Spotlightசினிமா

ரோமியோ விமர்சனம் 3.25/5

இயக்கம்: விநாயக் வைத்தியநாதன்

நடிகர்கள்: விஜய் ஆண்டனி, மிர்னாலினி ரவி, யோகிபாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய்

ஒளிப்பதிவு: ஃபரூக் J. பாஷா

படத்தொகுப்பு: விஜய் ஆண்டனி

இசை: பரத் தனசேகர்

தயாரிப்பாளர்: மீரா விஜய் ஆண்டனி

தயாரிப்பு: விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்

கதைப்படி,

சிங்கப்பூரில் பணி புரியும் விஜய் ஆண்டனி, தனது இளமைக் காலத்திலேயே பணிக்குச் சென்று, வீட்டின் கடனை அடைத்துப் பொருளாதார நிலையை உயர்த்துகிறார். முப்பதுகளைக் கடந்துவிட்ட அவருக்குத் திருமணம் செய்யப் பெற்றோர்கள் நினைக்கின்றனர்.

ஒரு பெண்ணைப் பார்த்துப் பிடித்துப் போய்க் காதல் வந்தால்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார் விஜய் ஆண்டனி. அதன்படி, மிர்னாலினி ரவியைப் பார்த்ததும் அவருக்குப் பிடித்துப் போய்விடுகிறது.

சினிமாவில் கதாநாயகியாகவேண்டும் என்ற ஆசையில் இருக்கும் மிரனாலினி ரவி, தந்தையான தலைவாசல் விஜய்க்கு அஞ்சி, விஜய் ஆண்டனியைக் கல்யாணம் செய்து கொள்கிறார்.

தனது கனவைச் சொல்லி விஜய் ஆண்டனியிடம் விவாகரத்துக் கேட்கிறார் மிர்னாலினி ரவி. விவாகரத்துக் கிடைக்க ஆறு மாதங்களாவது ஆகும், அதற்குள் தனது மனைவியினை ஈர்த்துவிட வேண்டுமென ரோமியோ அவதாரம் எடுக்கிறார் விஜய் ஆண்டனி.

ரோமியோவாக மாறும் விஜய் ஆண்டனியால், மிர்னாலினி ரவியின் காதலைப் பெற முடிந்ததா என்பதே படத்தின் மீதிக் கதை.
தனக்கு ஏற்றாற்போல் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பதில் வல்லவர் விஜய் ஆண்டனி. இப்படத்திலும், அதே போல் அவருக்குத் தகுந்தபடி கதையைத் தேர்ந்தெஉது அசத்தியிருக்கிறார். குறிப்பாக எமோஷ்னல் காட்சிகளில் நிறைவான நடிப்பை வழங்கியுள்ளார் விஜய் ஆண்டனி.

நாயகியாக வேண்டுமென்ற கனவை உறுதியோடு பிரதிபலிக்கும் காட்சிகளிலும் காட்டியுள்ள நடிப்பை, விஜய் ஆண்டனியுடனான காட்சிகளில் மிர்னாலினி ரவி வழங்கவில்லை. அதற்கு கதாபாத்திர வார்ப்பில் உள்ள குறையே காரணம்.

விஜய் ஆண்டனியின் காதலுக்கு ஆலோசனை சொல்பவராக யோகிபாபு நடித்துள்ளார். விஜய் ஆண்டனியின் எண்ணிலிருந்து அழைத்தால், மிர்னாலினி ரவி அழைப்பைத் துண்டிக்கிறார் என்பதால், மற்றொரு எண்ணில் இருந்து கூப்பிடுமாறு யோசனை தருகிறார். நகைச்சுவைக்குப் பெரிதாக உதவாவிட்டாலும், யோகிபாபுவின் அந்த யோசனையே படத்தில் திருப்பம் உண்டாவதற்கு உதவியுள்ளது.
கதையின் கரு பெரிதான தாக்கத்தை ஏற்படுத்தாதல், கதைக்குள் நம்மால் பயணிக்க முடியாமல் போய் விடுகிறது.

விஜய் ஆண்டனி, தன் சிறு வயதில் தங்கையைப் பிரிந்து விடுகிறார். அக்கிளைக்கதை, விஜய் ஆண்டனி – மிர்னாலினி ரவி காதல் கதையில் அழகாகப் பொருத்தியுள்ளார் இயக்குநர். எனினும் அண்ணனும் தங்கையும் சந்திக்கும்பொழுது, இயல்பாக வந்திருக்கவேண்டிய சென்ட்டிமென்ட் காட்சியை ஏனோதானோவென்று முடித்து, திரைக்கதையில் சமரசம் செய்துள்ளதைத் தவிர்த்திருக்கலாம்.

வயிற்றைப் பதம் பார்க்கும் நகைச்சுவைக் காட்சிகள் இல்லாவிட்டாலும், கதையின் போக்கே புன்னகையை வர வைக்கும் மெலிதான நகைச்சுவைக்கு உத்திரவாதமளிக்கிறது.

ரோமியோ – முதிர்ச்சியான காதலன்.

Facebook Comments

Related Articles

Back to top button