
இயக்கம்: ஜே எஸ் கே
நடிகர்கள்: பாலாஜி முருகதாஸ். சாந்தினி, ரச்சிதா, சாக்ஷி அகர்வால், காயத்ரி சென்,
ஒளிப்பதிவு: சதீஷ்
இசை: டி கே
தயாரிப்பு: ஜே எஸ் கே
கதைப்படி,
Physiotherapy மருத்துவராக தனியாக க்ளீனிக் ஒன்றை நடத்தி வந்தவர் காசி (பாலாஜி முருகதாஸ்). தனது மகனைக் காணவில்லை என்று காசியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளிக்க, இதை விசாரிக்கத் துவங்குகிறார் இன்ஸ்பெக்டர் ஜே எஸ் கே.
வழக்கு விசாரணையை தீவிரமாக்குகிறார் ஜே எஸ் கே. விசாரித்த இடங்களிலெல்லாம், காசி குறித்து நல்லதையே சொல்கின்றனர்.
இந்த சூழலில், காசியை தான்தான் கொன்றதாக பெரியவர் ஒருவர் போலீஸிடம் சரணடைகிறார். பின், காசி உயிரோட இருப்பதாகவும் அவர் தங்களிடம் போனில் பேசியதாகவும் காசியின் பெற்றோர் போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.
தொலைந்து போன காசியின் பின்னால் இருக்கும் மர்மம் தான் என்ன.?? அவரின் மற்றொரு முகம் என்ன.?? என்பதே படத்தின் மீதிக் கதை.
சில வருடங்களுக்கு முன் தமிழகத்தையே உலுக்கிய பெயர் தான் காசி. நாகர்கோவிலில் பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய காசி என்பவனின் கதையை தான் எடுத்திருக்கிறார் இயக்குனரான ஜே எஸ் கே.

படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகர் பாலாஜி முருகதஸ். ரொமாண்டிக் காட்சிகளில் கச்சிதமாக நடித்திருக்கும் பாலாஜி, மற்ற காட்சிகளில் சற்று சறுக்கியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதென்றால், அதற்கான மெனக்கெடலை சற்று கொடுத்திருந்திருக்கலாமே பாலாஜி சார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் ஜே எஸ் கே, மிடுக்காக தோன்றியிருந்தாலும், ஒரு சில இடங்களில் அசால்டாக காட்சிகளை கடத்தியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
படத்தின் நான்கு தூண்களாக நடித்தவர்கள் தான் கதாநாயகிகளான சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், ரச்சிதா மஹாலட்சுமி மற்றும் காயத்ரி ஷான்.
படத்தின் இரண்டாம் பாதியில் இவர்கள் நால்வரின் கதாபாத்திரமும் கதையை அடுத்தத் தளத்திற்கு எடுத்துச் சென்று விட்டது.
ஒரு பெண் எந்த இடத்தில் தவறான ஆண் மகனிடம் விழுந்து போகிறாள் என்பதை மிகவும் இயல்பான நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார்கள் இந்த நான்கு கதையின் நாயகிகளும்.
சரியான ஒரு கதையை,
சரியான ஒரு தருணத்தில்,
சரியாக வேண்டிய ஒரு சமூகத்தில்
பேசுவதற்கு கூட ஒரு தைரியம் வேண்டும். அதை தைரியமாக வெளிச்சம் போட்டு மக்களிடத்தில் கொண்டு சேர்த்திருக்கிறார் இயக்குனர் ஜே எஸ் கே. குரூர எண்ணம் கொண்ட ஆண்களிடம் பெண்கள் என்ன மாதிரியாக இருக்க வேண்டும் என்பதை ஒரு விழிப்புணர்வு படமாக இப்படத்தை இயக்குனர் ஜே எஸ் கே படைத்திருக்கிறார்.
அனைத்து பெண்களும் பெண்களை பெற்ற பெற்றோர்களும் இப்படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும்.
அனைவரும் தங்களது நடிப்பிலும் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாமே என்ற எண்ணம் நமக்குள் எழாமல் இல்லை.
பின்னணி இசை மற்றும் பாடல்கள் இரண்டுமே படத்திற்கு பலமாக வந்து நிற்கிறது. எஸ் கே ஜீவாவின் வசனங்கள் கைதட்ட வைத்துள்ளன.
சதீஷின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக காட்டியிருக்கிறது.
எழுந்து நின்று கைதட்டல் கொடுக்கும் அளவிற்கான ஒரு தரமான க்ளைமாக்ஸ் காட்சியை வைத்திருந்தது படத்திற்கு மிகப்பெரும் பலம்..
ஃபயர் படம் பார்ப்பவர்களின் மனதில் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
மொத்தத்தில்,
ஃபயர் – சமூக விழிப்புணர்வு படைப்பு..





