’ என்று பார்த்து விடலாம்..

தமிழ் சினிமாவில் அவ்வப்போது எட்டிப் பார்க்கும் ஆணவக் கொலை பற்றிய திரைப்படம் தான் என்றாலும், அந்த திரைப்படங்களில் இருந்து ’கன்னி மாடம்’ சற்று தனித்து நிற்கிறது.

கலப்பு திருமணம் செய்து கொண்ட ஜோடி விஷ்ணு ராமசாமி மற்றும் சாயா தேவி இருவரும் சென்னைக்கு வருகின்றனர். அங்கு, ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் இந்த ஜோடிக்கு ஆதரவு அளிக்கிறார்.

சிறிது நாட்களிலே ஒரு சாலை விபத்தில் விஷ்ணு ராமசாமி இறந்துவிட, தனிமைப்படுத்தப்பட்ட சாயா தேவிக்கு, ஸ்ரீராம் கார்த்திக் ஆதரவு அளிக்கிறார். அதன் பின் என்ன ஆனது..? ஸ்ரீராம் கார்த்திக்கின் அமைதிக்கு என்ன காரணம்..?? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

படத்தின் நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் சரியான தேர்வு. தனது கதாபாத்திரத்தை அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் மிகக் கச்சிதமாக அளந்து எடுத்தாற்போல் நடித்து அனைவரையும் அசத்தியிருக்கிறார்.

விஷ்ணு ராமசாமி, தனது கேரக்டரை பூர்த்தி செய்திருக்கிறார். சூப்பர் குட் சுப்ரமணிக்கு எழுந்து நின்று கைதட்டலாம். அதிலும், அவரது கடைசி காட்சியில் அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டார்.

ஆடுகளம் படத்திற்கு பிறகு நுருகதாஸ் அவர்களுக்கு மிகப்பெரும் பெயர் பெற்றுத் தரும் படமாக நிச்சயம் ‘கன்னி மாடம்’ இருக்கும். அவரது காமெடிக்கு, நிச்சயம் திரையரங்கில் சிரிப்பலைகள் பறக்கும்.

ஒட்டுமொத்த படத்தையும் தனது கண்களால் தாங்கி பிடித்து சுமந்து செல்கிறார் நாயகி ‘சாயா தேவி’. முதல் காட்சியிலேயே தனது பார்வையாலும், பாவணையாலும் ரசிகர்களை கட்டி போட்டு வைத்துவிட்டார் சாயா தேவி. படத்தின் இடைவேளை காட்சியாக இருக்கட்டும், க்ளைமாக்ஸ் காட்சியாக இருக்கட்டும் இரண்டு இடத்திலும் சாயா தேவி அசத்தியிருக்கிறார்.

இரண்டாம் பாதியில் அடியெடுத்து வைக்கும் ப்ரியா ரோபோ ஷங்கர், முதலில் வைலண்டாக வந்தாலும் பின் சைலண்டாக மாறி கதை நகர கை கொடுத்துள்ளார்.

வலீனா பிரின்சஸ், ஸ்ரீராம் கார்த்திக் மீது ஒரு தலை காதலியாக வந்து செல்கிறார். இவரும் அழகுதான், இவரது ஒரு தலை காதலும் அழகு தான்.

இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ள ஹரீஷ் சாய் இசையில் பாடல்கள் ஓகே ரகமாக இருந்தாலும், பின்னனி இசையில் அசத்தியுள்ளார். படத்திற்கு சற்று பலம் பின்னனி இசையை கூட சொல்லலாம். பல இடங்களில் மனதை வருடி கண்களில் கண்ணீரை எட்டி பார்க்க வைத்து விட்டார் இசையமைப்பாளர். நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார்.

போஸ் வெங்கட், தான் ஒரு சிறந்த படைப்பாளி(இயக்குனர்) என்பதை இப்படத்தின் மூலம் அனைத்து மக்களுக்கும் தெரிவித்திருக்கிறார். மக்களின் மனதையும் வென்றிருக்கிறார்.

தனது முதல் படத்திலேயே ஆணவக் கொலையை பற்றி பேசிய இவரது தைரியத்திற்கே முதல் சல்யூட் வைக்கலாம். ஆணவக் கொலை என்ற பயங்கரவாதத்தால் தமிழகம் எப்படி சீரழிந்து இருக்கிறது என்பதை கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் போஸ் வெங்கட்.

மிகுந்த வலி நிறைந்த படைப்பாக கொடுத்து, கடைசி 20 நிமிடங்கள் மனதை கனக்க வைத்து விட்டார் இயக்குனர்.

விழிப்புணர்வுள்ள, அதே சமயம் சமூகத்திற்கு தேவையான கருத்துகளை கொடுக்ககூடிய இயக்குனர்கள் ஒரு சிலரே இப்படிப்பட்ட கதையை தேர்வு செய்வர். அந்த வரிசையில் போஸ் வெங்கட் அவர்களும் இணைந்துள்ளார்.

கன்னி மாடம் – ஜாதி வெறி பிடித்த ஜந்துகளுக்கான பாடம்… வலிகள் நிறைந்தது.!

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close